

குழந்தைகளின் உலகம் கற்பனைகளால் ஆனது. அந்தப் பொற்காலக் கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பவை புத்தகங்கள் மட்டுமே.
புகழ்பெற்ற தேவதைக் கதைகளின் தந்தை என்று அழைக்கப்படும் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Hans Christian Andersen) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2ஆம் தேதி 'சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்' கொண்டாடப்படுகிறது.
சர்வதேச குழந்தைகள் புத்தகத் தினத்தைப் பற்றி நாம் அறிய வேண்டியது நிறைய.
IBBY (International Board on Books for Young People).
நோக்கம்: உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு நல்ல தரமான புத்தகங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக லாப நோக்கற்ற முறையில் செயல்படும் ஒரு சர்வதேச அமைப்பு இது.
இந்த அமைப்புதான் 1967-ஆம் ஆண்டிலிருந்து, புகழ்பெற்ற கதைச்சொல்லி ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 2-ஐ 'சர்வதேச குழந்தைகள் புத்தகத் தினமாக' அறிவித்துக் கொண்டாடி வருகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பாசெல் (Basel) நகரில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.
உலகளாவிய அங்கீகாரம் பெற்ற அமைப்பு.
இன்றைய காலகட்டத்தில் நம் குழந்தைகள் கைபேசிகளிலும் (Smartphones), கணினித் திரைகளிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஒரு காலத்தில் பாட்டி சொன்ன கதைகளும், புத்தகப் பக்கங்களில் நாம் பார்த்த சித்திரங்களும் தந்த அந்தப் பரவசத்தை இன்றைய தலைமுறைக்கு மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
வாசிப்பின் நன்மைகள்: எவ்வாறு ஏற்படும்?
ஒரு கதையைப் படிக்கும்போது, அந்தக் காட்சியைத் தன் மனதில் தானே உருவாக்கிக் கொள்ளும் திறன் ஒரு குழந்தைக்கு வளர்கிறது.
புதிய சொற்கள், சரியான உச்சரிப்பு மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை இயல்பாகவே கைக்கூடும். இதனால் மொழி அறிவு ஏற்படும்.
'பஞ்சதந்திரக் கதைகள்' முதல் 'ஈசாப் கதைகள்' வரை, அனைத்துமே குழந்தைகளுக்கு அறநெறிகளையும், சமூக ஒழுக்கத்தையும் போதிக்கின்றன.
பெற்றோர்களின் கடமை:
தினமும் செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் வாசிக்க வைப்பதே.
குழந்தைகளுக்கு நாம் ஒரு கதைச் சொல்லியாக மாற வேண்டும். அத்துடன் ஒரு குழந்தைக்கு நாம் தரும் ஆகச்சிறந்த பரிசு ஒரு நல்ல புத்தகம் தான். குழந்தைகளின் பிறந்தநாளுக்கு விளையாட்டுப் பொருட்களுக்குப் பதிலாகப் புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன் ஒரு 15 நிமிடம் உங்கள் குழந்தைகளுக்கு அல்லது பேரக்குழந்தைகளுக்குக் கதை படித்துக் காட்டுங்கள். இது அவர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பிணைப்பை (Bonding) அதிகப்படுத்தும்.
முடிவுரை:
'ஒரு புத்தகம் என்பது உங்கள் கையில் இருக்கும் ஒரு பூந்தோட்டம்' என்பார்கள். வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி, நம் வீட்டுச் சிறுவர்களுக்கு ஒரு புதிய புத்தகத்தை அறிமுகம் செய்வதோடு மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் புத்தகங்கள் பரிசாகக் கொடுங்கள்.
அவர்கள் உலகத்தைப் புத்தகங்களின் வழியாகப் பார்க்கட்டும்; அவர்களின் கற்பனைச் சிறகுகள் விரிவடையட்டும்!