

கிராக்கர் (Cracker) எனப்படும் பிஸ்கட்டுகளை (biscuit) நீங்கள் சாப்பிடும்போது, அதன் மேற்பரப்பில் சீராக இருக்கும் அந்தச் சின்னச் சின்னத் துளைகளை எப்போதாவது கவனித்ததுண்டா? அது ஒரு பெரிய ரகசியம். அதிலும் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. இந்தப் பிஸ்கட்டின் (biscuit) சுவை, வடிவம் மற்றும் மொறுமொறுப்புக்கு (Crispness) பின்னால் அந்த ரகசியம் ஒளிந்திருக்கிறது.
நீங்கள் நினைப்பதுபோல் இது அலங்காரம் அல்ல. இவை 'டாகர்ஸ் (Dockers)' அல்லது 'டாகிங் துளைகள் (Docking Holes)' என்று அழைக்கப்படுகின்றன.
கிராக்கர் (Cracker) எனப்படும் பிஸ்கட்டுகளில் சிறிய துளைகள் இருப்பதற்கான காரணங்கள்:
1. பிஸ்கட் (biscuit) மாவானது (Dough), ரொட்டி அல்லது கேக் மாவைப்போல உப்பலாக இல்லாமல், தட்டையாகவும் மொறுமொறுப்பாகவும் இருக்க வேண்டும். மாவை அதிக வெப்பத்தில் அடுப்பில் வைக்கும்போது, மாவில் உள்ள ஈரப்பதம் நீராவி (Steam)யாக மாறும்.
இந்த நீராவி வெளியேற வழி இல்லாவிட்டால், அது உள்ளேயே அடைபட்டு காற்று குமிழ்களை (Air Bubbles) உருவாக்கும். இதனால் பிஸ்கட் சீரற்ற வடிவில் உப்பி, ஒரு சிறிய தலையணை (Pillow) போல மாறிவிடும். இந்தத் துளைகள், அந்த நீராவி மற்றும் காற்று குமிழ்கள் வெளியேற ஒரு வழியாக செயல்படுகின்றன. இதனால் பிஸ்கட்கள் தட்டையான, சீரான வடிவத்தைப் பெறுகின்றன.
2. கிராக்கர்கள் மிக மெல்லியதாக இருக்கும். அடுப்பின் வெப்பம் ஒரே சீராக அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டியது அவசியம். துளைகள் இருக்கும்போது, வெப்பம் மாவு முழுவதும் சமமாகப் பரவ உதவுகிறது. துளைகள் இல்லையென்றால், பிஸ்கட்டின் ஓரங்கள் கருகி, மையப் பகுதி வேகாமல் இருக்கும் வாய்ப்பு உண்டு.
3. இந்த 'டாக்கிங்' செயல்முறை, பிஸ்கட்டின் மொறுமொறுப்பான அமைப்பையும் (Crunchy Texture) உறுதி செய்கிறது. துளைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இடைவெளி மிகவும் முக்கியம்.
எப்படி துளைகள் உருவாக்கப்படுகின்றன?
கிராக்கர் தயாரிக்கும் ஆலைகளில், மாவை வெட்டுவதற்கு முன், ஒரு சிறப்பு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்திற்கு 'டாக்கர் ரோலர் (Docker Roller)' என்று பெயர்.
இந்த ரோலர் பல சிறிய ஊசிகளைக் கொண்டிருக்கும். இது ஒரே நேரத்தில் மாவு முழுவதும் துல்லியமான இடைவெளியில் இந்தத் துளைகளை உருவாக்குகிறது.
இந்த நுட்பம் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பகாலத்தில் நீண்ட கடல் பயணங்களின்போது ராணுவ வீரர்களுக்கும் மாலுமிகளுக்கும் வழங்கப்பட்ட 'ஹார்ட் டாக் (Hardtack)' என்ற உலர் ரொட்டியைத் தயாரிக்கவும் இந்தத் துளையிடும் முறை பயன்படுத்தப்பட்டது.
ஆகவே, அடுத்த முறை நீங்கள் ஒரு கிராக்கரை எடுக்கும்போது, அந்தச் சிறிய துளைகள் வெறும் அழகுக்காக அல்ல; அது ஒரு மொறுமொறுப்பான, பிஸ்கட் கிடைக்க உதவுகிறது என்பதை நினைவில் கொள்ளலாமே!
