

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி தேசிய குரங்குகள் தினம் (World Monkey Day), அவற்றின் தனித்துவமான பண்புகளைக் கொண்டாடுகிறது.
இந்த நாள் குரங்குகள் தினமாக 2000 ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது, பாலூட்டி வகையைச் சேர்ந்த குரங்கு இனத்தை 'சிமியன்' (Simian) என்ற அறிவியல் பெயரால் அழைக்கிறார்கள். மனிதர்களைப் போலவே குரங்குகள் பல்வேறு குணநலன்களை கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். அதனை உண்மை என்று டென்மார்க் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குரங்குகள் கடந்த காலத்தில் நடந்தவைகளை நினைவில் வைத்திருக்கும் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக சிம்பன்சி, ஓரங்குட்டான் வகை குரங்குகள். விலங்குகளில் அதிக ஞாபக சக்தியை பெற்றது குரங்குகள் தான் என்கிறார்கள்.
குரங்குகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. அதிகம் வாழ்வது வெப்ப மண்டல பகுதிகளில் தான். ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் என 334 க்கும் மேற்பட்ட குரங்கு இனங்கள் உள்ளன என கணக்கிடப்பட்டுள்ளது. அவை 'பிக்மி மார்மோசெட்' போன்ற வெறும் 100 கிராம் (3 அவுன்ஸ்) முதல் 80 பவுண்டுகள் எடையுள்ள 'மாண்ட்ரில்' வரை உள்ளன.
குரங்குகள் நான்கு கால்களிலும் நடக்க முனைகின்றன. பெரும்பாலான குரங்குகளுக்கு ஒரு வால் உள்ளது, இருப்பினும் அனைத்திற்கும் இல்லை. குரங்குகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன - ஒன்று பழைய உலக குரங்குகள் மற்றொன்று புதிய உலக குரங்குகள்.
ஒரு குரங்குக் கூட்டத்திக்கு வலிமையான ஆண் குரங்கு தான் தலைவனாக இருக்கும். ஒவ்வொரு குரங்குக்கும் அதற்குரிய அதிகார வரையறைகள் இருக்கும். குரங்குகள் கூட்டமாக இருக்கும் போது பலமாக ஓசையெழுப்பி ஒன்றுடன் ஒன்று உரையாடுவது போல் நடந்து கொள்கின்றன. அவைகள் உணவு தேடும் போது மட்டும் ஒன்றுடன் ஒன்று பேசி தொடர்பு கொள்கின்றன என்கிறார்கள் உயிரியல் விஞ்ஞானிகள்.
குரங்குகள் பழங்கள், இலைகள், கொட்டைகள், தாவரங்கள், சிறு பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களையும் இரையாக உண்ணுகின்றன. ஈரப்பதமான சத்தான உணவுகளையே குரங்குகள் விரும்பி உண்ணும். தண்ணீரையும் அதிகளவில் அருந்தும். ஈரப்பதமுள்ள உணவுகளை சாப்பிடும் போது குரங்குகளுக்கு தண்ணீர் தேவைப்படாது. குரங்குகள் தங்களது ஆயுள் காலத்தின் பெரும் பகுதியை மரத்திலேயே கழிக்கும். குரங்கு குட்டிகள் 3 வயது வரை தாய்ப்பால் குடிக்கும்.
குரங்குகள் பாறைகள், மலைகள் மீது எந்தப் பிடிமானமும் இன்றி ஏறும் அசாத்திய ஆற்றல் கொண்டவை. காரணம் அதற்கு உதவும் அவற்றின் உடலமைப்பு. குரங்குகளின் கைகள் மற்றும் கால்கள் வலிமையானவை, அதன் வளைந்த விரல்கள் பாறைகளின் பிளவுகள் மற்றும் கடினமான மேற்பரப்புகளை உறுதியாக பிடிக்க அவைகளுக்கு உதவுகின்றன.
குரங்குகளின் தோள் மற்றும் தொடை இணைப்பு பகுதிகள் அதிகமாக அசையக்கூடியவை. இதனால் அவைகளால் செங்குத்தாகவும், சம நிலையிலும் சுலபமாக ஏற முடிகிறது. பாறைகள் மற்றும் சமமற்ற தளங்களில் ஏறும் போது அதன் உடலை சமநிலையில் வைக்க அதன் வால் அதற்கு உதவுகிறது. குரங்குகள் சுறுசுறுப்பாக செயல்பட அவற்றின் உடல் அசைவுகள் துரிதமாக இருப்பது தான் காரணம். இதனால் தான் எவ்வளவு பெரிய செங்குத்தான மற்றும் சீரற்ற பரப்புகளில் அவைகளால் சுலபமாக இயங்க முடிகிறது. குரங்குகளுக்கு இரண்டு மூளைகள். ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் இயக்குகின்றன.
ஒரு சிம்பான்சி குரங்கினால் கண்ணாடியைப் பார்த்து அது தனது உருவம் தான் என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியும். ஆனால், சாதாரண குரங்குகளால் அது முடியாது. மனித குரங்குகள் என அழைக்கப்படும் கொரில்லாக்கள் பருவ வயதடையும் வரை ஆணா, பெண்ணா என்று நிச்சயிக்க முடியாது. காரணம், உருவ அமைப்பு ஒன்றாகவே இருக்கும். அடர்த்தியாக ரோமங்கள் இருப்பதால் பால் உறுப்பு தெரிவதில்லை. பருவ வயது வந்த பின்னர் தான் பால் வித்தியாசம் தெரியும்.
பொதுவாக குரங்குகளுக்கு 'வாழைப்பழம்' என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், 'புரோபோஸ்கிஸ் குரங்கு' (Proboscis Monkey) அல்லது நீண்ட மூக்கு குரங்கு, மலேசியா நாட்டின் சதுப்புநில காடுகளில் வாழும் குரங்குகள் வாழைப்பழம் சாப்பிட்டால் இறந்து போய்விடும். காரணம் இவற்றின் வாயிற்குள் இருக்கும் ஒரு வித பாக்டீரியா தானாம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இதே குரங்கு கொடிய விஷ இலைகளைக்கூட சாப்பிட எதுவும் ஆகாதாம்.