பெரும்பாலானவர்களுக்கு இப்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவு (AI) நெருங்கிய தோழமையாக மாறியிருக்கிறது. ஆனால், அதன் உலகளாவிய செயல்பாடு பூமியின் மிக முக்கியமான இயற்கை வளங்களில் ஒன்றான தண்ணீருடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. AI இன் தரவு மையங்களை (Databases) இயக்குவது முதல் ஸ்மார்ட் நீர் மேலாண்மை அமைப்புகளை இயக்குவது வரை (smart water management systems) உலகளவில் AI தொழில்நுட்பங்களை நிலைநிறுத்துவதில் நீர் வியக்கத்தக்க வகையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எப்படி உதவுகிறது?
உலகின் மொத்த தரவுகளை உள்ளடக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் AI உள்கட்டமைப்பு மையத்தில் உருவாகும் அதிக வெப்பத்தை (overheating) தடுக்க நிலையான குளிரூட்டல் தேவைப்படுகிறது. இந்த வசதிகள் பெரும்பாலும் நீர் சார்ந்த குளிரூட்டும் அமைப்புகளை தான் சார்ந்துள்ளன. அதற்காக ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான லிட்டர் தண்ணீரை பயன்படுத்தப்படுகின்றன.
வரும்காலங்களில் AI இன் தேவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்போது, குறிப்பாக ஜெனரேட்டிவ் AI (Generative) போன்ற உலகின் அனைத்து மொழி மாதிரிகளை சேகரித்து அதற்கு தகுந்தாற்போல் தரவுகளைச் சேகரிப்பதால், ஆற்றல் (Energy) தேவை அதிகரிக்கும் பட்சத்தில், அதற்கு இணையாக நீர் தேவையும் அதிகரிக்கும்.
எனவே, நீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் பகுதிகளில் AI இன் நிலைத்தன்மையில் (sustainability) சில சவால்களை ஏற்படுத்தலாம். காரணம் அதில் வரும் வெப்பத்தை வெளியேற்ற தேவையான நீர் அணுகல் இல்லை என்றால் AI தொடர்புடைய செயல்பாடுகளில் பல குறுக்கீடுகளை (interruptions) எதிர்கொள்ளக்கூடும். ஆக தண்ணீர் AI ஐ காப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒருபுறம் AI ஐ காப்பதில் நீர் முக்கிய பங்குவகித்தாலும், அதே AI தான் உலகின் நீர் மேலாண்மையிலும் (water management) பல புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. AI இன் இயந்திர கற்றல் வழிமுறைகள் (Machine learning algorithms) மூலம் இப்போது நீர் தேவையை திறம்பட கணிக்கின்றன.
எடுத்துக்காட்டிற்கு, நீர் போகும் இடங்களில் ஏற்படும் கசிவுகளைக் கண்டறிவது, நீர்ப்பாசனத்தை (irrigation) மேம்படுத்துவது, ஏற்படும் வெள்ளத்தை முன்கூட்டியே முன்னறிவிப்பது என காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த AI இன் பயன்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
ஆக, நீர் என்பது இப்போது உலகில் உள்ள உயிர்களை மட்டும் காப்பது அல்லாமல் உலகின் ஒட்டுமொத்த AI செயலமைப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் எல்லைகளை நாம் அதிகரிக்கும்போது அதற்கு தகுந்த நிலையான நீர் பயன்பாட்டையும் உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் நமது உலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் இந்த டிஜிட்டல் மூளையை (AI) நிலையாகவும் மற்றும் சிறப்பாகவும் உபயோகிக்க முடியும்.