ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் ஒரு அற்புதமான நிகழ்வு. அந்த நிகழ்வின் சான்றாக, குழந்தையுடன் இணைந்திருக்கும் தொப்புள்கொடி என்ற அபூர்வமான இணைப்பு இருக்கிறது. சமீப காலமாக தொப்புள்கொடியை சேமித்து வைப்பது என்ற நடைமுறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இது வெறும் ஒரு ஃபேஷன் மட்டும் அல்ல, இதில் அறிவியல் ரீதியான பல நன்மைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
தொப்புள்கொடி சேமிப்பு: தொப்புள்கொடி என்பது கருப்பைக்குள் வளரும் குழந்தையை தாயுடன் இணைக்கும் ஒரு கருவியாகும். இது குழந்தைக்கு ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கழிவு பொருட்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. குழந்தை பிறந்த பிறகு தொப்புள்கொடி வெட்டி எடுக்கப்பட்டுவிடும். பின்னர், அந்த தொப்புள் கொடியை குறிப்பிட்ட முறையில் செயல்படுத்தி எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் பாதுகாத்து வைப்பார்கள்.
தொப்புள்கொடியை சேமிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தொப்புள் கொடியை சேகரித்து, அதில் உள்ள ஸ்டெம் செல்களைப் பிரித்து குறைந்த வெப்பநிலையில் பாதுகாத்து வைக்கும்.
ஏன் சேமிக்கப்படுகிறது?
தொப்புள் கொடியில் ஸ்டெம் செல்கள் உள்ளன. இந்த ஸ்டெம் செல்கள் பல வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக ரத்த புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க ஸ்டெம் செல்கள் பயன்படுத்தப்படலாம். குழந்தைக்கு எதிர்காலத்தில் ஏதேனும் நோய் ஏற்பட்டால், சேமித்து வைக்கப்பட்ட ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கலாம். சேமித்து வைக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் அந்த குழந்தைக்கு மட்டுமே பொருந்தும். எனவே, நிராகரிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு.
ஆனால், தொப்புள் கொடியை சேமிப்பது ஒரு விலை உயர்ந்த செயல்முறையாகும். இதை அனைவராலும் செய்ய முடியாது. மேலும், தொப்புள்கொடி ஸ்டெம் செல் சிகிச்சை பற்றிய ஆராய்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை. சேமித்து வைக்கப்பட்ட ஸ்டெம்சல்கள் எவ்வளவு காலம் பாதுகாப்பாக இருக்கும் என்பது பற்றிய உறுதியான தகவல்களும் இல்லை.
தொப்புள் கொடியை சேமிப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவதான். நீங்கள் உங்கள் குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு இவற்றை செய்ய விரும்பினால் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று இதில் முதலீடு செய்வது நல்லது. தொப்புள் கொடியை சேமிப்பது என்பது உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடாகும். உங்களுக்கு அதற்கான பொருளாதார வசதி இருக்கிறது எனில் தாராளமாக செய்யலாம்.