
இத்தாலியைச் சேர்ந்த 30 வயதான ஆண்ட்ரியா மராஸி 1993 ஃபியட் பாண்டா காரை (1993 Fiat Panda) 50 செ.மீ அகலம் கொண்ட மாடலாக மறு உருவாக்கம் செய்து சாதனை படைத்திருக்கிறார். வெறும் 50 செ.மீ அகலம் என்பது ஒரு தலையணையின் அகலம் கொண்டது. இதுதான் உலகின் மிக மெலிதான கார் என்றும் கூறப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அந்தக் காரை ஓட்ட முடிகிறது. இந்த காரை பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், வீட்டு கண்ணாடியில் எடுக்கப்பட்ட புகைப்படம் போலவும் தெரிகிறது.
பாக்னோலோ க்ரீமாஸ்கோவில் உள்ள தனது குடும்பத்தினருக்குச் சொந்தமான ஆட்டோடெமோலிசியோன் மராஸி என்ற ஸ்கிராப் யார்டு (Scrapyard) மற்றும் பட்டறையில் மராஸி சிறுவயது முதலே தனது தந்தையுடன் பணியாற்றி வருகிறார். இந்த கார் ஸ்கிராப்க்கு (மறுசுழற்சி) செல்ல இருந்த நிலையில் அதற்கு மறு உயிர் கொடுக்க ஆண்ட்ரியா மராஸி முடிவெடுத்தார். மிகக் குறுகிய கார் உருவாக்கியதற்கான உலக சாதனையைப் பெறுவதே ஆண்ட்ரியா மராஸியின் கனவாக உள்ளது.
இந்த கார் 50 செ.மீ அகலம் கொண்டதாக இருந்தபோதிலும், பெரும்பாலான உட்புற அசல் பாகங்கள் மாற்றாமல் அப்படியே வைக்கப்பட்டு, அதன் வடிவமைப்பு மாறாமல் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் முன்புறத்தில் ஒரு ஹெட்லைட் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டு சிறிய குறிகாட்டிகள் உள்ளன, ஒரிஜினல் காரில் இருந்த நான்கு சக்கரங்களும் மாற்றப்படவில்லை. இந்த காரில் முன்பக்கத்தில் ஒரு தனித்துவமான எஞ்சின் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இடது பின்புற சக்கரத்தில் இருந்து பொருத்தப்பட்ட ஒரு டிரான்ஸ்மிஷன் செல்கிறது. காரின் முன்பக்கத்தில் ஸ்டீயரிங் கட்டுப்படுத்தும் அமைப்புகளுடன் வலது பின்புறத்தில் பிரேக் வைக்கப்பட்டுள்ளது.
காரின் பின்னால் ஒருவர் பயணிக்கும் வகையில் மட்டுமே இடம் உள்ளது. இதன் எடை 264 கிலோ, உயரம் 145 செ.மீ, பக்கவாட்டில் 50 செ.மீ.. ஆகும். அதிகபட்சமாக 15 கி.மீ. வேகத்தில் மட்டுமே ஓடும். முழுமையாக சார்ஜ் செய்தால் 25 கி.மீ. தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. இதன் மோட்டார் ஒரு மின்-ஸ்கூட்டரிலிருந்து எடுக்கப்பட்டது.
இத்தாலியில் நடைபெற்ற ஃபியட் பாண்டாவின் 45 ஆண்டு நிறைவு விழாவில் காட்சிபடுத்துவதற்காக இந்த காரை ஆண்ட்ரியா மராஸி உருவாக்கினார். இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த கார் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கார் சேகரிப்பாளர்களையும் ஆர்வலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டு வைரலானது.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்த கார் உருவாக்கப்பட்டது எனினும், ஆண்ட்ரியா மராஸின் இத்தகைய முயற்சிக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.