
1980களின் துவக்கத்தில், லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நான் கல்கியில் எழுதத் துவங்கினேன் என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அப்போது, கல்கி விடுமுறை மலருக்காக சில கல்லூரி மாணவர்களிடம் அவர்கள் சென்ற சுற்றுலா அனுபவங்களைத் கேட்டு ஒரு கட்டுரை எழுதும்படி சொன்னார் ஆசிரியர். நானும் சில கல்லூரி மாணவ, மாணவிகளிடம் சுற்றுலா அனுபவங்களைக் கேட்டு எழுதிக் கொடுத்தேன்.
அதில் அப்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் நான்காவது வருடம் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவி பகிர்ந்து கொண்ட அனுபவம் இது:
நாங்கள் காஷ்மீர், டெல்லி, ஆக்ரா, ஜெய்பூர் என சுற்றுலா சென்றிருந்த சமயம் ஆக்ராவில் ஓர் ஓட்டலில் சாப்பிடச் சென்றோம். மெனுகார்டைப் பார்த்து, நாலைந்து ஐட்டங்களை ஆர்டர் கொடுத்தோம். வெயிட்டர், “சப்பாத்தி?” என்று கேட்டார். நாங்கள் டூரில் தினமும் சப்பாத்தியாகவே சாப்பிட்டு, வெறுத்துப் போயிருந்ததால் , “எதுவும் வேண்டாம்! நாங்கள் ஆர்டர் செய்த ஐட்டங்களை மட்டும் கொண்டு வா! அது போதும்!” என அரைகுறை இந்தியில் கறாராக சொல்லிவிட்டோம்.
சில நிமிடங்களில் ஆர்டர் கொடுத்த ஐட்டங்கள் வந்தன, அப்புறம்தான் தெரிந்தது அவை எல்லாமே சைடு டிஷ்கள் என்பது! காஷ்மீரில் பகல்காம் சென்றிருந்த சமயம், எங்கே சென்றால் தயிர்சாதம் கிடைக்கும் என்று விசாரித்து, தெரிந்துகொண்டு, அங்கே போய் தயிர் சாதத்தை சாப்பிட்டபோது சுவர்கத்துக்கே போனது போல இருந்தது. உடன் வந்திருந்த சக மாணவரான சீர்காழி சிவ சிதம்பரம் பயணத்தின்போது அவ்வப்போது தனது கணீர் குரலில் பாடி எங்களை மகிழ்வித்தது ஓர் இனிய அனுபவம்” இப்படி தன் கல்லூரி சுற்றுலா அனுபவங்களைச் சொன்ன மாணவிதான், இன்று டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரான டாக்டர் சுதா சேஷையன்.
மருத்துவக் கல்லூரி மாணவி சுதா சேஷையனை அதன் பிறகு இலக்கிய மேடைகளில், ஆன்மிக நிகழ்வுகளில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியராகப் பார்த்து, அதன் கிளைமேக்ஸாக மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக மங்கையர் மலருக்காக பேட்டி கண்டது ஒரு மகிழ்ச்சிகரமான சந்திப்பு.
சுதா சேஷையனின் அப்பா, அம்மா இரண்டு பேருமே மருத்துவர்கள்தான். எனவே, சிறு வயது முதலே ஒரு மருத்துவர் ஆவதுதான் அவரது லட்சியமாக இருந்திருக்கிறது. ஆனாலும், போட்டி நிறைந்த மருத்துவக் கல்லூரி அட்மிஷனில், ஒரு வேளை தனக்கு சீட் கிடைக்காமல் போய்விட்டால்? ஒரு சேஃப்டிக்காக சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.எஸ்சி – இயற் பியல் பிரிவில் சேர்ந்தார். நல்ல காலம். அவரது விருப்பப்படியே பழம் பெருமை வாய்ந்த சென்னை மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் சீட் கிடைத்தது. பட்ட மேற்படிப்பையும் அங்கேயே முடித்து, அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றிவிட்டு, மருத்துவப் பல்கலைக் கழக வி.சி. ஆனது ஒரு பெரும் சாதனைதான் என்றால் அது மிகை இல்லை.
மருத்துவப் பாதையில் இப்படி என்றால், இலக்கியப் பாதையிலும் அவர் ஒரு சாதனையாளர்தான். காந்திஜி நூற்றாண்டு விழாவின்போது முதன் முறையாக பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு அப்பா எழுதிக் கொடுத்ததை மேடையில் உற்சாகம் பொங்கப் பேசி பரிசு பெற்றார் நான்காம் வகுப்பு மாணவியான சுதா. அதன்பின் பல போட்டிகள், பரிசுகள்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழ் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதை தாழ்வாகக் கருதிய போதிலும், இவர் கம்பன் கழக பேச்சுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றார். இந்த டாக்டருக்கு மேடை பேச்சில் ஊக்க டானிக் கொடுத்தவர் நீதிபது மு.மு.இஸ்மயில்.
ஒரு சந்திப்பின்போது, சுதா சேஷையன் “1981ல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது எட்டயபுரத்தில் நடந்த பாரதியார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டதை மறக்க முடியாது” என்று சொல்லிவிட்டு, அதைப் பகிர்ந்துகொண்டார்.
அந்த விழாவில், பேராசிரியர் அ.ரா. இந்திரா தலைமையில் நடந்த கருத்தரங்கில் மேடம் ஜெயலலிதா உரையாற்றி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி வந்து முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார். திரையில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த நான், ஆர்வத்துடன் தலையை எட்டி, எட்டி அவரைப் பார்க்க முயற்சித்தேன்.
மறுநாள், வலம்புரி ஜான் தலைமையில் நடந்த இளைஞர்கள் அமர்வில், “அன்பு கனித்த கனிவே சக்தி” என்ற தலைப்பில் நான் பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கி வந்ததும், என்னை அருகே அழைத்து, “ யூ ஸ்போக் வெல்” என்று சொல்லிப் பாராட்டினார் மேடம். நானும், “யுவர் ஸ்பீச் யெஸ்டர் டே வாஸ் குட் மேடம்!” என்று மகிழ்ச்சியோடு சொன்னேன். ஆனால், அவரோ, “ பட் யுவர்ஸ் வாஸ் ஸ்பான்டேனியஸ் “ என்று பாராட்டியபோது நெகிழ்ந்து போனேன்.
காலங்கள் உருண்டோட, மேடம், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார். 1991-92 கால கட்டத்தில் அரசாங்க விழா ஒன்றில் அவரை சந்தித்தேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பணி எனக்குத் தரப்பட்டிருந்தது. முதலமைச்சர், நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட போது, என் அருகில் வந்து, “யூ கேம் டு எட்டயபுரம் இஸிண்ட் இட்? வீ மெட் தேர் ரிம்ம்பர்?” என்று கேட்டார். அசந்து போனேன். அவர் என்ன சொன்னார் என்பது எனக்குள்ளே முழுமையாக இறங்குவதற்கு சில வினாடிகள் பிடித்தன. பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அதன் பின் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. எப்படிப்பட்ட ஒரு ஞாபக சக்தி இவருக்கு? என்று வியந்து போனேன்.
எட்டயபுரத்தில் ஜெயலலிதா பாராட்டிய “ஸ்பான்டேனியஸ்” சுதா சேஷையனிடம் எப்போதுமே உண்டு. உதாரணத்துக்கு ஒரு சம்பவம். அவருடைய சுந்தர காண்ட சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் திடீரென்று அவரிடம் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தார். சொற்பொழிவை நிறுத்திவிட்டு, அரங்கத்தின் வெளியில் ஒரு குறிப்பிட்ட பதிவு எண் கொண்ட ஒரு கார் மற்ற கார்கள் சென்று வர இடைஞ்சலான முறையில் நிறுத்தப்பட்டிருப் பதைக் குறிப்பிட்டுவிட்டு, “காருக்குச் சொந்தக்காரர் தயவு செய்து சென்று காரை நகர்த்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று அறிவித்தார்.
அப்போது,முன் வரிசையில் இருந்த பார்வையாளர் ஒருவர், “ என்ன கார்?” என்று கேட்டார். மறு விநாடி சுதா சேஷையன் சொன்னார்: சுந்தர காண்டத்தின் நடுவில் வருகிறதென்றால் அது மாருதிதான்” அவரது இந்த அந்த ஸ்பான்டேனியஸ் நகைச்சுவையைக் அரங்கமே கைத்தட்டி ரசித்தது.
மே. வங்காள முதலமைச்சராக இருந்த ஜோதி பாசு மரணமடைந்தபோது, அவருக்கு சம்பிரதாயமான இறுதிச் சடங்குகள் செய்யவில்லை. அவரது விருப்பப்படி, அவருடைய உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. அந்த சமயத்தில், இதுபோல தானமாக வழங்கப்படும் உடல்களை எப்படி, எவ்வளவு நாட்கள் பாதுகாப்பார்கள்? அதை என்ன செய்வார்கள் என ஒரு கட்டுரை எழுத வேண்டி இருந்தது. அப்போது, நான் அணுகியது சென்னை மருத்துவக் கல்லூரியில் அனாடமி புரொபசராக பணியாற்றிக் கொண்டிருந்த சுதா சேஷையனைத்தான். அவர், அது குறித்து விரிவான தகவல்களை எனக்குச் சொல்ல, நான் அந்தக் கட்டுரையை எழுதினேன். கமல்ஹாசன் போன்றவர்கள் உடல் தானம் குறித்து பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அந்தக் கட்டுரை மூலமாக பல தெரியாத தகவல்களை சொல்ல முடிந்தது.
கல்கி - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து ஓராண்டு காலம் நடத்திய “நில் - கவனி - வெற்றிகொள்” தொடர் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சிக்குத் தலைப்பு “கடவுள்”. அது குறித்துப் பேச அழைக்கப்பட்ட இரு பேச்சாளர்கள் தென்கச்சி சுவாமிநாதனும், சுதா சேஷையனும். அன்று இருவரது சொற்பொழிவுகளும் அபாரமாக அமைந்தன. குறிப்பாக, சுதா சேஷையன் தன் பேச்சினை அரங்கத்தில் கூடியிருந்த அனைவருடைய கூட்டுப் பிரார்த்தனையோடு துவக்கி, “சுயநலமில்லாத இந்தப் பிரார்த்தனையில்தான் கடவுள் இருக்கிறார் “ என்று சொன்னது இன்னமும் எனக்கு நினைவு இருக்கிறது.
மேலும், அந்த நிகழ்ச்சிக்கு மிகப்பொருத்தமாக கண்ணதாசன் கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தார்.
மனிதன்: பிறப்பு என்பது என்ன?
கடவுள்: பிறந்து பார்!
மனிதன்:படிப்பு என்பது என்ன?
கடவுள்: படித்துப் பார்!
மனிதன்:அன்பென்பது என்ன?
கடவுள்: அளித்துப் பார்!
மனிதன்: அறிவு என்பது என்ன?
கடவுள்: அறிந்து பார்!
மனிதன்:மனையாள் சுகம் என்பதென்ன?
கடவுள்: மணந்து பார்!
மனிதன்: பிள்ளைகள் என்பவர் யார்?
கடவுள்: பெற்றுப் பார்!
மனிதன்:முதுமை என்பது என்ன?
கடவுள்: முதிர்ந்து பார்!
மனிதன்: வறுமை என்பது என்ன?
கடவுள்: மனிதன்:வாடிப்பார்!
மனிதன்: மரணத்துக்குப் பின் என்ன?
கடவுள் :முடிந்து பார்!
கடவுளின் இந்த பதில்களைக் கேட்ட பிறகு மனிதன் மறுபடியும், “ஆண்டவனே1 அனுபவித்து அறிவதுதான் வாழ்க்கை என்றால், அப்புறம் நீ எதற்காக?” என்று கேட்டான். அதற்கு கடவுளிடமிருந்து நச்சென்று பதில் வந்தது:”அனுபவம் என்பதே நான்தான்!”
அடடே! கடவுளுக்கு எத்தனை அர்த்தம் பொதிந்த விளக்கம்!
பட்டிமன்றங்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தவர், ஒரு கட்டத்தில், அவை வெகு ஜனங்களுக்கான பொழுது போக்காக மாறிவிட்டதாக உணர்ந்தபோது அவற்றில் பங்கேற்பதில்லை என முடிவு செய்து, ஆன்மிக சொற்பொழிவுகளே தனக்கான பாதை என வகுத்துக் கொண்டு அதில் பயணிகத் துவங்கினார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஸ்பெஷலான அன்பைப் பெற்றிருந்தார் சுதா சேஷையன். ஜெயலலிதா மறைந்த போது அவரோடு நெருங்கிப் பழகிய சிலரது அனுபவங்களை கேட்டு கல்கி வெளியிட்டது. அதில் சுதா சேஷையன் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் மிகவும் நெகிழ்வானவை.
மனச்சிதைவு நோய் சிகிச்சை மையமான ‘ஸ்கார்ஃப்’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் இணைத்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அதைக் கேட்டு நான் மெய்சிலிர்த்துப் போனேன். ராமாயண, மகாபாரத கதாபாத்திரங்களுக்கு எப்போதெல்லாம் டிப்ரஷன் ஏற்பட்டது? அதை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு மீண்டார்கள் என்பதுதான் சப்ஜெக்ட். அற்புதமான சொற்பொழிவு. போர்க்களத்தில், தன் சொந்த பந்தங்களைப் பார்த்ததும், அர்ஜுனன், “என்னால் போர் புரிய முடியாது” என்று வில்லை கீழே போட்டது அவனுக்கு ஏற்பட்ட மனச்சோர்வின் வெளிப்பாடுதான். அர்ஜுனனுக்கு அங்கே கவுன்சிலிங் அளித்தது யார் என்று நாமெல்லாம் நன்கு அறிவோம். அப்படி இந்த உலகுக்குக் கிடைத்ததுதானே பகவத்கீதை? பகவத் கீதையை விட சிறந்த மனச்சோர்வுக்கு மருந்து வேறு உண்டா? என்று கேட்டார்.
மருத்துவம் மற்றும் ஆன்மிகம் குறித்து பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார் இவர். டாக்டர் கலாம் எழுதிய “ஃபேமிலி அண்டு நேஷன்” என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தபோது, குடும்பம் மற்றும் தேசம் மீதான அவரது கண்ணோட்டம் இவரை மிகவும் கவர்ந்த்து. ஒரு விழாவில் அவரைச் சந்தித்தபோது, அந்தப் புத்தகம் குறித்த தன் கருத்துக்களைச் சொன்னார். அவர் உடனே, “அந்தப் புத்தகத்தை நீங்களே தமிழில் மொழி பெயர்க்கலாமே!” என்று கூற, “குடும்பமும், தேசமும்” என்ற தலைப்பில் அற்புதமாக மொழி பெயர்த்துவிட்டார் சுதா.
ஜெயலலிதா 2006ஆம் வருடத்தில் தமிழக அரசின் கலைமாமணி விருதினை சுதாவுக்கு அளித்தபோது, “ஐ’ம் பிளீஸ்ட் டு கிவ் திஸ் டு யூ” என்று கூறினார். 2015ல், தமிழக அரசின் “ சொல்லின் செல்வர்” விருதினை வழங்கியபோது, “யூ ரிச்லி டிசர்வ் திஸ். டூ மோர் அன்டு மோர்; ஐ விஷ் டு கிவ் யூ மோர் அவார்ட்ஸ்” என்று கூறினார்.
விகடன் வெளியிட்ட தமிழ் பிரிட்டானிகா பதிப்பில் இவர் ஆற்றிய பணி மகத்தானது. தமிழுக்கென்றே பிரத்யேகமாக இவர் சேர்த்த பகுதிகளும் உண்டு. கலைஞரிடம், பிரிட்டானியா தமிழ்ப் பதிப்பினை அளித்தபோது, சில குறிப்பிட்ட பகுதிகளை உடனே படித்துப் பார்த்துவிட்டு அவர் பாராட்டினார்.
ஜெயலலிதா இவருக்கு தேர்தலில் சீட் கொடுக்க விரும்பினார் என்றும், இவர் உறுதியாக அதை மறுத்துவிட்டார் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். “அன்பு வேறு, அரசியல் வேறு” என்பதை சரியாகப் புரிந்துகொண்டு திட்டவட்டமாக முடிவெடுத்த சுதா சேஷையன் ஓர் அசாதாரணமான பெண்மணி!
(தொடரும்)