நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன விபத்துகளால் பலர் உயிரிழக்கும் நிகழ்வுகள் சமீப நாட்களில் அதிகரித்து வரு கின்றன.இத்தகைய சாலை விபத்துகளுக்கு அதிவேகம் , கவனக்குறைவு ஆகியவற்றைத் தாண்டிய முக்கிய காரணம் கார் டயர்கள் வெடிப்பது ஆகும்.
விலையுயர்ந்த சொகுசு கார், சாதாரண கார் என்ற வேறுபாடு ஏதுமில்லாமல் நிகழும் பெரும்பாலான விபத்துக் களில் காரின் டயர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது பலரும் அறியாதது!
எந்த ஒரு வாகனத்தையும் சாலையுடன் தொடர்பு படுத்துவது அதன் டயர்கள்தான். ஒரு காரில் என்ஜினிற்கு இணையாக உழைக்கக்கூடியவை டயர்களே ஆகும். ஆனால் என்ஜினுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை டயருக்கும் கொடுத்து அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே .
கார் டயர்களில் சரியாக காற்று நிரப்புவதும், டயரை முறையாக பராமரிப்பதுமே, காரின் சீரான மைலேஜை தருவது மட்டுமின்றி உங்களைப் பேராபத்திலிருந்து காக்கும் என்பதை மறவாதீர்கள்!
சாலையில் வேகமாகப் பயணிக்கையில் டயர்களின் உராய்வு மற்றும் பிரேக்கைத் தேய்ப்பதால் ஏற்படும் வெப்பம் காரணமாக டயர்களுக்குள் காற்று விரிவடை வதால் டயரின் வெப்பநிலை உயர்கிறது. வெப்பநிலை உயர்வு காரணமாக டயரில் இருக்கும் காற்றின் அழுத்த மும் கிட்டத்தட்ட இருமடங்கு வரை உயர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டயர்களில் அதிகக் காற்றைவிட குறைந்த காற்று இருப்பது தான் டயருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது. குறிப்பாக கோடைக்காலங்களில் குறைந்த காற்றழுத்தம் உள்ள டயர்கள், வெப்பம் மற்றும் அழுத்தம் வேகமாக அதிகரிப்பதால், முன்னறிவிப்பின்றி வெடிக்கும்.
வாகனத்தின் நான்கு டயர்களில் ஏதேனும் ஒன்றில் காற்றழுத்தம் சரியான அளவில் இல்லையென்றாலும் கூட, வாகனத்தின் நிலைத்தன்மை பாதிக்கும், சஸ்பென்ஷனிலஅழுத்தத்தை ஏற்படுத்தும். இது வண்டியின்
ஸ்டீயரிங் ரெஸ்பான்ஸை பாதித்து வண்டியைக் கையாளுவதில் சிக்கல்களை உண்டாக்கும்.
காற்றழுத்தம் என்பது டயருக்குள் நிரம்பிய காற்றின் அளவைக் குறிக்கும். இந்த அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு பவுண்டுகளில் (PSI) அளவிடப்படுகிறது. சரியான காற்ற ழுத்தம் என்பது உங்கள் காரின் தயாரிப்பு, மாடல் மற்றும் டயர்களின் அளவைப் பொறுத்து மாறுபடும். எப்போதும் காரின் Manualல் பரிந்துரைக்கப்பட்ட குறியீட்டு அளவை பின் பற்றுவதே மிகவும் சரியானது.
பொதுவாக, பெரும்பாலான கார்களின் டயர்களில் காற்றழுத்தம் 30 முதல் 35PSI ஆக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால்பலர் அறியாமையால் PSI குறியீட்டு அளவை விட அதிகமான காற்றை டயர்களில் நிரப்புகிறார்கள். இவ்வாறு குறியீட்டு அளவைவிட அதிகமாக நிரப்புவது உயிருக்கு ஆபத்து தரக்கூடியதாகும். காற்று நிரப்புவதில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் கொள்வதும், நமது உயிர்பாதுகாப்பு தொடர்புடையது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, நீண்ட தூரப் பயணத்தின்போது டிரைவர்களுக்கு ஓய்வு தேவையோ இல்லையோ, காருக்கும் டயருக்கும் ஓய்வு தேவை. குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது 10 நிமிடங்கள் வண்டிக்கு ஓய்வு தருவதால் டயர் வெப்பமடைவதைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
உங்கள் காரை நீங்கள் எவ்வளவு தூரம் ஓட்டினீர்கள் என்பதை விட டயர்களின் வயதைப் பொறுத்தே அதன் தரம் நிர்ணயிக்கப்படும்.
சராசரியாக டயர்களின் ஆயுட்காலம் 4 முதல் 6 ஆண்டுகள்வரை மட்டுமே. காரை நாம் தொடர்ந்து பயன்படுத்தாவிட்டாலும், டயர்கள் பார்க்க புதிது போல் தோன்றினாலும், அதில் உள்ள பட்டன்கள் தேய்மானம் அடையாமல் இருந்தாலும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்குப் பிறகு டயர்களை மாற்றுவதே சிறந்தது .
குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்பாக டயரின் காற்றழுத்தத்தை பரிசோதிப்பது போல் டயரில் உள்ள வெடிப்புகளையும் சரிப்பார்ப்பது அவசியம்.
டயர்களில் வீக்கம், விரிசல், சேதம் போன்ற ஏதேனும் குறைகளைக் காண நேர்ந்தால், எந்தவொரு சமரசமும் இன்றி அவற்றை மாற்றி கொண்டு பயணத்தை மேற்கொள்வதே சிறந்தது.
மேலும், பெரும்பாலானவர்கள் காற்றின் அழுத்தம் குறைந்து டயர் தொய்வடையத் தொடங்கும் போது மட்டுமே காற்று பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதை விடுத்து ஒவ்வொரு பயணத்திற்கு முன்பும் டயர் அழுத்தத்தை சரிபார்க்கும் பழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால், அது உங்களை பல தொந்தரவுகள் மற்றும் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றும்.
எனவே, எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்க முதன்மையான வழி டயரில் காற்றழுத்தத்தை அவ்வப்போது கண் காணித்து கொண்டே இருப்பதுதான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு வண்டியிலும் காற்றழுத்தக் கண்காணிப்புக் கருவியும் (Pressuregauge) போர்ட்டபிள் டயர் இன்ஃப்ளேட்டர் ஒன்றையும் வைத்துக் கொள்வது கட்டாயத் தேவையாகும்.