

மார்கழி மாத சுக்ல ஏகாதசி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. துவாபர யுகத்தில் இந்த நாளில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதா உபதேசத்தை வழங்கினார் என்று புராணங்கள் கூறுகின்றன. ‘தர்மத்தின் வீழ்ச்சி ஏற்படும்பொழுதெல்லாம் நான் அதை மீண்டும் நிலைநாட்டத் தோன்றுகிறேன்’ - பகவத் கீதை 4.7. மோக்ஷத ஏகாதசி மற்றும் கீதா ஜயந்தி இரண்டும் ஒரே நாளில் வருகின்றன.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்த புனித நாளை கீதா ஜயந்தி என்று கொண்டாடுகிறோம். இந்த தெய்வீக உரையாடல் மனித குலத்திற்கான நித்திய வழிகாட்டியாகும். இது ஆன்மாவின் தன்மை மற்றும் சரணடைதல், பக்தி மற்றும் ஞானத்தின் மூலம் விடுதலைக்கான பாதையை வெளிப்படுத்துகிறது. பகவத் கீதை என்பது வெறும் தத்துவ நூல் அல்ல. இது பேச்சு வடிவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரே! இந்த நாளில் பக்தர்கள் அதன் போதனைகளை சிந்தித்து அதன்படி வாழ முயற்சி செய்ய வேண்டும்.
டிசம்பர் 1, 2025ம் நாளில் குருக்ஷேத்திரப் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு கிடைத்த மோட்சத்தை நினைவு கூர்ந்து அர்ஜுனனுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய நித்திய ஞானத்தை போற்றுவோம். பக்தியுடன் விரதம் இருப்பது மனதை தூய்மைப்படுத்தும். கீதையை படிப்பது ஆன்மாவை உயர்த்தும். கிருஷ்ணரிடம் சரணாகதி செய்வது அமைதி மற்றும் தெளிவைக் கொடுக்கும். தர்மம், பக்தி, மோட்சம் போன்ற கீதையின் வழியில் செல்ல முயல்வோம். இந்நாள் ஆன்மாக்களுக்கு விடுதலையையும், உயிர் உள்ளவர்களுக்கு தெளிவையும் வழங்கும் நாளாகக் கூறப்படுகிறது.
கீதா ஜயந்தியின் கதை: கௌரவர்களும் பாண்டவர்களும் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதியபொழுது போர் தவிர்க்க முடியாததாக மாறியது. அந்த நேரத்தில் அர்ஜுனன், ஸ்ரீ கிருஷ்ணரின் தலையீட்டை நாடினான். போரின்போது அர்ஜுனன் தனது தாத்தா பீஷ்மரையும், தனக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த குரு துரோணாச்சாரியாரையும் கண்டு இதயம் கலங்கி நின்றான். தனது தாத்தா சிறு வயதிலிருந்தே தன்னை மிகுந்த கவனத்துடன் வளர்த்ததையும், அன்பு பொழிந்ததையும், தனக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த குருவையும் எண்ணி கலங்கி நின்றான்.
அத்துடன் தனது சொந்த உறவினர்களை அழிக்க வேண்டி இருக்கும் என்பதை அறிந்தும் அவன் போரிடத் தயங்கி நின்றான். அர்ஜுனன் போரில் இருந்து ஒரு அடி பின்வாங்குவதற்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபதேசத்தை வழங்கி கர்ம வினைகளின் கோட்பாடுகளை எடுத்து விளக்கி போரிடச் செய்தார்.
கீதா ஜயந்தியின் முக்கியத்துவம்: ஸ்ரீ கிருஷ்ணரின் ஆன்மிகச் செய்திகளைப் படிப்பதுடன் நின்று விடாமல் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக கீதா ஜயந்தி கொண்டாடப்படுகிறது. பகவத் கீதையில் 700க்கும் மேற்பட்ட வசனங்கள் உள்ளன. இன்றைய நாளில் அந்த ஸ்லோகங்களைப் படித்து
ஸ்ரீ கிருஷ்ணரை பூஜை செய்து வணங்குவது சிறப்பு. இந்தப் புனித நூல் அர்ஜுனன் போரை தொடங்க பகவான் கிருஷ்ணரின் போதனைகள் எவ்வாறு உதவியது என்பதை விவரிக்கிறது.
கீதா ஜயந்தி இந்தியாவில் மட்டுமல்ல மலேசியா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இஸ்கான் கோயில்களில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் கோயிலுக்குள் கூடி பகவத் கீதையை படிக்கிறார்கள். அத்துடன் குருக்ஷேத்திரா நகரில் சிறப்பாகக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நாளில் பகவத் கீதையை படிப்பது நம் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களைப் போக்கி நேர்மறையான மனநிலையை வளர்த்துக்கொள்ள உதவும்.