

கூரான குண்டு ஊசியையோ, ஊசியையோ துணிமணிகளிலோ அல்லது அட்டை பேப்பர்களிலோ குத்தும் பொழுது அது எளிதாக இறங்கி விடுவதை காணலாம். அது ஏன் இறங்குகிறது என்று தெரியுமா? அதேபோல் மழுங்கலான ஆணியை செலுத்தினால் மிகவும் கடினமாக இருக்கிறது. மழுங்கிய கத்தியை கொண்டு காய்கறிகளை வெட்டினால் அவ்வளவு எளிமையாக வெட்ட முடிவதில்லை. 'மிகவும் கடினமாக இருக்கிறதே ஏன்?' என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
காரணம் இதுதான் கூரான ஊசியை (Sharp object) செலுத்தும் பொழுது முழு சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால் மழுங்கலான ஆணியில் முனையின் பரப்பின் மீது செயல்பட வேண்டி இருக்கிறது. அதனால் தான் அதே சக்தியை செலுத்தினாலும் மழுங்கலான ஆணியை விட கூரான ஊசியை உபயோகிக்கும் போது அதிக அழுத்தம் உண்டாகிறது.
ஒரு சக்தியின் செயல் ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவி உள்ளதா? ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு பரப்பின் மீது பரவி உள்ளதா என்பவற்றைச் சார்ந்து இருக்கிறது.
இப்போது பனிச்சறுக்கில் நாம் நடக்க வேண்டி இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிய வேண்டும். அப்பொழுதுதான் அவை நம்மை பொலபொலப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்லும். அவை இல்லாவிட்டால் நாம் மண்ணில் புதையுண்டு அழுந்தி போய்விட நேரிடும். ஏன் அப்படி என்றால் அந்த மட்டைகளை போட்டுக் கொள்ளும் போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவி உள்ளது.
அந்த மட்டைகளின் பரப்பு நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் மட்டைகள் அணிந்திருக்கும் போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம் அவை இல்லாமல் இருக்கும் போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும். அதனால் பணிச்சறுக்கு மட்டைகளை அணிந்து கொண்டால்தான் வெண்பனி நம்மை தாங்கும். அவை இல்லாவிட்டால் பணியினுள் நாம் அழுந்த வேண்டியதுதான்.
இப்படித்தான் சதுப்பு நிலங்களில் உபயோகிக்கப்படும் குதிரைகளின் கால்களுக்கு அதிகமான பரப்பளவு இருக்கும் படியா தனிமுறையில் லாடம் கட்டுகிறார்கள். அப்போது ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பின் மீது செலுத்தப்படும் அழுத்தம் குறைவாய் இருக்கும். மக்களும் சதுப்புவெளி அல்லது மெல்லிய பனிக்கட்டி படலத்தை கடக்கையில் தாழ்ந்து செல்வதற்கும் அதுதான் காரணமாக இருக்கிறது.
இதனால் சதுப்பு நிலங்களையும் மணல் பரப்புகளையும் கடப்பது எளிதாக இருக்கிறது. அவைகள் அதிக அளவு தாங்கும் பரப்பு இருப்பதினால் தான் இந்த அணுகூலம் கிடைக்கிறது. கூரான ஊசியிலோ இதற்கு எதிரிடையான அனுகூலம் உள்ளது.
இப்படி அழுத்தம், சக்தி அதன் பரப்பு என்று அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இவை அனைத்திலிருந்து தெரிவது என்னவென்றால், கூர்முனைப் பொருட்களை துளைப்பதற்கு காரணம் சத்தி செயல்படும் பரப்பின் அளவு மிக மிக சிறியதாக இருப்பது தான். இதனால் தான் மழுங்கிப் போன கத்தியை விட கூரான கத்தியினால் நன்றாக வெட்ட முடிகிறது.
கத்தி விளிம்பின் சிறிய அளவு பரப்பின் மீது கத்தி ஒருங்கே குவிந்து செயல்படுகிறது.
ஆகவே, சுருங்கச் சொன்னால் கூரிய கருவிகள் நன்றாகத் துளைப்பதற்கும், வெட்டுவதற்கும் காரணம் அவற்றின் முனைகளில் மீதும், விளிம்புகளின் மீதும் மிகுதியான அழுத்தம் ஒருங்கே குவிந்து செயல்படுவது தான்.