August 21 - world senior citizens day உங்களுக்கான சிறப்புத் திட்டங்கள் இதோ!

Senior Citizens Day
Senior Citizens Day
Published on

நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்களின் துயர் துடைக்கவே ஆண்டுதோறும் உலக மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. மூத்த குடிமக்களுக்கு உதவும் சிறப்புத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அலசுகிறது இந்தப் பதிவு.

மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, மரியாதை, ஆதரவு மற்றும் அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி, உலக மூத்த குடிமக்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் ஐநா சபையின் அறிவுறுத்தலின் படி இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர்கள் இருப்பார்கள்; அவர்களுக்கு எவ்வித குறையுமின்றி பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. தாத்தா பாட்டிகள் இருக்கும் வீட்டில் வளரும் குழந்தைகள் நன்னெறியுடன் வளர்வார்கள் என்பதில் ஐயமில்லை.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை நாம் மூத்த குடிமக்கள் எனவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களை சூப்பர் மூத்த குடிமக்கள் எனவும் அழைக்கிறோம். வாழ்வில் பல கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, அதனைச் சமாளித்து இத்தனை வருடங்கள் வாழ்வதே பெரிய விஷயம். அவ்வகையில் மூத்த குடிமக்களுக்கு நாம் எப்போதும் மரியாதை அளிக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல கடமையும் கூட. வயதானவர்களை சுமையாக கருதாமல், சுகமாக கருதினால் அவர்களின் கடைசி காலம் இனிமையாக இருக்கும்.

வீட்டின் ஆணிவேராய்த் திகழும் மூத்த குடிமக்களுக்கு அரசு சார்பில் பல சலுகைகளும், திட்டங்களும் உள்ளன. ஆனால் பலருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. சிலருக்கு மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிந்தாலும் கூட, அதனை பயன்படுத்திக் கொள்ளத் தவறி விடுகின்றனர்.

இலவச மருத்துவக் காப்பீடு:

வயதான காலத்தில் மூத்த குடிமக்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சினை என்றால் அது உடல்நலக் கோளாறுகள் தான். இப்பிரச்சினைக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ‘ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' (AB-PMJAY) என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையை அளிக்கிறது. இத்திட்டத்தில் பயன்பெற https://abdm.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

பேருந்தில் இலவச பயணம்:

மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கட்டணமில்லா பயண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு, அருகில் இருக்கும் போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. மேலும் அரசுப் பேருந்துகளில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முன்பக்கம் இரு இருக்கைகள் அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இலவச மருத்துவக் காப்பீடு: மத்திய அரசின் இந்தத் திட்டம் உங்களுக்கு தான்!
Senior Citizens Day

இரயில் பயணத்தில் கட்டணச் சலுகை:

இரயில் பயணத்தைப் பொறுத்த வரை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50% கட்டணச் சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40% கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மூத்த குடிமக்களுக்கான இந்தக் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் இந்தச் சலுகையை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என மூத்த குடிமக்கள் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.

விமான போக்குவரத்து சலுகை:

இந்தியன் ஏர்லைன்ஸ், சஹாரா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு சாதாரண பொருளாதார வகுப்பில் 50% கட்டணச் சலுகையை வழங்குகிறது. இந்த சலுகையைப் பெற சில நிபந்தனைகளும் உண்டு.

மாதாந்திர ஓய்வூதியம்:

மூத்த குடிமக்கள் தங்களது செலவினங்களை சமாளிக்க அந்தந்த மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்டத் தொகையை ஓய்வூதியமாக வழங்கி வருகின்றன. தற்போது தமிழ்நாட்டில் மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது.

அதிக வட்டி விகிதம்:

பொதுவாக எதிர்காலத் தேவைக்கு சேமிக்க நினைத்தால் நாம் அதிகமாக வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களையே நாடிச் செல்வோம். வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களில் கூட மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை அளிக்கின்றன. அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.2% வட்டி வழங்கப்படுகிறது. வங்கிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு விதமான வட்டி விகிதங்களை அளிக்கின்றன.

வரிச் சலுகை:

ஆண்டு வருமானம் ரூ.5 இலட்சம் வரையுள்ள மூத்த குடிமக்களுக்கு தனிநபர் வரி செலுத்துவோர் பிரிவு 87A இன் கீழ், 100% வரிச்சலுகை அளிக்கப்படுகின்றன. இதுதவிர சேமிப்புத் திட்டங்களிலும் மூத்த குடிமக்களுக்கென சில வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

உதவி எண்:

நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் அவசர காலங்களில் 14567 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

உணவு தானியங்கள்:

நியாய விலைக் கடைகளில் 60 வயதிற்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

இளைஞர்களை நல்வழிப்படுத்தி வருங்காலத்தை கட்டமைக்கும் பக்குவமும், பொறுப்பும் நிறைந்த மூத்த குடிமக்களை மதிப்போம்; என்றும் ஆதரவு அளிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com