

உலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10 ஆம் தேதி, ஹோமியோபதி மருத்துவ முறையை நிறுவிய டாக்டர் கிறிஸ்டியன் ஃபிரெட்ரிக் சாமுவேல் ஹானிமனின் (Dr. Christian Friedrich Samuel Hahnemann) பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
ஹோமியோபதி மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் நன்மைகளைப் பரப்பவும், இந்த மாற்று மருத்துவ முறையை மேம்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஹோமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டு மருத்துவர் சாமுவேல் ஹானிமன் ஆங்கில மருத்துவத்தில் எம்.டி படித்தவர். அலோபதி மருத்துவ முறையின் உதவியால் நோயாளிகளை முழுமையாக நோயிலிருந்து விடுவிக்க முடியவில்லை. அதே நேரத்தில் உட்கொள்ளும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகளை கண்டு வெகுண்ட, ஹானிமன் மருத்துவத் தொழிலையே வெறுத்து போய் அதை விட்டு விலகி புத்தகங்களை மொழி பெயர்ப்பு செய்யும் தொழிலை செய்து வந்தார்.
அப்போது 'கலன்' எனும் மருத்துவர் எழுதிய 'மெட்டிரியா மெடிக்கா' எனும் புத்தகத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சின்கோனா மரப்பட்டைகள் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும் என்ற வாசகம் அவரை கவர்ந்தது. அதன் அடிக்குறிப்பில் நோய்யை குணமாக்கும் தன்மை அதிலுள்ள 'கசப்புத்தன்மை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வாசகம் ஹானிமனை சிந்திக்க வைத்தது. உலகில் கசப்புத்தன்மை கொண்ட மூலிகைகள் ஏராளமாக இருக்கும் போது எப்படி சின்கோனாவுக்கு மட்டும் இப்படி குணமாக்கும் தன்மை இருக்க முடியும்? கசப்புத் தன்மை தாண்டிய தனித்துவம் எதோ ஒன்று நிச்சயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
இந்த எண்ணத்தை சோதிக்க அது அவரை அந்த மரப்பட்டை சாற்றைக் குடிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து ஹானிமனுக்கு மலேரியா காய்ச்சல் வந்து விட்டது. அப்போது தான் அவருக்கு ஒரு உண்மை தெரிந்தது. 'எது ஒன்றை உருவாக்கும் தன்மை உடையதோ அது தான் அழிக்கும் ஆற்றல் கொண்டது' இதனைக் கொண்டு 'லைகாஸ்கேர்லைகாஸ்' என்ற தத்துவத்தை உருவாக்கினார். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் 'முள்ளை முள்ளால் எடுக்கும் தத்துவம்' என்பது தான் அது.
தனக்கு வந்த மலேரியா காய்ச்சலை குணமாக்க அதிக அளவில் சின்கோனா மரப்பட்டை சாற்றைக் குடித்தார். நோயும் முழுமையாக குணமானது. விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்த போது அவை முன்பைவிட அதிக அளவில் வீரியம் கொண்டதாக இருப்பது தெரிய வந்தது. இவ்வாறு நீர்த்துப்போகும் நுட்பமான அளவுகளின் வீரிய மூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796ம் ஆண்டு 'ஹோமியோபதி' என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். ஹோமியோபதி என்ற சொல், 'ஒத்த' என்று பொருள்படும் 'ஹோமியோ' மற்றும் 'துன்பம்' அல்லது 'நோய்' என்று பொருள்படும் 'பேத்தோஸ்' ஆகிய கிரேக்க வார்த்தைகளிலிருந்து உருவானது.
நோயை உருவாக்கும் தன்மை உடைய பொருட்களையே மருந்தாக கொடுப்பது ஹோமியோபதி மருத்துவத்துக்குரிய சிறப்பு. 'ஒத்த நோய்க்கு ஒத்த மருந்து' (Like cures like) என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் இந்த முறை, இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய வரலாற்றைக் கொண்டது. ஹோமியோபதி, அதன் பாதுகாப்பான மற்றும் முழுமையான குணப்படுத்தும் அணுகுமுறைக்காக மில்லியன் கணக்கான மக்களால் நம்பப்படும் உலகின் இரண்டாவது பெரிய மருத்துவ முறையாகக் கருதப்படுகிறது.
1973 ஆம் ஆண்டின் ஹோமியோபதி மத்திய கவுன்சில் சட்டம், ஹோமியோபதி மருத்துவ முறையை இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையாக ஆக்கியது. இது நாட்டின் மருத்துவ முறைகளில் ஒன்றாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் 3.45 லட்சம் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி மருத்துவர்கள், 277 ஹோமியோபதி மருத்துவமனைகள், 8,593 ஹோமியோபதி மருந்தகங்கள் மற்றும் 277 ஹோமியோபதி கல்வி நிறுவனங்கள் உள்ளன. தேசிய ஹோமியோபதி ஆணையம் (NCH), முந்தைய 1973 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக நவீன 2020 ஆம் ஆண்டு சட்டத்தைக் கொண்டு வந்து கல்வி மற்றும் நடைமுறையை ஒழுங்குபடுத்தியது.