ஓவியர் மாயா காலமானார்!

Artist Maya
Artist Maya
Published on

த்திரிகை உலகில் ஓவியர் மாயா மறக்கவோ, தவிர்க்கவோ முடியாதவர். இவரது இயற்பெயர் மகாதேவன் என்பதாகும். இவர் நேற்று மாலை தனது உடல் வயோதிகம் காரணமாகக் காலமானார். திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தை தமது பூர்வீகமாகக் கொண்ட இவர், ஓவியம் வரைவதன் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக, பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே ஓவியப் பணிக்கு வந்து விட்டார்.

ஓவியர் மாயா, 1950களில் தொடங்கி, 1978ம் ஆண்டு வரை ஆனந்த விகடன் பத்திரிகையில் பணிபுரிந்தார். இவரது முதல் ஓவியம் ஆனந்த விகடனில் 1955ம் ஆண்டு ஜனவரி இதழில் ‘சாமிக்கண்ணு’ எனும் சிறுகதைக்காக வெளியானது.

‘கல்கி’ குழும இதழ்களில் வெளியான பல்வேறு சிறுகதைகளுக்கு இவர் வரைந்த ஓவியங்கள் என்றும் மறக்க முடியாதவை. பார்த்தவுடன் இது இவரது ஓவியம்தான் என அடையாளம் காணும் வகையில் தனித்துவமாகவும் உயிரோட்டமாகவும் காண்பவர் கருத்தை கவரும்விதமாகவும் இருந்தன.

ஜெயகாந்தன், சாவி மற்றும் பல பிரபல எழுத்தாளர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் ஓவியர் மாயா. இவர், ‘மாயா சித்ராலயா’ எனும் பெயரில் ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார். மேலும், ‘மாயா வெட்டிங் கார்ட்ஸ்’ எனும் ஒரு பத்திரிகை நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இது கொரோனா காலகட்டம் வரை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தீ வதந்தியால் ரயிலில் இருந்து குதித்து 13 பேர் உயிரிழப்பு - ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Artist Maya

பல்வேறு தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் அட்டைகளில் தமது கைகளினால் வரைவதையே அவர் கடைசி வரை பெரிதும் விரும்பினார். தம்மை விட வயதில் இளைய ஓவியர்களுடன் எந்தவித மன வேற்றுமையும் பாராட்டாமல் அவர்களோடு நெருங்கிப் பழகியதோடு, அவர்களின் ஓவியப் பணியை மனம் திறந்து பாராட்டும் குணம் கொண்டவர் ஓவியர் மாயா.

சமூகத்தில் மதிப்பும் மரியாதையையும் தேடும் மனிதர்களில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மிகச் சாதாரண மனிதராக நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கிறார் ஓவியர் மாயா. தமது வாழ்நாள் முழுவதையும் ஓவியம் வரைவதிலேயே கழித்து மறைந்திருக்கும் இவரது ஓவியப் பணியை பத்திரிகை உலகம் என்றும் மறக்காது.

ஓவியர் மாயாவின் ஆன்மா இறைவன் திருநிழலில் என்றும் இளைப்பாற பிரார்த்திக்கிறது ‘கல்கி குழுமம்.’

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com