
அன்றைய காலகட்டத்தில், திருமணம் போன்ற விசேஷங்களில், தஞ்சாவூர் லட்டு, வடை, ஒரு கூட்டு, பொரியல், பருப்பு நெய், சன்ன அரிசி சாதம், மணக்க மணக்க கத்தரி முருங்கை, மாங்காய் போட்ட சாம்பார், தக்காளி ரசம், தாளித்தமோர், மாங்காய் தாளிப்பு ஜவ்வரிசி சேமியா பாயாஸம், வாழைப்பழம் ஆகியவைதான் விருந்தை அலங்கரித்தன. வந்தவர்கள் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். இலைகளில் மீதம் விழுமா?, என நரிக்குறவர்களும், பிச்சைக்காரர்களும் காத்திருப்பார்கள்.
ஒரு திருமணத்திற்கு சென்றால், மாப்பிள்ளைப் பற்றியோ, மணமகளைப்பற்றியோ அக்கறை கொள்வதில்லை. 'ப்பா பிரமாதமான சாப்பாடு' போட்டாங்க, சிறப்பான கல்யாணம் என்று சிலாகிக்கிறார்கள். ஆக மணவிருந்துதான் சிறப்பைத் தீர்மானிக்கிறது.
அதற்காக இன்றைய காலக்கட்டத்தில் விருந்து என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவு செய்து, முப்பது ஐட்டம், இருபது ஐட்டம் என்று போட்டிப் போட்டுக் கொண்டு, நாம் இதுவரை சாப்பிடாத, வினோதமான பெயர்களில் பலகாரங்களை பரிமாறுகிறார்கள்
அதையும் முன்னரே பரிமாறி விட்டு, பந்தியில் அமர வைக்கின்றனர். விருந்தினர்கள் வந்தமர்ந்து, இதில் கொஞ்சம், அதில் கொஞ்சம் எனக் கொறித்துவிட்டுப் போகின்றனர்.
ஏனெனில் பெரும்பாலனவர்கள் வியாதிகளை சொந்தமாக்கி வைத்திருக்கிறார்கள். சர்க்கரை வியாதிகாரர்களுக்கு ஸ்வீட்டும், கிழங்கு வகைகளும் ஒத்துக் கொள்ளாது. சிலகொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு எண்ணெய், நெய், கிழங்கு வகைகள் தொந்தரவை கொடுக்கும். இன்னும் அல்ஸர் நோயாளிகள், செரிமான பிரச்னை உள்ளவர்கள் என்று பட்டியல் நீளும்.
அப்படியானால் அவர்களால் ஒதுக்கித் தள்ளப்பட்ட உணவு வகைகள், குப்பைக்கூடையில் குளிர்காயப் போய்விடும்.
இன்று நரிக்குறவர்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் யாரும் அடித்துப் பிடித்து குப்பைத் தொட்டியருகே கூத்தடிப்பதில்லை. நாகரீகம் அவர்களைத் தொட்டு விட்டது. அதனால் திருந்திக் கொண்டிருக்கிறார்கள். 'ஓ ஸாமியோ' என்ற ஓலம் வெகுவாகக் குறைந்துப் போயிருக்கிறது.
வீணாகும் உணவு, பல பேரின் பசித்தீயை அணைக்கக்கூடியது. பல வறியவர்களின் வாழ்வாதாரம். இன்றைய சூழ்நிலையில், பந்தியில் அமர்ந்தபின் பரிமாறலாம். அல்லது விருப்பம் போல தேர்ந்தெடுத்து உண்ணும் 'பஃபே' முறையில் விருந்தை நடத்தலாம்.
எனவே ஒவ்வொரு திருமண மண்டபங்களிலும், அருகேயுள்ள, அனாதை இல்லங்கள், ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் ஆகியவற்றின் முகவரி மற்றும் தொலைப் பேசி விவரங்களைத் தெளிவாக எழுதி வைப்பதை கட்டாயமாக்கப்பட வேண்டும். மிகுதியாகும் உணவு வகைகளை, உடனுக்குடன் அந்த இல்லங்களுக்கு வழங்கிட வேண்டும். அவர்களின் பசியாறுவது மட்டுமன்றி, மனமார வாழ்த்துவார்கள்.
அதுமட்டுமின்றி, 'உணவுப் பொருட்களை வீணாக்காதீர்', 'வேண்டியதை கேட்டு உண்பீர்', குடிநீரை வீணாக்காதீர்', 'விருந்து வைப்பது அவர்கள் விருப்பம்', 'தேவையானதை தேர்ந்தெடுத்து உண்பது உங்கள் கடமை' என்ற வாசகங்களையெல்லாம், உணவுக் கூடங்களில் தெளிவாக எழுதி வைக்க வேண்டும். இதிலென்ன கவுரவ குறைச்சல்?
முத்தாய்ப்பாக, வசதி இருக்கிறதே என்பதற்காக, வரிந்துக் கட்டிக் கொண்டு விருந்தை வைத்து பல லட்சங்களை வீணாக்காதீர்கள். பாரம்பரிய உணவுவகைகளுக்கு மாறுங்கள். விருந்தினர்கள் திருப்தியாக உணவருந்தி விட்டு செல்வார்கள்.