போனில் 'ஹலோ' சொன்னா பேங்க் அக்கவுண்ட் காலியாகுமா? உஷார் ரிப்போர்ட்!

Scam
Scam
Published on

காலங்காலமாக போன் மணி அடித்தவுடனே நாம் அனிச்சையாகச் சொல்லும் முதல் வார்த்தை "ஹலோ". ஆனால், இனிமேல் அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தால், அதுவே இப்போது திருடர்களுக்குக் கைகொடுக்கும் ஆயுதமாக மாறிவிட்டது. 

ஆம், 'செயற்கை நுண்ணறிவு' எனப்படும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இப்போது புது விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. உங்கள் ஏடிஎம் பின் நம்பரோ, ஓடிபி-யோ (OTP) கூடத் தேவையில்லை; உங்கள் குரல் ஒன்று மட்டுமே போதும், உங்கள் மொத்தப் பணத்தையும் சுருட்டிவிடுவார்கள் என்று எச்சரிக்கிறார்கள் சைபர் கிரைம் நிபுணர்கள். அது எப்படிச் சாத்தியம்? ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

ஹைதராபாத் பாட்டிக்கு நேர்ந்த சோகம்!

சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி ஒருவருக்கு, வெளிநாட்டில் இருக்கும் தன் உறவினர் எண்ணிலிருந்து ஒரு மெசேஜ் வந்தது. அவசரமாகப் பணம் தேவைப்படுவதாக அதில் கூறப்பட்டிருந்தது. பாட்டிக்கு லேசாகச் சந்தேகம் வந்து, அந்த நம்பருக்கு போன் செய்தார். எதிர்முனையில் பேசியது அச்சு அசல் அவருடைய உறவினரின் குரலேதான், எந்த வித்தியாசமும் தெரியவில்லை. 

"இது நம்ம ஆளுதான்" என்று நம்பிய பாட்டி, உடனே கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாயை அனுப்பிவிட்டார். பணம் போன மறுகணமே அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. விசாரித்துப் பார்த்தால்தான் தெரிந்தது, உறவினர் போன் செய்யவே இல்லை; பேசியது அவருடைய 'குளோனிங்' (Cloning) செய்யப்பட்ட குரல் என்று.

மோசடி நடப்பது எப்படி?

திருடர்கள் பயன்படுத்தும் டெக்னிக் ரொம்பவே சிம்பிள். உங்களுக்குத் தெரியாத ஒரு நம்பரிலிருந்து போன் வரும். நீங்கள் எடுத்து "ஹலோ, யார் பேசுறது?" என்று கேட்பீர்கள். அந்தச் சில விநாடிகள் போதும். உங்கள் குரலை அவர்கள் பதிவு செய்து விடுவார்கள். பிறகு போனை வைத்துவிடுவார்கள்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி UPI-யில் பணம் அனுப்ப மொபைல் எண் தேவை இல்லை..!
Scam

அந்தச் சிறிய ஆடியோவைக் கொண்டு, AI மென்பொருள் மூலம் உங்கள் குரலை அப்படியே பிரதியெடுத்துவிடுவார்கள். பிறகு, அந்தக் குரலை வைத்து உங்கள் அப்பா, அம்மா அல்லது நண்பர்களுக்கு போன் செய்து, "நான் அவசரத்துல இருக்கேன், உடனே பணம் அனுப்புங்க" என்று கேட்பார்கள். கேட்பவர்களுக்கு அது உங்கள் குரலாகவே இருப்பதால், மறுபேச்சில்லாமல் பணத்தை அனுப்பி ஏமாந்துவிடுவார்கள்.

புள்ளிவிவரங்கள்!

இந்தியாவில் மட்டும் இப்படிப்பட்ட குரல் மோசடிகள் மூலம் ஏமாந்தவர்கள் ஏராளம். பாதிக்கப்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் பணத்தை இழந்துள்ளனர். அதிலும் பாதிப் பேர் 50,000 ரூபாய்க்கும் மேல் பறிகொடுத்துள்ளனர். நிஜமான குரலுக்கும், AI குரலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது 69 சதவீத இந்தியர்களுக்குச் சிரமமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே மக்களே, அடுத்த முறை தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், எடுத்தவுடனே "ஹலோ" என்று சொல்லாதீர்கள். கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள். எதிர்முனையில் இருப்பவர் யார் என்று உறுதி செய்துகொண்டு பேசுங்கள். 

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ... பணம் போச்சே! உங்கள் சேமிப்பை கரைக்கும் UPI 'டிஜிட்டல் நிதி கசிவு'!
Scam

அதேபோல, தெரிந்தவர்களே பணம் கேட்டு போன் செய்தாலும், அவசரப்பட்டு அனுப்பாதீர்கள். துண்டித்துவிட்டு, வீடியோ கால் செய்து முகம் பார்த்துப் பேசி உறுதி செய்துகொள்ளுங்கள். தொழில்நுட்பம் வளர வளர, நாமும் கொஞ்சம் உஷாராக இருந்தால்தான் நம் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com