டிசம்பர் 5: உலக மண்வள நாள் - ஒரு கைப்பிடி மண்ணில், இந்தப் பூமியில் உள்ள மக்கள் தொகையை விட, அதிக நுண்ணுயிர்கள் உள்ளன!

World Soil Day
World Soil Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 5 ஆம் நாளன்று உலக மண்வள நாள் (World Soil Day) கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு முதல் உலக மண்வள நாள் கடைப்பிடிக்கும் வழக்கம் தொடங்கியது. ஒவ்வோர் ஆண்டும் அதிகமான மக்கள் ஒன்றிணைந்து இக்கொண்டாட்டத்தை பொருளுடையதாக ஆக்குகின்றனர்.

2050 ஆம் ஆண்டிற்குள் உலகத்தின் மக்கள் தொகை ஆயிரம் கோடியை எட்டக்கூடும் என்பதால், அதற்கேற்றாற் போன்று உணவு உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இருக்கின்ற வளங்களையும் சேதாரமின்றிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மண் வளம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்நாள் மண் வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பதைக் கருத்தில் கொள்ளுமாறு தனிநபர்களை அறிவுறுத்துகிறது.

மண் சிதைவு, மண் அரிப்பு, கரிமப் பொருட்களின் இழப்பு மற்றும் மண் வளம் குறைதல் போன்ற குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிப்பது, ஆரோக்கியமான மண்ணின் மதிப்பை முன்னிலைப்படுத்துவது, மண் வளங்களின் நிலையான மேலாண்மையை மேம்படுத்துவது போன்றவை இந்நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய குறிக்கோள்களாகும்.

ஓர் அங்குலம் கனமுடைய மண் உருவாக குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் ஆவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஒரு கைப்பிடி அளவுள்ள மண்ணில் 45 விழுக்காடு கனிமப்பொருட்களும், 25 விழுக்காடு நீர், 25 விழுக்காடு வளியும், 5 விழுக்காடு நுண்ணுயிர்களும் நிறைந்துள்ளன. மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் ஒரு கிராம் மண்ணில் 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரம் வரையிலான பாக்டீரியாக்களும், ஒரு ஏக்கர் மண்ணில் ஐந்திலிருந்து 10 டன் வரையிலான எண்ணிக்கையில் பல்வேறு வகையான உயிர்களும் வாழ்கின்றன. பயிர் நிலமென்றால் ஏக்கர் ஒன்றில் 1.4 டன் மண்புழுக்கள் வாழ்வதுடன், அப்புழுக்கள் ஆண்டொன்றுக்கு 15 டன் அளவிற்கு செறிவான மண்ணை உருவாக்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாவர இனங்களுக்குத் தேவையான நைட்ரசன், பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற கனிமச் சத்துகள் மண்ணில் நிறைந்துள்ளன. பொழிகின்ற மழை நீரை மண்ணுக்குள் ஈர்த்துக் கொள்ளவும், காற்றின் மூலமாகக் கிடைக்கும் நுண்ணுாட்டங்களைப் பெற்றுக் கொள்ளவும் மண்வளம் செறிந்த தன்மையில் இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மனித வாழ்வில் மண்ணின் மகத்தான பங்கு!
World Soil Day

தாவரங்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் மண் நமது உயிர் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு கைப்பிடி மண்ணில், இந்தப் பூமியில் உள்ள மக்கள் தொகையை விட, அதிக நுண்ணுயிர்கள் உள்ளன. இவற்றின் ஆற்றலால், இந்த மண்ணானது உயிர்ப்புடன் இருப்பதுடன், மற்ற உயிர்களையும் உயிர் வாழச் செய்து, வளர்த்து இந்த உலகத்தைப் பசுமையாக வைத்திருக்கிறது. முக்கிய ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்கிறது. மண்ணின் கரிம கார்பனைப் பாதுகாப்பதன் மூலம் அல்லது அதிகரிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் குறைக்கிறது. உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்துத் தாவரங்களும் மண்ணில் வளரும், இது உணவு அமைப்புகளின் அடித்தளமாகவும் செயல்படுகிறது.

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவளிப்பதற்குத் தேவையான விவசாய நிலம் நமக்கு கிடைக்காமல் குறைந்து வருகிறது. தேவையற்ற செயற்கை உரங்கள் என்ற பெயரில் வேதிப்பொருட்கள் கலப்பதால் மண்ணின் வளமான தன்மை மாறி, மண் உயிரிழந்து வருகிறது. மண்ணரிப்பு, வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு அதிகரிப்பு, தொழிற்சாலைக் கழிவுகள், கால்நடைகளின் அளவுக்கு மீறிய மேய்ச்சல், கடல் நீர் ஊடுருவல் போன்ற செயல்பாடுகளே மண் வளம் சீர்கேடு அடைவதற்கான காரணங்களாகும். தொழில் மயமாக்கலும் போதிய விவசாய நில மேலாண்மை இல்லாமலிருப்பதும் மண்ணின் தரத்தைக் குறைக்கும் முக்கியக் காரணிகளாகும்.

மண்ணின் முக்கியத்துவத்தை மக்கள் உணரச் செய்யும் வகையிலும், அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 2013 டிசம்பர் 20 இல் இடம் பெற்ற தனது 66-வது அமர்வில் 2015 ஆம் ஆண்டை, பன்னாட்டு மண் ஆண்டு, 2015 (International Year of Soils, 2015) என்று அறிவித்துக் கொண்டாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக நாடுகள் அனைத்திலும், அந்த ஆண்டு முழுவதும் மண் வளத்தைப் பற்றி அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தியது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com