

மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கப்பலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 66 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். அதன் நினைவாகவும், பணியின்போது பலியான தீயணைப்புத்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதியை தீ தொண்டு நாளாக தேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையால் அனுசரிக்கப்படுகிறது.
பண்டைய காலத்தில் தீப்பிடித்த இடத்திற்கு அருகே உள்ள ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் வரை மக்கள் சங்கிலி தொடராக நின்று தண்ணீரை எடுத்து வந்து மாற்றி மாற்றி ஊற்றி தீயை அணைக்கும் முறை இருந்தது. பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரிசையாக நின்று கொண்டு வாளிகள் (பக்கெட்) தண்ணீரை நிரப்பி ஒவ்வொருவர் கைக்கு மாற்றி தீயை அணைக்க உதவுவார்கள். இவர்கள் 'பக்கட் பிரிகேடியர்' எனப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் வரலாறு பண்டைய ரோமில் அகஸ்டஸ் காலத்தில், கி.மு. 3 ம் நூற்றாண்டில் தொடங்கியது. எகிப்து நாட்டின் அலக்சாண்டிரியாவை சேர்ந்த 'செஸிபியஸ்' என்பவர் ஒரு வகை பிஸ்டன் பம்பை கி.மு.200-ல் உருவாக்கி இருந்தார். இது தீயணைப்பு சாதனமாக பயன்பட்டது. ஆரம்பத்தில் தோல் வாளிகள் மூலம் தண்ணீர் ஊற்றும் 'பக்கெட் பிரிகேட்' முறை பயன்படுத்தப்பட்டதற்கு மாற்றாக இது இருந்தது.
1666 ம் ஆண்டு லண்டனில் நடந்த மிகப்பெரிய தீ விபத்து ஒன்றில் 13,000 கட்டிடங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்திற்கு பிறகு பொது மக்கள் தாமாகவே முன்வந்து தீயணைப்பு நிறுவனங்களை ஆரம்பித்தனர். 'ஆபத்து' என்று தகவல் கிடைத்தால் எப்படிப்பட்ட வேலைகளையும் விட்டு விட்டு சம்பவ இடத்திற்கு வருவதாய் உறுதி மொழி வழங்கின இந்நிறுவனங்கள்.
லண்டன் தீவிபத்து, வரலாற்றில் தீவிபத்தின் கோரத்தை உலகிற்கு உணர்த்திற்று. இங்கிலாந்துகாரர்கள், அப்போதுதான், தாங்கள் பயன்படுத்தும் சிறிய பம்புகள் தீயணைக்க போதுமானதல்ல என்பதை உணர்ந்தார்கள். நவீன கருவிகள் இருந்தால்தான் இனி இதுபோன்ற கொடிய தீவிபத்துகளை எதிர்கொள்ள முடியும் என்று அறிந்து கொண்டனர். அதுவே அவர்களை பெரிய பிஸ்டன் எந்திரத்தை தயாரிக்க தூண்டுகோலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் அதை சுலபமாக எடுத்துச் செல்லும் வகையில் ஒரு வண்டியில் பொருத்தி தீயணைப்பு வாகனத்தை உருவாக்கினார்கள். நெருப்பு அணைக்கும் எந்திரம் 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்தில்தான் தயாரிக்கப்பட்டது.
1736-ல் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் பெஞ்சமின் பிராங்கிளின் முழுமையான தீயணைப்பு இலாகாவினை தொடங்கினார். தீயணைப்பு பிரிவில் முன்னேற்றங்களும், மாற்றங்களும் மிக மெதுவாகவே நிகழ்ந்தன. 1824-ல் ஸ்காட்லாந்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் எடின்பர்கில் முதல் தொழில்முறை தீயணைப்புப் படை உருவானது.
முழுமையான தீயணைப்பு சேவை அமைப்பு முதன் முதலாக 1835 ம் ஆண்டு நியூயார்க் நகரின் சின்சினாட்டியில் 4 பேரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையமே அடுத்தடுத்த வருடங்களில் 40 பேர் கொண்ட குழுவாக இயங்கியது. 1855 ம் ஆண்டு நியூயார்க் நகரில் முதல் தீயணைப்பு இல்லம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் தான் தீ பிடிப்பது, அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்ய காப்பீடு நிறுவனங்கள் ஆய்வு அதிகாரிகளை நியமிக்க தொடங்கியது.
1841 ல் அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தானியங்கி தீயணைப்பு என்ஜினை உருவாக்கியது. 1861-ல் நீராவி தீயணைப்பு என்ஜின் உருவாக்கப்பட்டது. இவை முதல் உலகப்போரில் தீயணைக்க பேருதவியாக இருந்தன. குதிரைகள் இந்த நீராவி என்ஜினை வீதிகளில் இழுத்துக் கொண்டு ஓடின. இந்தக் காலத்தில் தீயணைப்பு படைகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அது காப்பீட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டன. தங்கள் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்திருந்த கட்டிடங்கள், நிறுவனங்களுக்கு மட்டுமே அவை தீயணைப்பு சேவையை வழங்கின.
இரண்டாம் உலகப்போரின்போது தீயணைப்பு படையில் நவீன மாற்றங்கள் ஏற்பட்டன. தீயை கட்டுப்படுத்தும் நவீன எந்திரங்கள், சாதனங்கள் உருவாகின. கட்டிடங்களின் உயரங்களுக்கு ஏற்ப மேலேஎழும்பும் ஏணிகள், அதிகமான நீரை இறைக்கும் டீசல் என்ஜின்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், ஹெல்மெட் ஆகியவை, ஆஸ்பெஸ்டாஸ் இழைகளால் ஆனவை. ஆஸ்பெஸ்டாஸ் நெருப்பில் எரியாது. மின்சாரத்தை கடத்தாது. 2000 முதல் 3000 சென்டி கிரேடு வரை வெப்பத்தை தாங்க கூடியது. சுவாசக் கருவிகள் மற்றும் மேம்பட்ட பயிற்சி முறைகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதால் தீயணைப்பு துறையை 'நான்காவது ராணுவம்' என அழைக்கிறார்கள்.