

பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்று ஒன்று நிச்சயம் இருக்கும் - இதுதான் காலம் காலமாக நாம் நம்பி வரும் இயற்கையின் நீதி. ஆனால், ஏன் சாக வேண்டும்? செவ்வாய் கிரகத்தில் மனிதக் காலனியை அமைக்கத் திட்டமிட்டு வரும் எலான் மஸ்க், இப்போது பூமியில் மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது பற்றியும், மரணத்தை ஒரு 'தீர்க்கக்கூடிய பிரச்சனையாகவும்' பார்ப்பது உலக அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
உடல் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம்!
சமீபத்தில் நடந்த ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் எலான் மஸ்க் பேசிய கருத்துக்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளன. அவரைப் பொறுத்தவரை, மனித உடல் என்பது ஒரு சிக்கலான மென்பொருள் நிரப்பப்பட்ட கணினி போன்றது. கணினியில் வைரஸ் வந்தால் அதைச் சரிசெய்வது போல, உடலில் ஏற்படும் முதுமையையும் சரிசெய்ய முடியும் என்று அவர் நம்புகிறார்.
இதற்கு அவர் சொல்லும் உதாரணம் மிகவும் சுவாரஸ்யமானது. "நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில், ஒரே வேகத்தில் தான் முதுமை அடைகின்றன. யாருக்கும் வலது கை இளமையாகவும், இடது கை வயதான தோற்றத்துடனும் இருப்பதில்லை. நம் உடலுக்குள் முதுமையை நிர்ணயிக்கும் ஒரு 'புரோகிராம்' இயங்குகிறது. அந்தப் புரோகிராமை நாம் மாற்றி அமைத்துவிட்டால், அல்லது அதில் உள்ள பிழைகளைத் திருத்திவிட்டால், மனிதனால் நீண்ட காலம் இளமையாக வாழ முடியும்" என்கிறார் மஸ்க்.
முதுமையை விரட்டுவது, இப்போது எலான் மஸ்க்கின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல; அது சிலிக்கான் வேலியின் புதிய ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது. ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், மனித ஆயுளை 10 ஆண்டுகள் ஆரோக்கியமாக நீட்டிக்கும் நோக்கத்தில் செயல்படும் 'ரெட்ரோ பயோசயின்சஸ்' என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் சுமார் 180 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார்.
இன்னொரு பக்கம், 'பிரையன் ஜான்சன்' என்ற தொழிலதிபர் செய்யும் காரியங்கள் இன்னும் விசித்திரமானவை. இவர் தனது உடலை 18 வயது இளைஞனைப் போல மாற்றிக்கொள்ள ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார். Blueprint என்ற பெயரில் இவர் மேற்கொள்ளும் இந்த முயற்சியில், கடுமையான உணவுக்கட்டுப்பாடு, தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள், தூக்கத்தைக் கண்காணித்தல் எனத் தன்னைத் தானே ஒரு பரிசோதனை எலியாக மாற்றிக்கொண்டுள்ளார். சில உடல் பாகங்களின் வயது குறைந்திருப்பதாக அவர் ஆதாரங்களையும் வெளியிடுகிறார்.
இயற்கையை வெல்ல முடியுமா?
மரபணு மாற்றம் மற்றும் Bio-hacking தொழில்நுட்பங்கள் மூலம் முதுமையைத் தள்ளிப்போட முடியும் என்று அறிவியல் நம்புகிறது. ஆனால், இது சாத்தியமானால் உலகம் என்னவாகும்? ஏற்கனவே மக்கள் தொகை பெருக்கம் ஒரு பிரச்சனையாக இருக்கும் சூழலில், மனிதர்கள் சாகாமல் இருந்தால் பூமியின் நிலை என்ன? மேலும், இந்தத் தொழில்நுட்பம் ஏழைகளுக்குக் கிடைக்குமா அல்லது பணம் படைத்தவர்கள் மட்டும் சாகாவரம் பெற்று உலகை ஆள்வார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
எலான் மஸ்க் சொல்வது போல இயற்கையின் சமநிலையை உடைப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம். எது எப்படியோ, செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதை விட, எமதர்மனிடம் இருந்து தப்பிப்பது மனிதனுக்குப் பெரிய சவாலாகத் தான் இருக்கும். ஆனால், அந்தச் சவாலை ஏற்கத் தயாராகிவிட்டார்கள் நம் நவீன கால விஞ்ஞானிகள்.