ஆகஸ்ட் 19: உலக மனித நேய நாள் - அனைத்து சமயங்களும் வலியுறுத்தும் சீர்மிகு குணம் 'மனித நேயம்'!

World Humanitarian Day
World Humanitarian Day
Published on

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சுவீடனால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு ஏற்ப, ஆகஸ்ட் 19 ஆம் நாளை ஆண்டுதோறும் உலக மனிதநேய நாளாகக் (World Humanitarian Day) கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. மனிதாபிமானம் கொண்டவர்களையும், மனிதாபிமானக் காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவு கூரும் ஒரு நாளாக இந்நாள் அமைந்திருக்கிறது.

மனித நேயம் என்பது சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதைக் குறிக்கிறது. குறிப்பாக, உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்குத் துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்று கூறலாம். மனித நேயத்தின் பொதுவான குணங்களாக அன்பு, கருணை, சமூக நுண்ணறிவு ஆகியவை இருக்கின்றன.

1893 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று குறிப்பிட்டு விவேகானந்தர் வழங்கிய உரை, உலக மக்களிடையே மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது எனலாம்.

"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" என்கிற திருவள்ளுவரரின் குறளும், கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற பாடல் வரியும், "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்கிற வள்ளலாரின் கூற்றும் மனித நேயத்தைத் தமிழில் எடுத்துரைக்கின்றன. 

இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் மாலை வேளைகளில் போர் செய்வது தவிர்க்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது போர் புரிவது தவிர்க்கப்பட்டது என்பது போன்ற கருத்துகள் மனித நேயத்தை விளக்குவதாக அமைந்திருக்கின்றன. போர்க்களத்தில் தன் முன்பு ஆயுதங்கள் எல்லாம் இழந்த நிலையில் நின்ற தனது எதிரியான இராவணனைக் கண்ட இராமன் "இன்று போய் நாளை வா" என்று கூறியதாக கம்ப இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயணத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சி மனித நேயத்தை வலியுறுத்தும் முக்கியக் காட்சியாக இருக்கிறது. 

“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுப்பதற்காகவோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்கிற இசுலாமிய கருத்து (அல்-குர்ஆன்:5:32) மனித நேயத்தை வலியுறுத்துகிறது. 

இயேசு கிறிஸ்து, “உன்னைப் போல் பிறனில் அன்பு கூறு’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இனவெறி, சமயவெறி, ஏழை பணக்காரன் எனும் ஏற்றத்தாழ்வு, அதிகாரம் மற்றும் அடிமைத்தனம் நிறைந்திருந்த காலத்தில் இக்கருத்தைக் கூறியிருப்பது, மனித நேயத்தை அக்காலத்திலேயே வலியுறுத்தியதை வெளிப்படுத்துகிறது. 

எல்லா மக்களும் இயல்பாகவே புத்தர்கள் என்று புத்த சமயம் போதிக்கிறது. மனித குலத்தின் இந்த புத்த சமயக் கண்ணோட்டம், மனித நேயத்திற்கும், உலக அமைதிக்குமான ஒரு முக்கிய மற்றும் அடிப்படைக் கோட்பாட்டை உள்ளடக்கியதாகும். 

இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 19: உலகப் புகைப்பட நாள்! உலகின் முதல் புகைப்படம் எது?
World Humanitarian Day

சமண சமயத்தைப் பின்பற்றுவோர், 1. உயிர்களைக் கொல்லாமை 2. வாய்மை 3. திருடாமை 4. துறவு (துறவு - திருமணம் செய்து கொள்ளாமல், தனியனாய் உலக பந்தபாசங்களை விலக்கி வாழுதல்) 5. ஆசையைத் துறத்தல் என்ற ஐந்து நோன்புகளை முதன்மையாகக் குறிப்பிடுகிறது. இந்த ஐந்து விரதங்களை, “மா விரதங்கள்” என்கின்றனர். இதில் முதல் விரதமான, ‘உயிர்களைக் கொல்லாமை’ என்பது மனித நேயத்தையும் கடந்து அனைத்து உயிரினங்கள் மீதான நேயத்தை வெளிப்படுத்துகிறது.

கன்ஃபூசியஸ் மனித நேயத்தை "பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது" என்றார். மேலும் "நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை" என்றார். மனித நேயம் என்பது, அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது. 

கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் இருவரும் மனிதப் பண்புகள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். ஆனாலும் மனித நேயத்தை பற்றி மனிதப் பண்பாக குறிப்பிடவில்லை. மாறாக அன்பும் கருணையும் முக்கியம் என குறிப்பிடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சுதந்திரத்தின் வகைகள் மற்றும் தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவம்!
World Humanitarian Day

மகாத்மா காந்தியின் அஹிம்சை எனும் பிறரை வருத்தாமைக் கொள்கை, மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இக்கொள்கை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று, அல்பேனியாவில் பிறந்து, இந்தியாவிற்கு வந்து குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியான அன்னை தெரசா, மனித நேயத்தின் முக்கியக் கொள்கைகளாக இருக்கும் அன்பையும் கருணையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் பல்வேறு நற்பணிகளைச் செய்தவர். இவருடைய பணிகளும் மனித நேயப் பணிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக இன்றும் குறிப்பிடப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com