ஆகஸ்ட் 29: International Day against Nuclear Tests - ஒரு நாள் அனைத்து அணு ஆயுதங்களும் அழிக்கப்படும்!

International Day against Nuclear Tests
International Day against Nuclear Tests
Published on

1945 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாளில் அணு ஆயுதச் சோதனை தொடங்கியதிலிருந்து, தற்போது வரை 2,000-க்கும் அதிகமான சோதனைகள் நடந்துள்ளன. அணுசக்திச் சோதனையின் தொடக்க நாட்களில், வளிமண்டலச் சோதனைகளால் அணுசக்தி வீழ்ச்சியின் ஆபத்துகள் ஒரு புறம் இருக்க, மனித வாழ்வில் அதன் பேரழிவு விளைவுகளைப் பற்றிச் சிறிது கூடக் கருத்தில் கொள்ளப்படவில்லை. நம் உலக வரலாற்றில் முந்தைய வரலாறுகளைப் படித்துப் பார்த்தால், அணு ஆயுதச் சோதனையின் திகிலூட்டும் மற்றும் சோகமான விளைவுகள் நமக்கு அணு ஆயுதம் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றன.

இதையெல்லாம் உணர்ந்த கஜகஸ்தான் குடியரசு, 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று செமிபாலடின்ஸ்க் அணுசக்திச் சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூரும் நோக்கில்,  இந்நாளை அணுசக்திச் சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. 

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 64-வது அமர்வுக் கூட்டத்தில், இத்தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 29 ஆம் நாள், 'அணுசக்திச் சோதனைகளுக்கு எதிரான நாள்’ (International Day against Nuclear Tests) என்று அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தில், "அணு ஆயுதச் சோதனை வெடிப்புகள் அல்லது வேறு ஏதேனும் அணு வெடிப்புகளின் விளைவுகள் மற்றும் அணு ஆயுதம் இல்லாத உலகத்தின் இலக்கை அடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, அவை நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுக்கிறது. 

2010 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளின் தொடக்க நினைவாகக் குறிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடத்திலும், உலகெங்கிலும் கருத்தரங்குகள், மாநாடுகள், கண்காட்சிகள், போட்டிகள், வெளியீடுகள், விரிவுரைகள், ஊடக ஒளிபரப்புகள் மற்றும் பிற முயற்சிகள் என்று பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்நாள் நிறுவப்பட்டதிலிருந்து, இருதரப்பு மற்றும் பலதரப்பு அரசாங்க நிலை முன்னேற்றங்கள் மற்றும் குடிமைச் சமூகத்தில் பரந்த இயக்கங்கள் அணுசக்தி சோதனைகளைத் தடை செய்வதற்கான காரணத்தை முன்னெடுக்க உதவியுள்ளன. 

அதன் பிறகு, "அணுவாயுதங்களைப் பயன்படுத்துதல் அல்லது அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு எதிரான ஒரே முழுமையான உத்தரவாதம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணுவாயுதங்களை முற்றிலுமாக அகற்றுவது மட்டுமே" என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, செப்டம்பர் 26 ஆம் நாளை, "அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்" என்று அறிவித்தது. 

அணு ஆயுதங்களை மொத்தமாக ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள் முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கடைப்பிடிக்கப்பட்டது. பிற நிகழ்வுகள் மற்றும் செயல்கள், அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்திற்காக வலுவாக வாதிடும் உலகளாவிய சூழலை வளர்த்தெடுத்துள்ளது. 

இதையும் படியுங்கள்:
அணுவிலிருந்து மின்சாரம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?
International Day against Nuclear Tests

அனைத்து வகையான அணுசக்தி சோதனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான பன்னாட்டுக் கருவியாக அமைந்திருப்பது, 1996 ஆம் ஆண்டு விரிவான அணு சோதனைத் தடை ஒப்பந்தம் (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

ஒரு நாள் அனைத்து அணு ஆயுதங்களும் அழிக்கப்படும் என்பது ஐ.நா.வின் நம்பிக்கை. அதுவரை, அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உலகம் செயல்படும் நிலையில் அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான பன்னாட்டு நாளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com