வளம் தரும் அட்சய திருதியை!

Akshaya Tritiya
Akshaya Tritiya
Published on

- பி.ஆர். லட்சுமி

இன்று அட்சயதிருதியை. சாதாரணமான ஒரு நாளாக இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நாட்குறிப்பில் சேர்க்கப்பட்டது. இன்று அதை பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சித்திரை மாத அமாவாசையிலிருந்து 3 ஆவது நாளில் கொண்டாடப்படுவது அட்சயதிருதியை. இந்த ஆண்டு மே 10ஆம் நாள் விடியற்காலையில் அட்சய திரிதியை தொடங்கியது. அட்சயதிரிதியை என்றால் என்ன? என்று பேருந்தில் ஏறியபடி வடபழனி கோயிலைப் பார்த்தபடி தாயிடம் கேட்ட சிறுவனுக்கு கோயில் வாசலில் இருந்த முனிவர் அழகாக பதில் உரைத்தார்.

“மணிமேகலை காப்பியத்தில் மணிமேகலைக்கு ஒரு அட்சய பாத்திரம் கிடைத்தது. அப்பாத்திரம் அள்ள அள்ள குறையாமல் உணவு தரும். அத்தகைய பாத்திரத்தைப் போன்றதே இந்த புனித நாள். இந்த நாளில் வீட்டிற்கு தங்கம், வைரம், வெள்ளி போன்ற பொருட்கள் வாங்கினால் வருங்காலத்தில் வீடு சுபிட்சமாய் விளங்கும் என்பது மக்களது நம்பிக்கை. அள்ள அள்ள குறையாமல் செல்வச் செழிப்புடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.

திருமாலின் ஒரு அவதாரமான பரசுராமன் பிறந்த நாள் இது. இந்நாளில்தான் கங்கை நதி கைலாசபர்வதத்திலிருந்து இறங்கியதாக சாஸ்திரம் கூறுகிறது.. மனிதன் சம்பாதிப்பது அரைசாண் வயிற்றுக்குத்தானே! அரை சாண் வயிற்றுக்கு உணவிடுபவள் அன்னபூரணியாயிற்றே! அன்னபூரணியின் பிறந்தநாளாகவும் அட்சயதிரிதியை நகைக்கடைகளிலும், கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. செல்வத்திற்கு அதிபதி இலட்சுமி வீட்டிற்கு வரவேண்டும் என்றுதானே அனைவரும் விரும்புவர்” என்று முனிவர் கூறி விட்டுச் சென்றுவிட்டார். சிறுவனும் தலைய ஆட்டியபடி மகிழ்ச்சியாக கோயிலுக்குள் சென்றான்.

ஊரோடு ஒத்து வாழவேண்டும் இல்லையா! முன்னர் தாத்தா தினம், பாட்டி தினம், தந்தையர் தினம், தாய்மார் தினம் எனப் பிரித்துக் கொண்டாடுவதில்லை… பிறந்தநாளைக்கு கேக் வெட்டி கொண்டாடுவதில்லை…. காலத்தின் கட்டாயத்தில் நாம் இதையெல்லாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதைப்போல அட்சயதிரிதியையும் கொண்டாடலாமே!

நடைபாதை வியாபாரி ஒருவர் மாதாமாதம் நகைக்கடைக்கு வந்து செல்வார். நகைச்சீட்டு போடாமல் நகைக்கடைக்குச் சென்று அரை கிராமுக்கும் குறைவாக கிடைக்கும் மில்லி அளவு தங்கத்தைச் சேர்த்து வைக்கிறாராம்! இதுதானே சேமிப்பு! அட்சயதிரிதியை அன்று வாங்கி வைத்த தங்கத்திலிருந்து தமது மகளுக்கு ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் செல்வாராம். இவரால் முடிந்த காரியம் நம்மால் செய்ய முடியாதா என மலைக்கலாம்……

சராசரியாக ஒரு டிகிரி மட்டும் படித்த குடும்பத் தலைவன் இருக்கும் வீட்டில் 20000 முதல் 30000தான் சம்பளம் கிடைக்கும். பெரும்பாலும் வாடகை வீடுதான் வாழ்க்கை. வாடகை வீட்டில் இருக்கும்போது அக்கம்பக்கத்து வீடுகளைப்போல நமது வீட்டிலும் செய்யவேண்டும் என்ற பொய்யான மாயத் தோற்ற அலங்கார வாழ்வு மயக்கத்தினால் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்க நேரிடும். ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு உணவுக்கு 200 எனக் கணக்கிட்டால் மாதம் 6,000 வரும். இது தவிர வீட்டு வாடகை 10,000 போக மீதி 14,000 வரும். இதர செலவுகள் என பத்தாயிரம் போக 4000தான் மாத இறுதியில் மீதி வரும். பள்ளி, கல்லூரி வருடாந்திர செலவுகள் எனக் கணக்கிட்டால் எங்கே தங்கம் வாங்குவது என குடும்பத் தலைவிகள் மலைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
அட்சய திரிதியை – தெரிந்ததும் தெரியாததும்!
Akshaya Tritiya

இந்த வருடம் நகை இல்லாவிட்டால் என்ன? வீட்டில் கல் உப்பு, மஞ்சள், சர்க்கரை, வெல்லம் முதல் இதர மளிகைப் பொருட்களை வாங்கி வைக்கலாம். வீட்டில் இருப்பவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களைச் சமைத்து அளிக்கலாம். சிறிய அளவில் அன்னதானம் அளிக்கலாம். பறவைகளுக்கும், விலங்கினங்களுக்கும் பொது இடங்களில் குடிக்க நீர்வசதி அளிக்கலாம். அடுத்த வருடத்திற்கான சேமிப்பை இன்றிலிருந்தே தொடங்கலாம் இல்லையா?! எப்படி?

சைவம்தான் சாப்பிடுகிறோம்! உணவகங்களில்கூட சாப்பிடுவதில்லை….அவர் கூடுமானவரை அரசு பேருந்துகளில்தான் பயணம் செய்கிறோம்……என பட்டியல் போடும் குடும்பத் தலைவிகளுக்கு முக்கியமான சேமிப்பின் ரகசியம் தெரியுமா?

வீட்டில் நான்கைந்து தொட்டிகள் வைத்தால் கீரைகள் வாங்கும் செலவுகளைக் கட்டுப்படுத்தலாம் இல்லையா? வீட்டுத் தோட்டத்தில் முருங்கை, வாழை மரங்களை நடலாம் இல்லையா!! இன்று நல்லநாள்தானே! இரண்டு பாக்கெட் கீரை விதைகளையாவது நடலாமே!

கிளம்பும் இடங்களுக்கு குறித்த நேரத்திற்கு முன் கிளம்பினால் பொதுமக்களுக்கான வண்டிகளைப் பயன்படுத்தலாம்.

பணியில் இருக்கும் பெண்கள் விஷயமே வேறு! பணியில் இருக்கும் பெண்கள் வாங்கும் சம்பளத்தை மாதாமாதம் வங்கியில் சேமித்து வைத்து பணியிடத்திற்கு அருகில் வீடு வாங்கிவிடவேண்டும். மாதாமாதம் வாடகைப்பணம் மீதியாகுமே! அதில் நாம் விருப்பப்பட்ட நகையை வாங்கி மகிழலாமே!

அப்படியும் நகைக்கடைகளுக்குச் செல்ல பணமில்லையே என்ன செய்வது என யோசிக்கலாம்……நிறைய வெள்ளியிலான கிஃப்ட் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதை வாங்கி இந்த வருடம் மகிழ்ச்சியாக இருக்கலாம் இல்லையா? பண்டிகை கொண்டாடுவதன் பொருள் குடும்பம் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதை இந்த சமுதாயம் உணரவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com