

கிறிஸ்துமஸ் மரமும், கிறிஸ்துமஸ் பாடலாகிய "அமைதியான இரவும்" இல்லாமல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கிடையாது.
இரண்டிற்கும் தனிச்சிறப்புகள் உண்டு. அப்படி என்ன சிறப்புகள்..?
கிறிஸ்துமஸ் மரம்:
கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து, வீட்டு முகப்பில் அல்லது முன் அறையினுள் சிலுவையின் அடையாளத்தோடு வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
முக்கோண வடிவம் கொண்ட கிறிஸ்துமஸ் மரம், இயேசு நாதரின் முப்பரிமாணங்களாகிய, தந்தை, மகன் மற்றும் தூய ஆவி ஆகியவைகளைக் காட்டுவதாக கூறப்படுகிறது.
பத்தாம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார் ஊர் ஊராக சென்று பிராச்சாரம் செய்கையில், ஒரு ஊரில், மக்கள் ஓக் மரத்தை வணங்குவதைக் கண்டு கோபமுற்று, வேர்ப்பகுதியுடன் அதை அடியோடு வெட்டி விட்டுச் சென்றார்.
ஒரு சில தினங்களில் வெட்டப்பட்ட ஓக் மரம் அதே இடத்தில் வளர்ந்து கம்பீரமாக நிற்க, இயேசு நாதரே மீண்டு வந்ததின் அடையாளமாக எண்ணி ஊர் மக்கள் வணங்கினர். சில மாதங்கள் சென்றபின், புனித போனிபேஸ் பாதிரியார் அங்கே வருகையில், அந்த புதிய மரத்தை அதே இடத்தில் கண்டு அதிசயப்பட்டார். அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார்.
பதினைந்தாம் நூற்றாண்டில், ஜெர்மானியப் பாதிரியார், தேவாலய காம்பௌண்டினுள் இருந்த 'பிர்' மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். எவர்க்ரீன் மரமென 'பிர்' மரம் அழைக்கப்பட்டது. பின்னர் ஓக் மற்றும் பிர் மரங்கள் கிறிஸ்துமஸ் மரங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் மர அலங்காரத்தில், பச்சை, சிகப்பு மற்றும் தங்கநிறம் பயன்படுத்தப் படுகின்றன.
நீண்ட ஆயுளை பச்சை நிறமும், இயேசு நாதரின் ரத்தத்தை சிகப்பு நிறமும், செல்வத்தை தங்க நிறமும் குறிப்பதாக கருதப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் மரங்களில் பரிசுகளும் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். சாண்டா வந்து பரிசுகள் தருவாரென குழந்தைகள் காத்திருக்கும்.
கிறிஸ்துமஸ் மரத்தில், இந்த வருடம் புதிதாக கட்ட பல்வேறு வண்ணங்களில், வடிவங்களில் டைனோஸர் பொம்மை வந்துள்ளது. இது குழந்தைகளின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அமைதியான இரவு பாடல்:
அமைதியான இரவு (Silent Night) பாடல், ஜெர்மனி நாட்டின் புனித நிகோலஸ் தேவாலயத்தில் பங்குத் தந்தையாக இருந்த ஜோஸப் மொஹிர் எழுதியதாகும். அமைதியான இரவு பாடல், கிறிஸ்துமஸ் கரோல் பாடல்களின் மன்னன் மற்றும் கடைசியாகப் பாடப்படும் பாடலுமாகும்.
கிறிஸ்துமஸ் திருப்பலி பூசை சமயம், ஆர்கன் இசைக்கலைஞர் ஃபிரான்ஸ் சேவியரின் கருவி பழுதாக, ஜோஸப் மொஹிர் சில வருடங்களுக்கு முன்பு தான் ஜெர்மன் மொழியில் எழுதிய ஸைலன்ட் நைட் பாடலை தேடியெடுத்தார். ஃபிரான்ஸ் ஸேவியர் குரூப்பரின் உதவியுடன் இசை வடிவம் கொடுத்து, ஒற்றை கிடாரின் மூலமாக அற்புதமாக "அமைதியான இரவு" பாடல் பூசை சமயம் பாடப்பட்டது. அப்போது ஆலய மணிகளின் பின்னணி ஓசை அதற்கு மெருகேற்ற, அனைவரும் மெய்மறந்தனர்.
உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களின் விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் பாடப்படுகின்ற அருமையான பாடல் ஸைலன்ட் நைட்டாகும்.
அமைதியான இரவு; புனிதமான இரவு; கன்னி மரியாளின் மடியில் குழந்தை யேசு, நிம்மதியாகத் தூங்குகிறார். என்கிற அர்த்தத்தைக் கொண்ட சிறப்பான இப்பாடல் ஆண்டாண்டு காலமாக, கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஒலித்துக் கொண்டிருப்பது போற்றுதற் குரியதாகும்.
கிறிஸ்துமஸ் வந்தாச்சு!
கிறிஸ்துமஸ் மரமும் வெச்சாச்சு!
கிறிஸ்துமஸ் ஸைலன்ட் நைட் பாட்டு பாடுவோம்! சாண்டாவைக் கூப்பிடுவோம்! பரிசுகளைப் பெறுவோம்!
ஹேப்பி கிறிஸ்துமஸ்! மெரி கிறிஸ்துமஸ்!