

தற்போதைய சூழ்நிலையில் அன்றாட செலவினங்கள் ஐந்து ரூபாய் தொடங்கி அனைத்தையும் யுபிஐ (UPI) மூலம் செலுத்தி விடுகிறோம். இது மிகவும் எளிதாக இருப்பதால் அதிகமாக செலவு செய்கிறோம். அந்த வகையில் யுபிஐ மூலம் கட்டுக்கடங்காமல் செலவு செய்வதை தடுக்கும் வழிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. பணத்தைக் கையாளும் ரொக்க பணத்துடன் மக்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு (emotional connection) உள்ளது. பணத்தை ரொக்கமாக செலுத்தும் போது அதன் மீது கவனம் செலுத்தி செலவுகளை குறைத்துக் கொள்கிறோம். மொபைல் மூலம் பணம் செலுத்தும்போது டிஜிட்டல் வேலட்டில் அது நிகழ்வதில்லை என்பதால் அதிகமாக செலவழிக்கிறோம்.
2. பாக்கெட்டில் இருந்து நோட்டை எடுத்து யாருக்காவது கொடுக்கும்போது பணம் போய்விட்ட உணர்வு ஏற்படுகிறது. இதே கியூ.ஆர்.கோடு மூலம் 50 ,100 ரூபாய் பணத்தை அனுப்பும் போது யோசிப்பதில்லை என்பதால் மாத இறுதியில் இத்தகைய செலவுகள் மொத்தமாக சேர்ந்து அதிகரித்து விடுகின்றன.
3. டிஜிட்டல் பேமென்ட் மூலம் பணம் செலுத்துவது எளிதாகியுள்ளதால் டீ, பால் முதல் அதிக மதிப்புள்ள பொருட்கள் வாங்குவது வரை கியூ.ஆர்.கோடு மூலம் பணம் செலுத்தப்படுவதன் காரணமாக திட்டமிடப்படாத செலவுகள் அதிகரித்து மாத இறுதியில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு விடும் என்பதால் திட்டமிட்ட செலவுகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
4. டீ, கார் பார்க்கிங், ஆன்லைன் சலுகை போன்றவற்றில் நிதி கசிவு ஏற்படுவது நீண்ட கால சேமிப்பை குறைத்து விடும் என்பதால் ரொக்கமாக பணத்தைக் கொடுக்கும் பொழுது அனேகமாக செலவு செய்ய வாய்ப்பு இருக்காது.
5. பாக்கெட்டில் நூறு ரூபாய் இருக்கும்போது அதில் இருபது ரூபாய் செலவழித்தால் 80 ரூபாய் மட்டும் உள்ளது நன்கு தெரியும். இதனால் கவனத்துடன் அடுத்த செலவு செய்வோம். ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தும் போது இத்தகைய யோசனை வராது என்பதால் சிறிய செலவுகள் அதிகரிக்கின்றன.
6. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது பணம் குறைந்து கொண்டிருக்கின்ற உணர்வு குறைவாக இருப்பதால், சில ஆய்வுகளின் படி, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் ரொக்கமாக பணம் செலுத்துபவர்களை விட சுமார் 40 முதல் 45 சதவிகிதம் அதிகமாக செலவு செய்வதாக கணிக்கப்பட்டுள்ளது.
7. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதால் கிடைக்கும் கேஷ்பேக் மற்றும் ராயல்டி வெகுமதிகள் மூலம் மீண்டும் மீண்டும் வாங்குவதை தூண்டுவதை தவிர்க்க ஒவ்வொரு வாரமும் வங்கி கணக்கு அறிக்கை மற்றும் மொபைல் வாலட் அறிக்கைகளைச் சரிபார்க்கவும்.
8. அத்தியாவசிய செலவுகள், வசதிக்காக செய்யப்பட்ட செலவுகள், உணர்ச்சி வசப்பட்டு செய்த செலவுகள் என மூவகையாகப் பிரித்து மாத இறுதியில் எத்தகைய செலவுகளை தவிர்க்க முடியும் என கணக்கிட்டால் செலவை குறைக்க முடியும்.
9. தினமும் ஐந்து அல்லது பத்து ரூபாய் செலவு செய்து இருந்தாலும் அல்லது ஒருவருக்கு கடனாக பணம் கொடுத்து இருந்தாலும் அதை பதிவு செய்து வைக்க வேண்டும். ஏனெனில் சிறிய தொகை பரிவர்த்தனைகள் பெரியதாகி செலவு அதிகரித்து விடும்.
10. சிறிய பொருட்களை வாங்கும் போது ஒரு நிமிடம் மிகவும் அவசியமில்லாத பொருளை வாங்க வேண்டும் என நினைக்கும் போது 24 முதல் 48 மணி நேரம் காத்திருங்கள். அதன் பிறகு வாங்குவதன் மூலம் செலவை குறைக்கலாம்.
மேற்கூறிய முறைகளை கையாள்வதன் மூலம் கட்டுப்பாடற்ற செலவுகளை தவிர்க்கலாம்.