நம் பூமிக்கு அடியில் ஏராளமான ரகசியங்கள் ஒளிந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட உலகின் பழமையான நீர். இது கனடாவில் உள்ள ஒரு சுரங்கத்தின் ஆழமான பகுதியில் ஒரு புவியியலாளர் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் கீழே இந்த நீர் காணப்படுகிறது. 1.5 பில்லியன் முதல் 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த நீர் டைனோசர்கள் வாழ்ந்த காலத்துக்கும் முற்பட்டது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது!
இந்த பழமையான நீரில் உள்ள சல்பேட், நீர் மற்றும் பாறைக்கு இடையிலான எதிர்வினையால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த சல்பேட்டை பயன்படுத்தி நீரின் காலத்தை கணக்கிட முடியும் என புவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பழமையான நீரை கண்டுபிடித்த புவியலாளார் பார்பரா ஷெர்வுட் லோலார் அதை சுவைத்தும் பார்த்துள்ளாராம். இந்த நீர் மிகவும் உப்பு மற்றும் கசப்பானது என்றும், கடல்நீரை விட அதிக உப்புத்தன்மை கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, இந்த நீரில் நுண்ணுயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் கிடைத்ததுள்ளன. நீரில் இருந்த வாயுக்களும், ஐசோடோப்புகளும் ஒன்றுக்கொன்று வினைபுரிந்து சின்ன சின்ன நுண்ணுயிர் கூட்டங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்துள்ளன.
பூமிக்கடியில் உள்ள பாறைகள், மழை மற்றும் பனி உருகுதல் மூலம் நீரைச் சேகரிக்கின்றன. இந்த நீர் பாறைகளின் பிளவுகள் மற்றும் பள்ளங்களுக்குள் குளம் போல் தங்கி, அடியில் சிக்கிக் கொள்கிறது. இந்த நீரைப் பார்க்கும்போது, பாறைக்குள் சிக்கியுள்ள ஒரு சிறிய அளவு நீர் என்றே தோன்றும். ஆனால், உண்மையில் நீரின் அளவு எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருக்குமாம். இது பழங்காலத்தில் பூமி எப்படி இருந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ள புவியியலாளர்களுக்கு உதவுகிறது. ஏனெனில், உப்புத்தன்மை கொண்ட நீர் பொதுவாகப் பழமையானதாக இருக்கும். மேலும், நீர் நிலத்தடியில் எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலம் தாதுக்கள் கரைந்து, அதிக உப்புத்தன்மை கொண்டதாக மாறிவிடுமாம்.
இது பூமியில் ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடிய மற்றும் இன்றும் ஒத்த சூழல்களில் மறைந்திருக்கக்கூடிய உயிரினங்களைப் பற்றி அறிய ஒரு வழிகாட்டியாக இருக்கும். 2016-ல் Nature இதழில் இந்த கண்டுபிடிப்பு குறித்து விரிவாக வெளியிடப்பட்டது.
இந்த அதிசயக் கண்டுபிடிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?