Indian Emblem and Taj Mahal
India

இந்தியா வளர்ந்த நாடாக மாற, மேம்படுத்தப்பட வேண்டிய 6 விஷயங்கள் என்னென்ன?

Published on

துடிப்பான ரத்தபந்தங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள் மற்றும் ஒரு பில்லியன் கனவுகளின் பூமியான இந்தியா, வளர்ச்சிக்கான அதன் தேடலில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. சூரியன் இமயமலையின் மேல் உதயமாகி, இந்தியப் பெருங்கடலில் மறையும் போது, நமது நாடு சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் ஒரே மாதிரியாகப் போராடுகிறது. எனவே, தாஜ்மஹால் மற்றும் பாலிவுட்டைத் தாண்டி, 2047 க்குள் ஒரு வளர்ந்த நாடாக இருக்க என்னென்ன தேவை என்பதை தெரிந்து கொள்வோம்.

1. தரமான வேலைவாய்ப்புகள்:

பரபரப்பான தெருக்கள், தேநீர் கடைகள் மற்றும் எங்கு போனாலும் தெரு உணவுகளின் வாசனைகள் என இந்தியா அதன் பொருளாதாரத்தில் ஒரு பக்கம் செழித்து வளர்கிறது. ஆனால் வளர்ச்சியின் ஏணியில் ஏற, நமக்கு வெறும் தேநீரும் சமோசாவும் மட்டும் போதாது. படித்தவர் படிக்காதவர் என்று அனைவருக்கும் தரமான வேலைகள் அவசியம் தேவை. குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, இளைஞர்களை மேம்படுத்துதல் மற்றும் அதற்கு வரும் மரியாதைக்குரிய ஊதியம் என்று ஒவ்வொரு இளம் பட்டதாரியும் பணத்தை சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாக வைக்காமல் நாட்டின் வளர்ச்சியில் தங்களுடைய பங்கு இருக்க வேண்டும் என்று யோசித்தால் போதும், இந்த உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு நம் இந்தியாவின் வளர்ச்சி இருக்கும். ஆகையால் ஒவ்வொரு இந்திய குடிமக்களின் இதயத்திலும் புதுமைகளை வளர்ப்பதற்கும், துணிச்சலான ரிஸ்க் எடுப்பதற்குமான பல வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்

2. மனித மூலதன பற்றாக்குறை (Human Capital Deficits):

கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய மூன்றும் எந்த ஒரு செழிப்பான தேசத்திற்கும் அடித்தளமாக அமைகின்றன. ஆயினும்கூட, இந்தியா மனித வள மூலதனத்தில் உள்ள இடைவெளிகளுடன் போராடுகிறது. வகுப்பறைகள் அனைத்தும் ஆர்வமுள்ள மனங்களின் குரல்களுடன் எதிரொலிக்க வேண்டும், அதற்கு ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதை உறுதி செய்ய முதலில் தரமான ஆசிரியர்களை பெற முதலீடு செய்வோம், நமது பாடத்திட்டத்தை நவீனமயமாக்கி, அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவோம். அதேபோல் ஒவ்வொரு மனிதரின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. நாம் சுறுசுறுப்பாக செயல்பட யோகா முதல் ஆயுர்வேதம் வரை நம் நாட்டின் பல பண்டைய ஞானத்தை அனைவரும் கற்பது மிகவும் அவசியம்.

3. பாகுபாடற்ற சுகாதார வசதிகள்

நம் பரந்த நிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நவீன சுகாதார வசதிகள் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். தனியார் என்றால் ஒரு தரம் அரசு மருத்துவமனை என்றால் ஒரு தரம் என்று பிரித்து பார்க்காமல், அனைவரும் சமமான மருத்துவ வசதியை அனுபவிக்க வேண்டும். அதாவது நம் நாட்டில் பணக்காரர், ஏழை என்ற பாகுபாடில்லாமல் அனைவரும் சமமான தரத்தில் மருத்துவ சிகிச்சை பெற வைக்க வேண்டும். ஒரு தரமான சுகாதாரம் தான் அந்த நாட்டின் வளர்ச்சியிலும் மற்றும் மக்கள் ஒற்றுமையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.       

4. பரவலாக்கப்பட்ட ஆட்சி (Decentralized Governance):

கண்களை மூடிக்கொண்டு ஒரு கிராம சபைக் கூட்டத்தை கற்பனை செய்து பாருங்கள்; ஆலமரத்தடியில் நடக்கும் பஞ்சாயத்து, பெரியவர்கள் தங்கள் ஞானத்தைப் பகிர்ந்துகொள்வது, வாழ்க்கையை வடிவமைக்கும் முடிவுகள், என்று அந்தந்த ஊர்களில் பரவலாக்கப்பட்ட நிர்வாகம் அமையும் பட்சத்தில் பல பிரச்சனைகள் மற்றும் தேவைகளுக்கு எந்த ஒரு காலதாமதம் இல்லாமல் சீக்கிரமாக நம்மால் தீர்வை பெற இயலும். கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து அல்லது சுத்தமான காற்று என்று எதுவாக இருந்தாலும், அதில் உள்ளூர் தலைவர்களுக்கு முதல் உரிமை கொடுக்கப்பட வேண்டும். அப்படி நமது பஞ்சாயத்துகளுக்கு இந்த தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் போது, கிராமப்புற உள்கட்டமைப்புகள் சீக்கிரமாகவே வலுப்பெற கூடும். ஏனெனில் வளர்ந்த இந்தியா என்பது டெல்லியில் மட்டும் கட்டப்டும் ஒரு விஷயமில்லை; இது இந்தியாவின் ஒவ்வொரு மூலையில் உள்ள கிராமம், நகரம் வளர்ச்சியை சார்ந்துதான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் வளர்ச்சி மற்ற வளரும் நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு!
Indian Emblem and Taj Mahal

5. விவசாயத்தின் மேம்பாடு

இந்தியாவின் வளர்ச்சி டெக்னாலஜியை மட்டும் சார்ந்து இல்லை. அந்த டெக்னாலஜியை உருவாக்கும் மனிதரின் ஆரோக்கியத்தையும் சார்ந்து தான் உள்ளது. அதில் முக்கிய பங்கு வகிப்பது நம் நாட்டில் இயற்கையான முறையில் விளையப்படும் பயிர்கள், மர, செடி கொடிகள் தான். ஆகையால் விவசாயத்தை ஒதுக்கி டெக்னாலஜியை வளர்ப்பதை விட, எப்படி விவசாயத்திலும் நம் விவசாயிகளால் அதன் தன்மை மாறாமல் டெக்னாலஜியை பயன்படுத்தலாம் என்று விவசாய வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.

6. நிலைத்தன்மை (Sustainability):

உலகம் நிலைத்தன்மையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் போது, இந்தியா விரைந்து செல்ல வேண்டும். சுத்தமான எரிசக்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரங்கள் மற்றும் பொறுப்பான நுகர்வு (responsible consumption) போன்றவை நம்முடன் முடியும் வெறும் பேச்சு வார்த்தைகள் மட்டும் இல்லை; அவை இந்த கிரகத்துடனான நமது ஒப்பந்தம் என்று அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து, காடுகளின் வளர்ச்சியை பாதுகாப்பிலிருந்து அனைத்திலும் நம் வளர்ச்சிக்கான பங்கு இருக்கிறது. ஏனெனில் வளர்ந்த இந்தியா என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டும் சார்ந்தது அல்ல; இது வரவிருக்கும் அடுத்த தலைமுறைகளுக்கு நம் பாரம்பரியத்தை எவ்வாறு அவர்கள் கைகளில் சேர்க்கிறோம் என்பதையும் பொறுத்துதான்.

logo
Kalki Online
kalkionline.com