இன்சூரன்ஸ் கம்பெனிகளே பார்த்து பயந்து ஓடிய ஒரே நடிகர்!

ஏப்ரல் 7: மின்னல் வேக மன்னன் ஜாக்கி சான் பிறந்த நாள்!
Jackie Chan
Jackie ChanAI Image
Published on

வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்களிலேயே அதிக ஸ்டண்ட்களைச் செய்த ஒரே நடிகர் என்று கின்னஸ் ரிகார்ட் புகழும் ஒரு அதிசய மனிதர் யார் தெரியுமா? குழந்தைகளுக்கும் கூடத் தெரியும். அது மின்னல்வேக மன்னன் ஜாக்கி சான் தான் என்று.

07-04-1954 அன்று ஹாங்காங்கில் பிறந்து, 71 வயது முடிந்தாலும் இன்னும் தனது பாணி அதிரடி சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் ஒரு நடிகர். ஒரு தயாரிப்பாளர். டைரக்டர். ஸ்டண்ட் சொல்லித் தந்து அதைக் காட்சிகளாகப் பரிமளிக்க வைக்கும் நிபுணர். பாடகர். இப்படிப் பல பரிமாணங்களுடன் மிளிர்பவர் இவர்.

அனைவரையும் தியேட்டர்களில் தங்கள் இருக்கைகளிலிருந்து துள்ளிக் குதிக்க வைக்கும் இவர் வாழ்க்கை சோக மயமான ஆரம்பத்தில் துவங்கியது.

ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய சிறு பை. கையில் இருந்த ஒரு டாலர் விமானநிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்க. பழப்பையோ அம்மா மகனுக்காக ஆசையாக வாங்கித் தந்தது.

பயந்த முகத்துடன் விமானநிலையம் வந்து தந்தை, தாய் இருவரையும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிய அந்தச் சிறுவன் தான் ஜாக்கி சான். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தையை பிரசவம் பார்க்க உதவிய டாக்டருக்கே 20 டாலருக்கு விற்க எண்ணியவர் அவர் தந்தை!

ஏழு வயது வரை கஷ்டப்பட்டு வளர்த்து விட்டு இனிமேலும் வளர்க்க முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது, பையனை அவனது சிஃபு (ஆசிரியர்) யூ சா யூயென் என்பவர் சொற்பத் தொகையை அவனது பெற்றோருக்குத் தள்ளி விட்டு தனது சீன ட்ராமா அகாடமியில் சேர்த்துக் கொண்டார். அடிதடி, சிலம்பம், குதித்தல், தாண்டல் உள்ள எல்லா சர்க்கஸ் வேலைகளும் அங்கே அத்துபடி!

காலத்தின் வேகமான மாற்றத்தால் தனது மாணவர்களை திரைத்துறைக்கு அனுப்ப வேண்டியிருந்தது சிஃபுவுக்கு!

அங்கே தான் ஜாக்கி சானுக்கு அடித்தது அதிர்ஷ்டம். முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் நடிக்க அவரை டைரக்டர் அழைத்தார்.

"என்ன காட்சி? எப்படி நடிக்க வேண்டும்?"

“அங்கே போய்ப் படு. செத்தவன் போல இருக்க வேண்டும்.” இது தான் திரைத்துறையில் அவர் 'நடித்த' அல்லது பிணம் போல் 'படுத்த' முதல் காட்சி.

படிப்படியாக எல்லா ஸ்டண்ட் காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்து பத்தொன்பதாவது வயதில் ஆக்ஷன் டைரக்டர் ஆகி விட்டார் அவர்.

எதற்கு டைரக்ட் செய்கிறாய்; நீயே நடி என்று ஒரு படத் தயாரிப்பாளர் கூற, 1976ல் 'லிட்டில் டைகர் ஃப்ரம் காண்டன்' என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்ஸுடன் சிறிய மீசையுடன் தோன்றினார் ஜாக்கி சான்.

ப்ரூஸ் லீ அப்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். அவருடன் இரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் ஜாக்கி சான். அவரது நடிப்பைப் பார்த்த ப்ரூஸ் லீ தன்னுடன் வருமாறு அழைத்து அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ப்ரூஸ் லீ மனதில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அடுத்த ஆறாம் நாள் ப்ரூஸ் லீ இறந்து விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை ஜாக்கி சான் கேட்டு மனம் நொந்தார்.

1978ல் வெளியான ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ என்ற படம் அவருக்கு திரைத்துறையில் ஒரு ப்ரேக்கைத் தந்தது. அன்று வெற்றி ஏணியில் ஏறத் தொடங்கியவர் ஏணியின் உயரமே தெரியாமல் இன்னும் ஏறிக் கொண்டே இருக்கிறார்.

சூப்பர் ஸ்டாராக அவர் இருநூறு படங்களுக்கும் மேலாக நடித்து விட்டார்.

மின்னல் வேக மன்னனாக அவரது அதிரடி நடிப்பு உலகையே அசத்தி விட்டது. ஒவ்வொரு படமும் வெற்றி.

சண்டை வீரர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி 'ட்ரங்கன் மாஸ்டர்' என்ற படத்தில் நடித்து வெற்றி கண்ட அவர் மீண்டும் 'ட்ரங்கன் மாஸ்டர் II' என்று 1994ல் நடித்து மாபெரும் வெற்றியை அடைந்தார்.

நிமிஷத்திற்கு நிமிஷம் சாகஸம் என்ற ரீதியில் ஒவ்வொரு காட்சியிலும் உயிரே போய்விடும் என்ற நிலையில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு யாரும் இன்சூரன்ஸ் தர முன்வரவில்லை.

போலீஸ் ஸ்டோரி என்ற படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து ஆர்மர் ஆஃப் காட் என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அதில் கோட்டை ஒன்றிலிருந்து மரக்கிளைக்குத் தாவும் காட்சியை அவர் வடிவமைத்தார். ஆனால் தவறி, ஒரு பாறையின் மீது மோத அவர் மண்டையில் பலமான அடி. அவரது ஒரு காது கேட்கும் சக்தியை நிரந்தரமாக வெகுவாக இழந்து விட்டது.

தலை முதல் பாதம் வரை அவர் உடலில் அடிபடாத இடமே கிடையாது. 'ட்ரங்கன் மாஸ்டர் II' ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது. 'ஆர்மர் ஆஃப் காட்' படத்தில் மண்டையில் அடி. 'தண்டர் போல்ட்' என்ற படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் கண் இமைகள் சிதைந்தன. 'மிராக்கிள்' படத்தில் வலது கண்ணும் 'ட்ரங்கன் மாஸ்டர்' படத்தில் இடது கண்ணும் பாதிக்கப்பட்டன. 'ட்ராகன் ஃபிஸ்ட்' என்ற படத்தில் மூக்கு மூன்று முறை உடைபட்டது. 'ரம்பிள் இன் தி ப்ராங்க்ஸ்' என்ற படத்தில் கன்னத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. 'ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ' படத்தில் பற்கள் உடைந்தன. கழுத்துப்பட்டை, வலது தோள், முதுகு, வலது கை, விரல்கள் ஆகிய அங்கங்கள் 'சூப்பர் காப், தண்டர் போல்ட், போலீஸ் ஸ்டோரி, ப்ராஜெக்ட் ஏ' ஆகிய படங்களில் சேதம் அடைந்தன. இடுப்பு 'ஆர்மர் ஆஃப் காட்' படத்தில் முறிய இடது பாதம் 'சிடி ஹண்டர்' படத்தில் முறிந்தது.

போதும் போதும் லிஸ்ட் என்கிறீர்களா? இது தான் அவர் ஸ்டண்டின் துணிச்சல்!

இதையும் படியுங்கள்:
'செய் அல்லது செத்துமடி!' ஜாக்கி சானின் சாதனை சீக்ரெட்!
Jackie Chan

அவரது கால்களுக்கு எந்தப் படமும் சிறிதாகவே இருக்கிறதே என்பது தான் அவர்களது ரசிகர்களின் விமரிசனம்.

ஏராளமாகப் பணத்தைச் சம்பாதித்த அவர் பெருமளவில் அதை நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு உதவி வருகிறார். உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி, ஏழைகள் படிக்க உதவி என பல்வேறு விதங்களில் இவரது தொண்டு இன்றும் தொடர்கிறது.

எண்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிய இவரது வெற்றிப் பட்டியல் மிக நீண்ட ஒன்றாகும்.

தாய்ப்பாசத்துடன் தாயை மீண்டும் பின்னால் சந்தித்த இவர், அவரைத் தன் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் செல்வார். ஆனால் பயங்கரமான சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்படும் போது அவர் காப்பி கலக்கச் சென்று விடுவார். காட்சி முடிந்தவுடன் நகைச்சுவையாகப் பேசும் போது அங்கு ஆஜராகி விடுவார்.

தனது மனைவி பற்றி அவர் பகிரங்கமாகப் பேசுவதே இல்லை. ஒரு முறை ஒரு பத்திரிகையாளர் அவரிடம் உங்களுக்குத் திருமணம் நடந்து விட்டதா என்று கேட்க ஒரு கேர்ள் ப்ரண்ட் இருப்பதாக ஜாக்கி சொல்ல ஒரு பெண்விசிறி, பாலம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்து அவர் கப்சிப்.

அமெரிக்காவையும் சீனாவையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுவேன் என்று தனது வாழ்க்கை பற்றிய லட்சியத்தைச் சொல்லும் ஜாக்கிசானை வெறும் ஸ்டண்ட் நடிகர் என்று மட்டும் சொல்லி முடித்து விட முடியாது.

உலகம் காணும் அபூர்வமான மனிதநேயப் பண்பாளர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com