ஒருவருக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. தூக்கம் இல்லை என்றால் பல பிரச்னைகள் ஏற்படும். ஆனால் தூக்கத்தின் போது வரும் குறட்டை அவரை மட்டுமல்ல அருகில் இருப்பவர்களையும் அவஸ்தைக்கு உள்ளாக்கிவிடும். அந்த வகையில் குறட்டை குறித்தும் குறட்டையை போக்குவதற்கான வழிகள் குறித்தும் இந்த பதிவில் காண்போம்.
ஒருவர் தூங்கும் போதும், ஓய்வெடுக்கும் போதும் தொண்டையிலுள்ள தசைகள் தளர்வடைந்து, மூச்சு பாதையின் அளவு இயல்பாகவே குறுகலாகும். அப்போது சுவாச காற்று குறுகிய பாதையில் செல்ல முற்படும்போது எழும் சத்தத்தைத்தான் குறட்டை என்கிறோம்.
குறட்டை யாருக்கு வரும்?
பொதுவாக தொப்பை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை வரும் என்றாலும், சைனஸ் பிரச்சனை, ஆஸ்துமா நோயாளிகளுக்கும் குறட்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட்டு தூங்குபவர்களுக்கும், தொண்டையில், மூக்கில் சதை வளர்ச்சி உள்ளவர்களுக்கும், தைராய்டு, உடல் பருமன் இருப்பவர்களுக்கும் அடினாய்டு/ டான்சில் வளர்ச்சி இருப்பவர்களுக்கும் குறட்டை வரும். மேலும் தூக்க மாத்திரையை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும், போதை வஸ்துகளான சிகரெட், பீடி புகைப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கும் குறட்டை வருவதுண்டு.
குறட்டையினால் வரும் பாதிப்புகள்:
தூக்கமின்மை அபாயத்தை குறட்டை விடுவது அதிகரிக்கச் செய்வதோடு, தொண்டை தசைகளை தளர்த்துவதுடன் காற்றுப்பாதை அடைப்புக்கு அதிக வாய்ப்புள்ளதால் மூச்சுத்திணறல் வர வாய்ப்பிருக்கிறது. இதய தசைகள் பலவீனமாவதோடு ஹார்ட் அட்டாக் வரை இந்த குறட்டை கொண்டு வந்து விடும் என்பதால் இந்த பாதிப்பு இருப்பவர்கள் இதயம், நுரையீரல், தொண்டை உள்ளிட்டவற்றை நன்கு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பயிற்சிகள்:
சுவாச பயிற்சிகள் மூலம் ஆரம்ப நிலை குறட்டையை சரி செய்யலாம். தூங்கும் போது மல்லாந்து படுக்காமல் ஒரு பக்கமாக தூங்குவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு பக்கமாக திரும்பி படுக்க முடியாதவர்கள் முதுகிற்குப் பின்புறம் துணி அல்லது நீளமான தலையணையை வைத்துக்கொண்டு படுப்பதால் குறட்டையை குறைக்கலாம்.
ஓய்வில்லாமல் வேலை பார்ப்பவர்களுக்கும் படுக்கையறைகள் தூசிகள் தலையணைகள் போர்வை அழுக்காக இருந்தாலும் குறட்டை வரும்.
எளிய நிவாரணங்கள்:
சூடாக உள்ள தண்ணீரில் யூகலிப்டஸ் ஆயிலை போட்டு ஆவி பிடிக்கலாம்.
ஏலக்காய் தூள் அரை ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தாலும் குறட்டையில் இருந்து விடுதலை பெறலாம்.
துளசி, புதினாவை சமமாக எடுத்து, தண்ணீரில் காய்ச்சி அந்த தண்ணீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உறங்குவதற்கு முன்பாக குடித்து வருவது, தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது, மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் குறட்டையை குறைக்கலாம்.
தினமும் சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகம் மூன்றையும் சமமாக தூள் செய்து, 2 வேளை டீ தயாரித்து குடிப்பது, லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு இவைகளை வைத்தும் டீ தயாரித்து குடித்தால் குறட்டை குறையும்.
ஒரு கிளாஸ் நீரில், ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூளை கலந்து குடிப்பது, சுத்தமான நெய்யை லேசாக சூடாக்கி, மூக்கில் ஓரிரு துளி விட்டு, இரவு தூங்க செல்வது, ஆலிவ் எண்ணெயில் தேன் கலந்து சாப்பிட்டு வருவது போன்றவையும் குறட்டையை குறையச் செய்யும்.
குறட்டை பழம் எண்ணெய்:
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குறட்டைப் பழத்திலிருந்து ஒரு லிட்டர் சாறு, ஒரு லிட்டர் நல்லெண்ணெய், 20 கிராம் இடித்த மிளகு என மூன்றையும் ஒன்றாக காய்ச்சி, வடிகட்டினால் கிடைக்கும் எண்ணெய்யை வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் குறட்டை குறையும்.
மேற்கூறிய வழிமுறைகள் எவ்வளவுதான் இருந்தாலும் இவைகள் எல்லாம் தற்காலிக நிவாரணம் அளிக்கக் கூடியதாக இருப்பதால் நிரந்தர தீர்வுக்கு டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதே முறையான பாதுகாப்பாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)