
குழந்தைகளாகட்டும், பெரியவர்களாகட்டும், விமானத்தில் பயணம் செய்வதற்குதான் விரும்புவார்கள். டிக்கெட் விலை எப்படி இருந்தாலும் வாழ்வில் ஒருமுறையேனும் வானில் விமானத்தில் பறந்து விட வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு உண்டு. இதனால் விமானப்பயணத்தை விரும்பி வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட காரணங்களால் ரயில் பயணத்தை தவிர்த்து, விமான பயணத்தை விரும்பி வருவோரும் அதிகரித்து விட்டனர்.
வரலாற்றில் முதல் முறையாக நடந்த சாதனை பயணங்கள்:
இதனால், உள்நாடு, வெளிநாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வரலாற்றில் முதல் முறையாக, ஒரே நாளில் 5 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்த புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான புள்ளி விவரங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தமது இணையத்தில் வெளியிட்டு உள்ளது.வரலாற்றில் முதல் முறையாக, 2024 ம்ஆண்டு நவம்பர்.,17 ம் தேதி ஒரே நாளில் 5 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணித்துள்ளனர் என மத்திய விமான போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்குள் மிக நீண்டதூரம் பயணிக்கும் விமானப்பாதையின் தூரம் 2492 கி.மீ. ஆகும். அந்த விமானம் எந்த இடத்திலும் நிற்பதில்லை. இந்த விமான பயணம் சுமார் 3 மணி 40 நிமிடங்கள் எடுக்கிறது. ஏர் இந்தியா விமானம் புது டெல்லியில் இருந்து போர்ட் பிளேயருக்கு இயக்கும் விமானம்தான் இந்த நீண்ட தூர விமானம். நிலம், வங்காள விரிகுடா என்று இரண்டு நிலப்பரப்புகளை கடந்து செல்கிறது.
உலகின் குறுகிய கால விமான சேவை
உலகின் மிகக் குறுகிய வணிக விமானப் பயணம், ஸ்காட்லாந்தின் ஆர்கனீ தீவுகளின் குழுவின் இரண்டு தீவுகளான வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரேக்கு இடையே நடைபெறுகிறது. வெஸ்ட்ரே மற்றும் பாபா வெஸ்ட்ரேக்கு இடையிலான விமானப் பயணம் பொதுவாக 90 வினாடிகளே இருக்கும். வானிலை சரியில்லை என்றால் இந்த பயணம் 2-3 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த விமானப் பயணம், பெரும்பாலான முக்கிய விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதையின் நீளத்தை விடக் குறைவானதாகும்.
உலகின் நீண்ட கால விமான சேவை
சிங்கப்பூர் ஏர்லைன்ஸால் இயக்கப்படும் விமான சேவைதான் உலகின் மிக நீண்ட இடைநில்லா வணிக விமானம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. நியூயார்க்கில் இருந்து சிங்கப்பூர் வரையிலான தூரம் 9,537 மைல்கள். அதாவது 15,348 கிலோ மீட்டர் தூரம். நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் 18 மணி நேரம் 40 நிமிட பயணத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை வந்தடைகிறது இந்த விமானம். இதுவே உலகின் மிக நீண்ட தூர விமானப் பாதையாகும். சிங்கப்பூர்-நியூயார்க் விமானம் இந்த சாதனையை செய்து வருகிறது.
உலகிலேயே முதன் முறையாக பயணிக்கும் பயணியின் உடல் எடைக்கு ஏற்ப விமானக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது சமோவா நாட்டின் "சமோவா ஏர் நிறுவனம்தான். 120. கிலோ எடை கொண்டவர்களுக்கு அங்கே கட்டணம் அதிகம்.