மனிதர்களுக்கு மலேரிய நோய் வருவதற்கு காரணம் பெண் கொசுக்கள் என்று பிரிட்டானியா மருத்துவர் சர் ரொனால்டு ராஸ் அவர்கள் 1897 ஆம் ஆண்டு மலேரியாவுக்கான காரணத்தை கண்டு பிடித்தார். பிரிட்டன் சார்பில் நோபல் விருது வென்ற முதல் நபர்.
இவர் மலேரியா பரவுதற்கு பெண் கொசுக்கள்தான் காரணம் என ஆகஸ்ட் 20ஆம் தேதி கண்டுபிடித்ததை நினைவு கூறும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ஆம் நாள் உலக கொசு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் கொசுக்களால் ஏற்பட்ட நோய்களால் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் இறந்தனர். ஆயினும், இது குறித்த விழிப்புணர்வு நல வாழ்வு அக்கறை மற்றும் மருந்துகளால் இந்த இறப்புகள் குறைந்துள்ளன என கூறப்பட்டுள்ளது.
உலகில் ஏறத்தாழ 3500 வகையான கொசுக்கள் உள்ளன. இந்தியாவில் 400 க்கும் அதிகமான கொசுக்களின் வகைகள் இருக்கின்றன. ஒரு பெண் கொசு தேங்கிய நீரில் ஒரே நேரத்தில் 100 முதல் 300 முட்டைகள் இடும். அது 48 மணி நேரத்திற்குள் பொரித்து விடும்.
கொசுவை விரட்ட 5 இயற்கை வழிகள்:
எலுமிச்சை பழத்தை இரண்டாக அறுத்து எட்டு அல்லது பத்து இலவங்கத்தை நடுப்பகுதியில் குத்தி வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கி அதில் வேப்ப இலைகளை போட்டு நன்கு கொதிக்க வைத்து அதில் கற்பூரம் ஒரு துண்டு போட்டு, கால் டம்ளர் அளவுக்கு நீர் வற்றிய நிலையில் வடிகட்டி ஆறிய பின் மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டி இயந்திரத்தில் ஊற்றி அதில் நறுமண எண்ணெய் சிறிது சேர்த்து படுக்கை அறையில் வைத்து இயற்கையான முறையில் பயன்படுத்தலாம். இந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.
வேப்பெண்ணெய் சிறிது எடுத்து, 5 கற்பூரம் வில்லைகளை பொடி செய்து, அதில் போட்டு நன்கு கலக்கி கற்பூரம் கரைந்த பின்னர் அதை கொசு விரட்டி இயந்திரத்தில் ஊற்றி மின்சாரத்தில் இயங்கச் செய்யலாம். அப்போது அந்த திரவம் ஆவி ஆகிவிடும். அது வீடு முழுவதும் பரவி கொசுவை வர விடாது.
விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்து வீட்டில் படுக்கையறை, சமையலறையில் ஒரு அகல் விளக்கில் ஊற்றி பஞ்சு திரியிட்டு எரிய விட்டால் கொசுக்கள் உள்ளே வராது.
ஒரு அகல்விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி திரிக்கு பதிலாக குபேரன், பெருந்தும்பை, பேய் விரட்டி ஆகியவற்றின் பச்சை இலைகளைப் பறித்து திரிபோல சுற்றி விளக்கில் இட்டு எரிய விட்டால் கொசுக்கள், பூச்சிகள் வராது.