தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் - பிறந்த நாள் ஜூன் 27!

ஏடிஎம்...
ஏடிஎம்...
Published on

டிஎம் என்று சொல்லப்படும் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தின் பிறந்த நாள் ஜூன் 27. இதனை எந்த நேரமும் மணி என்றும் சொல்லலாம். முதல் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்ட பொன்னாள் 27 ஜூன் 1967. நிறுவப்பட்ட இடம் பார்க்லேஸ் வங்கி, என்வீல்ட், கிரேட் பிரிட்டன். இதனை வடிவமைத்து நிறுவியவர் ஜான் ஆட்ரியன் ஷெபர்ட் பாரன்.

ஒரு முறை அவசரத் தேவைக்காக வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார் பாரன். அலுவல் நேரம் முடிந்து விட்டதால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. தானியங்கி சாக்லெட் இயந்திரம் இருக்கும்போது, ஏன் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரம் இருக்கக் கூடாது. சாக்லெட்டிற்கு பதில் பணம், அவ்வளவுதானே என்று தீவிர ஆலோசனையின் பயனாக உருவானது ஏடிஎம். முதலில் ஏடிஎம் பணம் எடுக்க 6 இலக்கப் பின் நம்பர் வைத்திருந்தார் பாரன். அவருடைய துணைவியார் கரோலின், 6 இலக்க எண்ணை நினைவில் வைத்திருப்பது கடினம் என்று சொன்னதால், அதனை 4 இலக்க எண்ணாக மாற்றி வடிவமைத்தார்.

இதற்குப் பின் பல நாடுகள் ஏடிஏம் வடிவமைப்பதில் இறங்கினர். டான் வெட்செல் அமெரிக்காவின் ஏடிஎம் இயந்திரம் வடிவமைத்தார். செப்டம்பர் 2, 1969, கெமிக்கல் வங்கி நியூயார்க் நகரில் முதல் பணம் செலுத்தும் இயந்திரத்தை நிறுவியது. இந்தியாவில் முதல் தானியங்கி இயந்திரம் 1987ஆம் வருடம் HSBC வங்கி மும்பாயில் உபயோகத்திற்கு வந்தது.

உலகில் மொத்தம் 30 இலட்சம் தானியங்கி இயந்திரங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதாவது 3000 மக்களுக்கு ஒரு ஏடிஎம். பிப்ரவரி 2024 கணக்கின் படி இந்தியாவில் மொத்தம் 2.19 இலட்சம் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள் உள்ளன. இதே காலகட்டத்தில் பிப்ரவரி 2016ஆம் வருடம் 1.97 இலட்சம் இயந்திரங்கள் இருந்தன. தானியங்கி இயந்திரங்களால் ஏற்பட்ட முதல் தாக்கம், பணம் எடுப்பதற்கு என்று வங்கிகளுக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. வங்கிகளில் பணிக்கு இருக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

நமது நாட்டிற்கும், தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்திற்கும் தொடர்பு உள்ளது. முதல் இயந்திரத்தை வடிவமைத்து, நிறுவிய பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த பாரன், இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஷில்லாங்கில் பிறந்தவர். தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்கள், நமக்குத் தேவையான பணத்தை குறைவான கரன்சி நோட்டுகளில் அளிக்க இராமானுஜன் வகுத்த ‘பிரித்தல் கோட்பாடு’ என்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.   உலகெங்கும் இயங்குகின்ற ஏடிஎம் இயந்திரங்கள் கணித மேதை இராமானுஜன் புகழை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

இதையும் படியுங்கள்:
இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் வெற்றியாளர்?
ஏடிஎம்...

சுவாரஸ்யமான சில தகவல்கள் :

இந்தியாவில் அதிக ஏடிஎம் அமைத்துள்ள வங்கி – ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. 64000க்கு மேல் ஏடிஎம் அமைத்துள்ளன.

பாகிஸ்தான் கில்கிட் பால்டிஸ்தான் நகரில் உள்ள ஏடிஎம் உலகில் அதிக உயரத்தில் உள்ள ஏடிஎம் என்ற பெயர் பெற்றுள்ளது. (4693 மீட்டர், 15,397 அடி). இந்த இயந்திரம் -40 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலையிலும் வேலை செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நியூஜெர்ஸியில் நடமாடும் ஏடிஎம் இயந்திரம் உள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாமல் ஏடிஎம் இயந்திரத்தை ரோமேனியாவில் உபயோகிக்க முடியும்.

ப்ரேஸில் நாட்டில் பயோமெட்ரிக் ஏடிஎம் உபயோகிக்கப்படுகிறது. இதனை உபயோகிக்க, முதலில் கைவிரல் ரேகைகளை பதிவு செய்து, கடவுச் சொல் பதிவு செய்ய வேண்டும்.

சில ஏடிஎம் இயந்திரங்கள் பணம் வழங்கும் சேவை தவிர மற்ற பல மதிப்பு கூட்டும் சேவைகளை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றன. உதாரணத்திற்கு, எஸ்பிஐ ஏடிஎம்கள், எஸ்பிஐ டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மொபைல் எண் புதுப்பித்தல், பதிவு செய்தல், அறக்கட்டளை நன்கொடை, காசோலை புத்தகம் வேண்டி கோரிக்கைகள், டெபிட் கார்ட் வரம்பு மாற்றம் செய்தல், கிரெடிட் கார்ட் விண்ணப்பங்கள் என்று பல உதவிகள் செய்கின்றன.

தற்போது, டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகி வருகின்ற காரணத்தால், ஏடிஎம் உபயோகிப்பவர் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com