
பூமி தோன்றிய காலத்திலிருந்தே ஆபரணங்கள் அணியும் பழக்கம் வழக்கத்தில் இருக்கிறது. கற்கால மனிதர்கள் கூட மிருகங்களின் பற்களையும் , நகங்களையும் நரம்புகளில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொண்டனர். அது கற்கால நாகரிகம், தற்கால நாகரிகத்தில் விதவிதமான ஆபரணங்களை மக்கள் விரும்பி அணிகின்றனர். அரியவகை கற்களை தங்கம், வெள்ளி அல்லது மற்ற உலோகங்களில் பதித்து அணிவதை நெடுங்காலமாக மக்கள் விரும்புகிறார்கள்.
பொதுவாக நாம் அனைவரும் வைரம், முத்து, பவளம், மாணிக்கம் போன்ற ரத்தின கற்களைப் பற்றி அறிந்திருப்போம். அதுபோன்ற ஒருவகை கல்லை சேர்ந்த சிர்கான் என்கிற கனிமம் ஆபரணங்களில் பதித்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது, அது பற்றி பலரும் பெரிதாக அறிந்தது இல்லை. விலையுயர்ந்த வைரங்களுக்கு மாற்றாக பலரும் சிர்கானை தேர்வு செய்கின்றனர். இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் ஒரு சிலருக்கு அது சிர்கான் என்று சொல்லப்படுவது இல்லை.
சிர்கான் ஒன்றும் புதிய வகைக் இரத்தினக் கல் அல்ல, அது முன்பே புழக்கத்தில் இருந்த ஆபரணக்கல்தான். நீண்ட காலமாக இயற்கையில் கிடைக்கும் ஒருவகை கனிமம் இது. இது இரத்தினக் கற்களின் இனத்தை சார்ந்தது என்றாலும் இதன் விலைமதிப்பு சற்று குறைவுதான். வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை, பழுப்பு ஆகிய நிறங்களில் சிர்கான் கற்கள் கிடைக்கின்றன.
தங்கம் அல்லது வெள்ளி நகைகளில் பதிக்கப்படும்போது, இது விலையுயர்ந்த ஆபரண கற்களுக்கு இணையான தோற்றத்தையும் கவர்ச்சியையும் அளிக்கிறது. அதிலும் வெள்ளை நிற சிர்கான் வைரத்தை போன்றே ஜொலிக்கும் தன்மை கொண்டது. மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட்டால் தவிர, வைரத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு கண்டறிய முடியாது. தங்க நகைகளில் நீல நிற கற்களுக்கு பெரும்பாலானவர்களின் தேர்வாக சிர்கான் உள்ளது.
சிர்கான் வகை கற்கள் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, உக்ரைன், பிரேசில், கென்யா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கடற்கரைப் மணல் பகுதிகளில் பெரும்பாலும் கிடைக்கின்றது. இந்த நாடுகளில் மட்டுமல்லாது வேறு நாடுகளிலும் சிர்கான் கல் வெட்டி எடுக்கப்படுகிறது. வெட்டி எடுக்கப்படும் சிர்கான் கற்கள் வெப்பத்தில் சுத்திகரிக்கப்பட்டு பளபளப்பான கற்களாக மாற்றப்படுகிறது.
உலகில் அரிய வகை கற்களில் ஒன்றாக இருந்தாலும் இதன் விலை குறைவாகத்தான் உள்ளது. வைரத்தைவிட இது அரிய வகை கனிமம் என்றாலும், அதற்கு கிடைத்துள்ள மதிப்பு இதற்கு ஏனோ கிடைப்பது இல்லை. இதற்கு காரணம் வைரத்தை பட்டை தீட்ட ஆகும் செலவு அதிகம், வைரம் மிகவும் உறுதியானது , அவ்வளவு எளிதில் அதை உடைக்க முடியாது, நீண்ட காலம் ஆனாலும் வைரத்தில் பளபளப்பு மிகக்குறைந்த அளவில்தான் குறைகிறது.
மாறாக சிர்கான் எளிதில் உடையாது என்றாலும், சிறிய முயற்சிகளில் உடைக்க முடியும், நீண்ட காலம் செல்லும்போது அதன் பளபளப்பு தன்மை சற்று குறையும். ஆனாலும், சிர்கான் விற்கப்படும் விலையில் அது லாபமான நல்ல தேர்வாக இருக்கிறது. சிலர் தங்களின் ராசிக்கு வைரம் தோஷத்தையும் துரதரிஷ்டத்தையும் கொடுக்கும் என்று நினைப்பார்கள், அவர்களுக்கு சிர்கான் பயமில்லாத தேர்வாக இருக்கும்.
சில சிர்கானில் யூரேனித்தின் தாக்கம் இருந்தாலும் அதன் கதிரியக்க தன்மை மனிதர்களை பாதிப்பது இல்லை. பலரும் சிர்கானை சிர்கோனியாவுடன் குழப்பிக் கொள்கின்றனர். ஆபரணங்களில் பதிக்கப்படும்போது சிர்கோனியாவைவிட சிர்கான் தரமானது, நம்பகத்தன்மை வாய்ந்தது, நீண்ட காலம் பளபளப்பையும் பிரகாசத்தையும் கொண்டிருக்கும்.