
தற்போது நம் உலகில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றங்களின் காரணமாகவே இயற்கை பேரழிவுகள் அதிகம் ஏற்படுகின்றன. 2025ல் உலகில் பல இடங்களில் பேரழிவுகள் ஏற்பட்டு நிறைய மக்கள் பாதிக்கப்பட்டனர். நிலநடுக்கம், வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற பிரச்னைகள் உலக மக்களை திக்குமுக்காட வைத்தன. இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றம் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பதிவில் 2025 ல் ஏற்பட்ட பேரழிவுகள் பற்றி விரிவாக பார்ப்போம்.
2025 மார்ச் மாதம் மியான்மரில் மன்டலே மற்றும் சாகைங் பகுதிகளில் 7.7 ரிக்டர் அளவில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 5000 மேற்ப்பட்ட மக்கள் இறந்தனர் என்று தகவல்கள் சொல்கின்றன. இது 1912 க்குப் பிறகு மியான்மரில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாகக் கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் தாய்லாந்து, இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் வரை உணரப்பட்டன.
2025 ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 14 இடங்களில் காட்டுத்தீ பரவியது. லாஸ் ஏஞ்சல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 57,000 ஹெட்டர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலானது. இந்த காட்டுத்தீயில் 440 பேர் பலியாகினர். சொத்துக்களின் சேதம் மட்டும் 61 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 2025 பருவமழை தொடங்கியது. இது பாகிஸ்தான், பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் ஆகிய இடங்களை வெகுவாக பாதித்தது. ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் வீடுகளை இழந்தனர். இது பாகிஸ்தான் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய இயற்கை பேரிடராக அமைந்தது.
இந்திய பெருங்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை தாக்கியது. இது இலங்கையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. 600 மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் 1.6 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. 2004 ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இலங்கையில் ஏற்பட்ட பேரிடராக இது கருதப்படுகிறது.
2025ல் நவம்பர் முதல் டிசம்பர் காலக்கட்டத்தில் சென்யார் புயல் இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து பகுதிகளை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 2100 பேர் உயிரிழந்தனர். இப்புயலால் சுமார் 19.8 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2025 ல் இந்தியாவில் அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி எடுத்தது. பிப்ரவரி மாதமே 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வெப்பமான மாதமாகப் பதிவானது. இதனால் ராஜஸ்தானில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இந்தியாவில் இரண்டு மாதத்தில் வெப்ப பாதிப்பால் 455 பேர் உயிரிழந்தனர். இந்த வெப்பஅலை மனிதர்களை மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதித்தது.
ஜனவரி 2025 திபெத்தில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 126 பேர் உயிரிழந்தனர். இது திபெத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள பகுதிகள் மற்றும் ஷிகாட்சே நகரில் கட்டிடங்கள் பெரும் சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நேபாளம் மற்றும் வட இந்தியாவில் உணரப்பட்டது.
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட அதிகமான மழைப்பொழிவால் குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 135 பேர் உயிரிழந்தனர். சில பகுதிகளில் சுமார் 530 மி.மீ வரை மழை பதிவானது. இது அந்தப் பகுதிக்கு நான்கு மாதங்களில் கிடைக்க வேண்டிய மழையாகும். இது டெக்சாஸ் மாகாணத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகப் பதிவானது.
2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் கூட்டநெரிச்சல் காரணமாக 120 பேர் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் சங்கமத்தில் நீராட முயன்றபோது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இது இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மனித தவறால் ஏற்பட்ட மோசமான விபத்தாக கருதப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகள் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதிகப்படியாக பெய்த மழைக்காரணமாக கென்யா, டான்சானியா போன்ற இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் இறந்தனர். தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 103 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜீரியா மற்றும் நைஜர் நாடுகள் அணை உடைப்பு மற்றும் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டன.