
தொழில்நுட்பம் எவ்வளவு தான் பெரிய அளவில் வளர்ந்திருந்தாலும் விபத்து என்பது தடுக்க முடியாததாகவே உள்ளது. சமீப காலங்களில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்தியாவில் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே ரயில் விபத்துகள் மாறிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். பாதுகாப்பான பயணம் என்று சொல்லப்படும் ரயில் போக்குவரத்திலும் விபத்து நடப்பதால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
மனித தவறு, தொழில் நுட்ப கோளாறு, நாசவேலை போன்ற காரணங்களால் ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ரயிலை கவிழ்க்கும் முயற்சியில் பல விபத்துகள் நடத்துள்ளது. சில விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 2024-ம் ஆண்டில் மட்டும் 25-ம்மேற்பட்ட ரயில் விபத்துக்கள் நடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில் மோதி விபத்து, ரயில் கவிழ்ந்து விபத்து என்று கேள்விபட்டிருப்போம். ஆனால் மகாராஷ்டிராவில் வதந்தியால் ரயிலில் இருந்து குதிக்கும் போது மற்றொரு ரெயில் மோதியதில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘லக்னோ-மும்பை புஷ்பக்’ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவில் உள்ள பச்சோரா என்ற இடத்திற்கு வந்தபோது ரயிலின் பெட்டி ஒன்றில் தீப்பொறி பறந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் ரயிலில் தீவிபத்து நடந்ததாக வதந்தி பரவிய நிலையில், பயணிகள் இடையே பீதி ஏற்பட்டு, அதில் ஒரு பயணி அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததில் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையத்தின் நடுவில் நின்ற ரயிலில் இருந்து உயிர் பயத்தால் பயணிகள் பலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தனர். அப்போது மற்றொரு தண்டவாளத்தில் வந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது மோதியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்களில் சிலரது உடல்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டது. சிலரது உடல்கள் ரயில் சக்கரத்தில் சிக்கி நசுங்கி அந்த இடமே ரத்த களறியாக மாறியது. காயமடைந்த பயணிகளுக்கு அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் இறந்த 13 பேரில், 7 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஆறு பேர் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும் காணாமல் போனவர்களின் உடல் உறுப்புகள் தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதயப்பூர்வமான இரங்கலை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “காயம் அடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்ப்டடு வருவதாகவும், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் பிற அதிகாரிகளிடம் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதோடு, காயமடைந்தவர்களை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.