
ஒரு நாளைக்கு பதினைத்து மணிநேரம் வேலை. எனக்கு கிடைக்காத வெற்றி வெறும் ஏழு, எட்டு மணி நேரமே வேலை பார்க்கக்கூடியவனுக்கு கிடைத்து விடுகிறதே என்று நிறைய பேருக்கு அங்கலாய்ப்பு இருப்பது உண்டு. நான் ஒரு கடினமான உழைப்பாளி. ஆனால் அதற்கேற்ற பலன் எனக்கு கிடைப்பதில்லை என்ற கவலை நம்மில் பலரை துன்புறுத்துகிறது.
அதிக நேரம் உழைப்பதால் நாம் உழைப்பாளி என்றொரு பட்டத்தை வேண்டுமானால் பெற்றுக்கொள்ளலாமே தவிர, நமக்கு வெற்றி கிடைப்பது என்பது நாம் எப்படி அந்த நேரத்தை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது
இவ்வளவு நேரம் உழைக்கிறார் என்று நம்மை சுற்றியிருப்பவர்கள் பாராட்டக்கூடும். ஆனால் எவர் ஒருவர் தன்னுடைய நேரத்தை திட்டமிட்டு செலவிடுகிறாரோ, எவர் ஓருவர்தான் செய்கிற நேரத்தில் முழுக்க முழுக்க தன் கவனக் குவிப்பை அதன்மீது செலுத்தி சரியாக வேலை செய்கிறாரோ அவருக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. மற்றவருக்கு உழைப்பாளி பட்டம் மட்டுமே மிஞ்சுகிறது.
அலுவலகத்துக்கு நாம் அதிகாலையிலேயே சென்று விடுவதாலும் வேலை முடித்து வெகுநேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பக்கூடிய ஆட்களாக இருக்கிற காரணத்தினாலும், வெற்றி பின்னால் வந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது .எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம் என்பதைவிட எவ்வளவு திறனோடு வேலை செய்கிறோம் என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம்.
இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. இப்படி பதினான்கு மணி தோம். பதினைந்து மணிநேரம் ஒரு வேலையை செய்துகொண்டே இருக்கிற காரணத்தினால், வேறு எந்த வேலையையும் செய்வதற்கான நேரம் நமக்கு இருப்பதில்லை. ஒய்வெடுத்துக்கொள்வதில் தொடங்கி குடும்பத்திற்காக நேரத்தை செவ்விடுவது வரை எல்லா நேரத்தையும் தம்முடைய அலுவலகப்பணிகளோ அல்லது நாம் செய்து கொண்டிருக்கக் கூடிய வேலையோ சாப்பிட்டு விடுகின்றன.
அதனால் எப்போதும் இறுக்கமான நெருக்கடியோடு நம்முடைய வாழ்க்கை நடக்கிறது. இந்த இறுக்கமான மனநிலை எதையும் நம்மை சுதந்திரமாக செய்ய விடுவதில்லை. வேகமாக சிந்திக்க விடுவதில்லை வேலையில் மனது ஊன்றி செய்கிற வாய்ப்பை அது தடுத்துவிடுகிறது.
போதாக்குறைக்கு நம் பக்கத்தில் இருக்கிற மனிதர் திட்டமிட்டு மிகச்சரியாக வேலைபார்த்து, எட்டு மணி நேரத்துக்குள் வேலை செய்து, அடுத்தடுத்த படிநிலைக்கு உயர்ந்து கொண்டு போகிறபோது, நான் புறக்கணிக்கப் படுகிறேன். என்றொரு கோபம் நம்மை சார்ந்த மனிதர்கள்மீது வருகிறது.
ஒரு சிறு வேலையை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்வதற்கு பெயர் உழைப்பன்று. நம்மிடம் திட்டமிடல் குறித்து பற்றாக்குறை இருக்கிறது என்றுதான் அதை புரிந்துகொள்ள முடியும். உழைப்பு ஓர் அற்புதமான விஷயம், அந்த உழைப்பை நாம் மிகச்சரியாக பயன்படுத்த வேண்டும். அதை ஊன்றிச் செய்யவேண்டும், உள்ளன்போடு செய்ய வேண்டும். அதுதான் முக்கியமேயன்றி எத்தனை மணி நேரம் செய்கிறோம் என்பது இரண்டாம்பட்சம்தான் நன்கு உழையுங்கள், திட்டமிட்டு உழையுங்கள், அடுத்தடுத்த உயரத்துக்கு செல்லுங்கள்.