
கல்வித் துறையில் கணிதம் மிக முக்கியமான பாடம். அன்றாட வாழ்க்கை முதல் விஞ்ஞானம் வரை கணிதத்தின் பயன்பாடு அத்தியாவசியம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலருக்கு கணிதம் என்றாலே கசக்கும். ஆனால் ஒரு சில மாணவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குவார்கள். நம்மில் பலரும் சிறிய கணக்கைக் கூட கால்குலேட்டரில் தான் போட்டு பார்ப்போம். ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது மூளையையே கால்குலேட்டாரக பயன்படுத்தி அசர வைக்கிறார். 14 வயதே ஆன அந்தச் சிறுவனின் பெயர் ஆர்யன் சுக்லா.
ஆர்யன் சுக்லாவிற்கு காகிதமும் தேவையில்லை; கால்குலேட்டரும் தேவையில்லை. ஏனெனில் இவரே ஒரு மனித கால்குலேட்டர் தான்.
மனக்கணக்கில் சிறந்து விளங்கும் ஆர்யன் சுக்லா ஒரே நாளில் 6 கின்னஸ் சாதனைகளைப் படைத்து, கணித மேதைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். ஒரு சிறுவனுக்கு எப்படி இந்த அளவிற்கு கணிதத் திறமை என பலரும் இவரை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் நகரைச் சேர்ந்த ஆர்யன் சுக்லா, சிறு வயதிலிருந்தே கணிதத்தில் சிறந்து விளங்கினார். 6 வயதாக இருக்கும் போதே, உலகளவில் நடைபெற்ற பல்வேறு மனக்கணிதப் போட்டிகளில் வென்று சாதனைப் படைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில், 50 ஐந்து இலக்க எண்களை வெறும் 25.19 விநாடிகளில் கூட்டி சாதனை புரிந்தார். அதாவது ஒவ்வொரு எண்ணையும் கூட்ட இவருக்கு வெறும் 0.5 விநாடி தான் தேவைப்பட்டுள்ளது. துபாயில் மனக்கணக்குப் போட்டியை சமீபத்தில் ஏற்பாடு செய்தது கின்னஸ் நிறுவனம். இதில் பங்கேற்ற ஆர்யன் சுக்லா, 100 நான்கு இலக்க எண்களை வெறும் 30.9 விநாடிகளில் கூட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அடுத்ததாக 200 நான்கு இலக்க எண்களை 1 நிமிடம் 9.68 விநாடிகளில் கூட்டி அசத்தினார். 50 ஐந்து இலக்க எண்களை வெறும் 18.71 விநாடிகளில் கூட்டினார்.
கூட்டலில் மட்டுமல்ல பெருக்கல் மற்றும் வகுத்தலிலும் நான் கில்லி என இந்த நிகழ்ச்சியில் ஆர்யன் நிரூபித்தார். 20 இலக்க எண் ஒன்றை 10 இலக்க எண்ணால் வகுக்க இவருக்கு 5 நிமிடம் 42 விநாடிகளே தேவைப்பட்டது. 2 எட்டு இலக்க எண்களை 2 நிமிடம் 35.41 விநாடிகளில் பெருக்கினார். அதேபோல் 2 ஐந்து இலக்க எண்களைப் பெருக்க 51.69 விநாடிகளை எடுத்துக் கொண்டார். இந்த ஆறு மனக் கணக்குகளுக்கும் விடையளிக்க, ஆர்யன் பேப்பர் பேனாவைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் மனக்கணக்கில் 6 கின்னஸ் சாதனைகளைப் படைப்பது என்பது அசாத்தியமான ஒன்று. ஆனால் இதனை சாத்தியம் என்று நிரூபித்துள்ளார் ஆர்யன் சுக்லா. எந்தவொரு செயலை செய்வதற்கு முன்பும் பயிற்சி அவசியம். அதேபோல் மனதைக் கட்டுக்குள் கொண்டுவர யோகா மற்றும் தியானமும் தேவை. இதைத் தான் தினந்தோறும் கடைபிடித்து வருகிறார் ஆர்யன் சுக்லா.
கால்குலேட்டருக்கே சவால் விடும் இவரது இந்தத் திறமை இன்னும் எத்தனை சாதனைகள் புரிய காத்திருக்கிறதோ! ஏனெனில் கணித மேதை இராமானுஜன் பிறந்த நாடல்லவா இது!