மனித குல நலனுக்காகப் பாடுபட்ட அறிவுலகத்தின் அற்புதப் பரிசு!

நவம்பர் 7, மேரி கியூரி பிறந்த தினம்
Marie Curie
Marie Curie
Published on

லக வரலாற்றில் பெண்களுக்கு உரிமையே வழங்கப்படாத ஒரு காலகட்டத்தில் நோபல் பரிசை இரண்டு முறை வென்ற பெண்ணான Maria Salomea Skłodowska Curie என்கிற மேரி கியூரி 1867ம் ஆண்டு நவம்பர் 7ம் நாள் போலந்தின் வார்சவ் நகரில் பிறந்தார்.

மரியாவின் தந்தை அறிவியல் ஆசிரியராக இருந்ததால் மரியாவுக்கு இயற்கையிலேயே விஞ்ஞானியாக வரவேண்டும் என்ற இலட்சியத்துடன் தனது 24வது வயதில் பாரிஸின் ஸாபான் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்ற காலகட்டத்தில் பியரி கியூரியை மணந்து கொண்ட மரியா, மேரி கியூரி ஆனார்.

1897ல் முனைவர் பட்டத்துக்காக யுரேனியம் என்னும் தனிமத்தை இருவரும் சேர்ந்து ஆராய்ச்சி செய்தபோது தோரியம் போன்ற சில தனிமங்களுக்கு கதிரியக்க சக்தி இருப்பதைக் கண்டறிந்ததன் விளைவாக இரண்டு புதிய தனிமங்கள் உலகுக்குக் கிடைத்தன.

முதலாவது தனிமத்திற்குத் தான் பிறந்த போலந்தின் நினைவாக 'பொலோனியம்' என்றும், இரண்டாவது தனிமத்திற்கு ரேடியம் எனவும் பெயர் சூட்டினார் மேரி கியூரி. ரேடியத்தின் உண்மையான விளைவைக் கண்டறிய தன்னையே சோதனைக்கூட எலியாக மாற்றிக்கொண்ட பியரி கியூரி, தனது உடலின் மேல் ரேடியத்தைப் பயன்படுத்திப் பார்த்தார். அதனை 'கியூரி தெரபி' என்று அழைத்தனர்.

ரேடியத்தையும் இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்த கியூரி தம்பதிக்கு 1903ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1906ம் ஆண்டு பியரி கியூரி இறந்ததும் அவர் வகித்து வந்த பாரிஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. அந்தப் பொறுப்பை வகித்த முதல் பெண்மணி மேரி கியூரிதான்.

முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில்,  1911ம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசு ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில்  வழங்கப்பட்டது. நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு, முதல் உலகப்போர் மூண்ட போது 'X' கதிர்கள் மூலம் உடலின் எந்தப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று நம்பிய கியூரி,  காயம் அடைந்தவர்களை நகர்த்தக் கூடாது என்பதற்காக, 'எக்ஸ்-ரே'  உருவாக்கிச் சுமார் 150 தாதியர்களுக்குப் பயிற்சியும் அளித்தார்.

இதையும் படியுங்கள்:
சூரசம்ஹாரத்தின் கதை தெரியுமா?
Marie Curie

பல ஆண்டுகள் ரேடியத்தோடு ஆராய்ச்சி செய்ததால் கதிரியக்கத் தாக்கம் ஏற்பட்டு மனித குலத்தின் நலனுக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்ட மேரி கியூரிக்கு 'லுக்கிமீயா' வகை புற்றுநோய் ஏற்பட்டு கதிரியக்கத்தால், விரல்களையும் பார்வையையும் இழந்த மேரி, போலந்தில் 1934ம் ஆண்டு ஜூலை மாதம் 4ம் தேதி தனது 67 வயதில்  இறந்தார்.

மேரி கியூரியின் சடலம், பிரான்ஸில் அவருடைய கணவர் புதைக்கப்பட்ட கல்லறையிலேயே புதைக்கப்பட்டது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 1995ம் ஆண்டு மேரி கியூரி மற்றும் அவருடைய கணவரின் அஸ்தி அந்தச் சாதாரண கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டு, பாரிஸில் உள்ள புகழ் பெற்ற பாந்தியன் அரங்குக்கு 1995ல் மாற்றப்பட்டது. வரலாற்றில் மிக முக்கியமானவர்களுக்கு பிரெஞ்சு தேசம் வழங்கும் உயரிய மரியாதை இது. இதுவரை இப்படி மரியாதை செய்யப்பட்டிருக்கும் ஒரே பெண் மேரி கியூரிதான்.

மேரி கியூரி நினைத்திருந்தால், ரேடியம் என்ற அரிய தனிமத்தைக் கண்டுபிடித்ததற்காக நிறைய சம்பாதித்திருக்கலாம். ஆனால், தனது கண்டுபிடிப்பு மனித குலத்துக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்ததால் அவர் அதை விரும்பவில்லை. இத்தகைய அரிய சாதனையை செய்து இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற மகத்தான பெண்மணியான மேரி கியூரியின் பிறந்த தினம்தான் இன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com