
நேற்று, இன்று, நாளை... எல்லாவற்றையும் கடந்த நளினமான அழகுக்குரிய நடிகை பி. சரோஜாதேவி.
கிட்டத்தட்ட 25 வருடங்கள்... மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் இலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என மூவருடனும் கதாநாயகியாக நடித்து சகாப்தம் படைத்தவர்.
ஒரே நேரத்தில் மூன்று ஷிஃப்டுகளில், நான்கு மொழிகளில் நடித்து, சூப்பர் ஸ்டார்களைவிட அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைக்குரியவர்.
கோவைத் தமிழ், மதுரைத் தமிழ் என்றெல்லாம் தமிழில் வட்டார உச்சரிப்புகள் இருப்பது போலவே, 'சரோஜாதேவி தமிழ்!" என்றும் ஒன்று உண்டு. தமிழும், கன்னடமும் கலந்து அவர் கொஞ்சிக் கொஞ்சிப் பேசியதே, தனி ஸ்டைலாக ரசிகர்கள் மனத்தில் நின்றுவிட்டது.
பத்மஸ்ரீ, பத்மபூஷண், டாக்டர் என உயரிய பட்டங்கள் எத்தனை எத்தனை பெற்றிருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களால் தரப்பட்ட 'கன்னடத்துப் பைங்கிளி!' என்ற அந்த முதல் பட்டத்தையே பொக் கிஷமாக நினைப்பவர்.
இன்று (14-07-2025) நடிகை சரோஜாதேவியின் மறைவையொட்டி மங்கையர் மலரில் 2008ம் ஆண்டு வெளியான 'தொட்டால் பூ மலரும்' என்ற தொடரின் முதல் அத்தியாயதிலிருந்து ஹைலைட்ஸ் இங்கே...
இத்தொடருக்காக சரோஜா தேவியை அவரது இல்லத்தில் சந்தித்து, பல சுவாரசிய தகவல்களைத் திரட்டி, தொகுத்து வழங்கினார் மங்கையர் மலரின் அன்றைய பொறுப்பாசிரியர் அனுராதா சேகர். பெரும்பாலும் சரோஜா தேவி அவர்களின் வார்த்தைகளைக்கொண்டே இத்தொடர் அமைந்தது சிறப்பு...
பனி மறைத்த பெங்களூர்... மல்லேஸ்வரத்தில் உள்ள 'ருத்ரம்மா' இல்லம் பதினெட்டு கிரவுண்டு நிலத்தில், பரந்த தோட்டத்துக்கு நடுவே இருக்கிறது பி. சரோஜாதேவியின் வீடு. மிகச்சரியாக, காலை பத்து மணிக்கெல்லாம், வரவேற்பறையில் தயாராக இருந்தார்.
வீடு முழுக்க, சட்டமிடப்பட்ட பெரியப் பெரிய புகைப்படங்கள். சிறுமியாக... இரட்டை ஜடையில்...
பிரதமர் நேருவிடம் விருது வாங்குவதுபோல..., 'புதிய பறவை'யின் கதாநாயகியாக... ('உன்னை ஒன்று கேட்பேன்' பாடலின் அழகிய போஸ்) , நூற்றுக்கணக்கான படங்கள், விருதுகள், நினைவுப் பரிசுகள் என அழகாகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்.
"இது நாடோடி மன்னன் பட ஸ்டில்… எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படம்... நான் கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப் படமும் அதுதான்! தமிழ் சினிமா ஃபீல்டுல அப்ப, எம்.ஜி.ஆரை எல்லோரும் சின்னவர்னுதான் கூப்பிடுவாங்க... பெரியவர்னு அவருடைய அண்ணா ஜி. சக்கரபாணியைக் குறிப்பிடு வாங்க!" என்று ஒவ்வொரு படமாகச் சுட்டிக்காட்டி மலரும் நினைவுகளில் மூழ்கினார் சரோஜாதேவி.'
"கன்னட 'கச்சதேவயானி' படத்தோட படப்பிடிப்பு, சென்னையி நடந்து கொண்டிருந்தது அப்போது, தகதகக்கும் நிறத்தில், வசீகரமான ஒருவர் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும், அங்கிருந்தவங்க எல்லோரும் பணிவோட எழுந்து வணக்கம் தெரிவிச்சாங்க. ஆனால். எனக்குத்தான் அவர் யாருன்னு தெரியலை. அதனால நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். இயக்குநர் கே. சுப்ரமணியம், அந்த நபரை அழைத்துச் சென்று, படப்பிடிப்புத் தளத்தைச் சுற்றிக்காட்டினார். புறப்படும் சமயம் அவர் என்னைக் காட்டி, "யார் இந்தப் பெண்?" என்று கேட்டார்.
அதற்கு கே. சுப்ரமணியம், "இவங்க பேரு சரோஜாதேவி. இந்தப் படத்தின் கதாநாயகி. பெங்களூர் பொண்ணு!'' என்று தகவல் சொன்னார்.
அவர் என்னை ஒருமுறை பார்த்துவிட்டு, பதிலேதும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுவிட்டார். மறுபடி எல்லோரும் எழுந்து மரியாதையுடன் வழியனுப்பினார்கள்.
"யார் சார் இது? சூரியன் மாதிரி பிரகாசமா இருக்காரே?" என்று இயக்குனரிடம் கேட்டேன்.
அவர்தான் எம்.ஜி.ஆர். என்று பதில் வந்தது.
அதைக்கேட்டு எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
'எவ்வளவு பெரிய மனிதர் வந்திருக்கிறார்... எதுவும் தெரியாமல் சும்மா இருந்துட்டேனே!' என்று ரொம்ப வருத்தப்பட்டேன்.
ஆனால், அந்த வருத்தத்தை அப்படியே திருப்பிப்போட்டு சந்தோஷப்படும்படியாக, அடுத்த சில நாட்களிலேயே 'திருடாதே!' படத்தில் கதாநாயகியாக, என்னை அவர் ஒப்பந்தம் செய்தார்.
ஆனால் என் சந்தோஷம் நீடிக்கவில்லை. எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக, ஒரு புதுமுகம் நடிக்கப்போகிறார் என்ற செய்தி, தமிழ்த் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது.
"அந்தக் கன்னடப் பெண்ணுக்கு, சரியாகத் தமிழ் பேசக்கூட வராதே! புது முகத்தைப் போட்டு எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்?" என்றெல்லாம் பேச ஆரம்பித்தார்கள். அநாவசியமான இந்தக் கிசுகிசுக்கள் எனக்குக் கவலையை உண்டாக்கின.
எம்.ஜி.ஆர். பரந்த மனப்பான்மையைக் கொண்டவர். என்னுடைய மனக்கலக்கத்தைப் புரிந்துகொண்டார். எனக்கும் தன்னம்பிக்கை வரவேண்டும், தயாரிப்பாளர்களும் என்னை கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, தம்முடைய சொந்தப் படமான 'நாடோடி மன்னன்' லேயே என்னைக் கதாநாயகியாக நடிக்க வைத்துவிட்டார்.
'நாடோடி மன்னன்' படத்தில் ஏற்கனவே, பானுமதி, எம்.என்.ராஜம் என இரண்டு கதாநாயகிகள் இடம் பெற்றிருந்தார்கள். எனக்காக, எம்.ஜி.ஆர். மூன்றாவதாக ஒரு கதாநாயகி வேடத்தை உருவாக்கி, அந்தப் படத்தில் சேர்த்துவிட்டார்!
'நாடோடி மன்னன்' படத்தில் ஒரு புதுமை. முதல் பாதி கறுப்பு - வெள்ளையிலும், பிற்பகுதி வண்ணத்திலும் எடுத்திருந்தார்கள். 'மானைத் தேடி மச்சான் வரப்போறான் ... ஹே ... வரப் போறான்!' என்ற பாடல் ஆரம்பிக்கும் போதுதான், நான் அறிமுகமாவேன். வண்ணப் பகுதியும் அங்கிருந்துதான் ஆரம்பமாகும்!
தமிழ்ச் சினிமாவின் எவர்க்ரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்! அவருடன் அவருடைய சொந்தப் படத்திலேயே, கதாநாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றால்... நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!
சொல்ல மறந்துட்டேனே! 'நாடோடி மன்னன்' மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதற்குப் பின் எம்.ஜி.ஆர்.-சரோஜாதேவி ஜோடி வெகுவாக வரவேற்பு பெற்றதுதான் உங்க எல்லோருக்குமே தெரியுமே!..."