தற்கொலை கருவியை பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகின் முதல் தற்கொலைக் கருவி சுவிட்சர்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கருவி எப்படி வேலை செய்யும், யார் யாருக்கு பயன்படுத்த அனுமதி என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
இந்த கருவியின் பெயர் தற்கொலைக் கருவியாக இருந்தாலும், இந்த கருவியை பயன்படுத்தி நிகழும் இறப்புக்கு 'டெஸ்லா ஆஃப் கருணைக்கொலை' என்றுதான் பெயர். எனவே இந்த கருவி தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு அல்ல.
ஒரு உயிர் எப்படி உருவாவது அதிசயமோ, அதைபோல் ஒரு உயிர் உடலை விட்டு பிரிவதும் அதிசயம் தான். மரணிக்கும் ஒரு உயிர் உடலை விட்டு எங்கே செல்லும் என்று நமக்கு தெரியாது! அதே போல் அந்த மரணம் இயற்கையானது என்றால் பரவாயில்லை.
தற்கொலை கருவி அல்லது கருணைக்கொலை கருவி:
தற்கொலை என்றால் அது பாவ செயல். தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதே தவறான ஒன்று. மீறி தோன்றினால் மனநல மருத்துவரின் ஆலோசனையை பெறலாம் அல்லது தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அழைப்பு எண் 104-க்கு கால் செய்யலாம்.
ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலை வேறு விதமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே அந்த நாட்டில் தற்கொலை செய்துகொள்ள அரசு அனுமதி வழங்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில், 'தி லாஸ்ட் ரிசார்ட்' என அழைக்கப்படும் ஒரு அமைப்பு, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்கோ என்ற புதிய தற்கொலைப் பாட் எனப்படும் கருவியை தயார் செய்து அடுத்த மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு சுவிட்சர்லாந்து அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கருவி 2019-ல் முதன்முதலில் எக்ஸிட் இன்டர்நேஷனல் நிறுவனர் பிலிப் நிட்ச்கே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருவி ஆக்ஸிஜனை நிறுத்தி நைட்ரஜனை வெளியேற்றும். இதன் மூலம் மரணத்திற்கு வழிவகுக்கிறது.
சர்கோ காப்ஸ்யூலில் உள்ள செயல்முறை குறிப்பாக தானியங்கு தன்மை கொண்டது. இந்த முறையில் ஒருவர் இறப்பதற்கு, முதலில் அவர் ஒரு மனநல ஆலோசகரிடம் கவுன்சிலிங் எடுத்து, தன்னுடைய மன திறனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்கொலை காப்ஸ்யூலை பயன்படுத்தும் முன் தங்கள் அடையாளம் மற்றும் முகவரி என அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் அதில் அமர்ந்து படுத்துக் கொண்டு அங்குள்ள பட்டனை அழுத்தினால், காப்ஸ்யூலின் உள்ளே ஆக்ஸிஜன் அளவு வேகமாக குறைந்து சுமார் ஐந்து நிமிடங்களில் சுயநினைவு இழந்து அது மரணத்திற்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
ஒருமுறை பட்டனை அழுத்திவிட்டு அதன் பின்னர் ரிவர்ஸ் செய்து கொள்வது இதில் சாத்தியமில்லை. இந்த செயல்முறையில் வெளியாகும் நைட்ரஜனுக்கு கட்டணம் பிடிக்கப்படுகிறது. அதன்படி 18 சுவிஸ் பிராங்குகள் இந்திய மதிப்பில் தோராயமாக 2000 ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தி லாஸ்ட் ரிசார்ட்டின் ஆலோசனைக் குழு, "காப்ஸ்யூலைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 50 ஆக இருந்தாலும், 18 வயதுக்கு மேற்பட்ட தீவிர நோய்வாய்ப்பட்ட நபர்களுக்கு விதிவிலக்குகள் செய்யப்படலாம்" என்று கூறியுள்ளது.
உடல்நலம் முடியாதவர்கள் எனில், இந்த கருவியை பயன்படுத்தி இனி வாழ்வதற்கு சிரமம் என்ற நிலையில், கருணைக்கொலை அடிப்படையில், தற்கொலை செய்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு செயல்படுத்தப்பட உள்ள இந்த கருவி பற்றி கேள்விப்படும் போதே மனம் சற்று பதறத்தான் செய்கிறது. இந்த கருவிக்கு பல எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. ஒரு உயிரை மாய்த்துக்கொள்ளும் கருவி என்ற போது அனைவராலும் யோசிக்கபட வேண்டிய ஒன்றுதான். தற்கொலை எதற்குமே தீர்வு அன்று. ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கான வழிகளை சிந்திப்பது நன்று. இது போன்ற விஷயங்கள் இருப்பதை அறிந்துக் கொள்வதோடு விட்டுவிட வேண்டும்.