
தமிழில் அரட்டை என்று பெயர் சூட்டப்பட்ட இந்த செயலி, தனது பெயருக்கு தகுந்ததை போல அரட்டை அடிக்க ஏதுவாக இருக்கிறது. இதன் பெயர் இந்தியாவின் ஒரு மாநில மொழியை முன்னிலைப் படுத்துகிறது. சோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்புவின் தாய்மொழிப் பற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. தற்போது அரட்டை ஆப்பினை பற்றி பரபரப்பான செய்திகள் தினமும் வருகிறது. டெக்கிகள் அதைப் பற்றி பேசி தாங்கள் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கிறோம் என்று இன்புளுயன்ஸ் செய்து கொள்கிறார்கள்.
இந்தியாவை சேர்ந்த சோஹோ நிறுவனம் அரட்டை என்ற செயலியை சமீபத்தில் அறிமுகப் படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்வோரின் 3000 லிருந்து 3,50,000 ஐயும் கடந்தது. கிட்டத்தட்ட வாட்சாப்பை போல இதை உருவாக்கி உள்ளதால், இது வாட்சப்பிற்கு போட்டியை தரக் கூடும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகின்றனர். தற்போது தொழில்நுட்ப வட்டாரத்தை சேர்ந்தவர்கள், மெதுவாக அரட்டை செயலியை பிரபலப்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த கவலைகளைத் தொடர்ந்து, சோஹோ கார்ப்பரேஷன் 2021 ஆம் ஆண்டே அரட்டை செயலியின் தொடக்கம் சிறிய வசதிகளுடன் அறிமுகமாகியது. ஆனால், அப்போது நிறைய வசதிகள் இல்லாததால் இந்த செயலி பிரபலமாகவில்லை. இந்த செயலி செய்தி அனுப்புதல் மற்றும் தகவல் தொடர்புக்கான, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான தொழில்நுட்பமாக உள்ளது. இது உள்நாட்டு தொழில்நுட்ப தீர்வுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது.
சிறப்பம்சங்கள்:
இந்த செயலிலில் தனிப்பட்ட முறையில் உங்கள் தொடர்பில் உள்ள இன்னொரு அரட்டை பயனரிடம் கதையளக்கலாம். தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், குருப் சாட்டிங், கதை பகிர்தல், ஒளிபரப்பு சேனல்கள் ஆகிய வாட்ஸ்அப்பில் கிடைக்கும் அனைத்து வசதிகளையும் இது தருகிறது. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய மெட்டா நிறுவனத்திற்கு போட்டியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, ஸ்பைவேர் இல்லாத ஒரு ஆப் ஆகும்.
அரட்டை செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்கு எந்த வித சந்தா கட்டணமும் கிடையாது. எளிமையான, தனியுரிமை சார்ந்த தகவல் தொடர்பு தீர்வை வழங்குகிறது, இது பரந்த அளவிலான பயனர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கிறது.
அரட்டை செயலியின் பயன்கள் என்ன?
அரட்டை செயலி ஒரு விரிவான தகவல் தொடர்புக்காக செயல்படுகிறது. இதன் பயனர்கள் செய்திகள், மீடியா கோப்புகள் மற்றும் ஆவணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். மேலும் குழு அரட்டைகளை அடிக்கலாம். பிரபலமான சேனல்கள் வழியாக புதுப்பிப்புகளை கவனிக்கலாம். இதன் மூலம் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தின் முக்கிய பயன்பாட்டிலும் தொடர்பிலும் இருக்க முடியும். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் தினசரி கதைகளை தனியுரிமையுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
அரட்டை செயலியை ஆதரிக்கும் சாதனங்கள் எவை?
அரட்டை செயலியை ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் உட்பட பல சாதனங்களில் பயன்பாட்டை ஆதரிக்கிறது. ஒரே அரட்டைக் கணக்கை ஐந்து சாதனங்களில் இயக்க அனுமதிக்கிறது. இது ஆண்ட்ராய்ட், மைக்ரோசாப்ட், iOS உள்ளிட்ட அனைத்து இயங்கு தளங்களிலும் வேலை செய்கிறது.
திடீர் வளர்ச்சி:
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் இந்திய செயலிகளை உள்நாட்டினர் ஆதரிக்க வேண்டும் என்று அரட்டை செயலியை பயன்படுத்த அழைப்பு விடுத்தார். அதை தொடர்ந்து செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அரட்டையை பதிவிறக்கியுள்ளனர். இந்தியாவில் வாட்ஸ்அப் பயனர்களுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு என்றாலும், நல்ல தொடக்கத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கும்.