

ஒவ்வோர் ஆண்டும் எழுபது இலட்சம் பேர் வரை ஏறி இறங்கும் இடமாக ஈஃபிள் கோபுரம் இருக்கிறது என்கிறது பிரான்சு நாட்டுச் சுற்றுலாத் துறைப் புள்ளிவிவரம். பிரான்ஸ் நாட்டின் 'இரும்புப் பெண்' என அழைக்கப்படும் ஈபிள் டவர் உலக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஈபிள் டவர் அதன் இரும்புக் கட்டமைப்பு மற்றும் உயரத்தின் காரணமாக, வலிமை மிக்க பெண்களை குறிக்கும் வகையில் 'இரும்புப் பெண்' என்று அழைக்கப்படுகிறது. இது காஸ்டாவ் ஈபிள் (Gustave Eiffel) என்பவரால் வடிவமைக்கப்பட்டு, அவரது நிறுவனத்தால் கட்டப்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரின் அடையாளமாக மாறிவிட்ட ஈஃபிள் கோபுரம், 1889ஆம் ஆண்டில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு 1889ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ம் தேதி பாரீசில் நடந்த உலக வர்த்தக கண்காட்சியில் திறந்து வைக்கப்பட்டது.
பெண்களின் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகெங்கும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் கடைபிடிக்கப்படுகிறது. பிரெஞ்சு நாட்டில் அதை ‘பிங் அக்டோபர்’ என்கிறார்கள். 'மார்பக புற்றுநோய்' தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஈஃபிள் கோபுரம் அக்டோபர் 1, இரவு பிங்க் நிறத்தில் ஒளிரவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பாரீஸ் நகரின் நகராட்சி, அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய 72 பெண் விஞ்ஞானிகளின் பெயர்களை ஈஃபிள் கோபுரத்தில் தங்க எழுத்துகளால் பொறிக்கவுள்ளது. இந்த பெயர் பட்டியல் அன்மையில் வெளியிடப்பட்டது. 1889 முதல் அங்கு பொறிக்கப்பட்டுள்ள 72 ஆண் விஞ்ஞானிகளின் பெயர்களுக்கு மேல், இந்த விஞ்ஞானிகளின் பெயர்களும் இடம் பெறும்.
பெண்களின் அறிவியல் பங்களிப்பை வெளிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. அதில் கணினி அறிவியலின் முன்னோடியான 'ஆலிஸ் ரெக்கோக்' (Alice Recoque, 1929–2021) ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு கணினி விஞ்ஞானி மற்றும் பொறியாளர் ஆவார்.
இவர் CAB500 மற்றும் Mitra 15 போன்ற மினி-கணினிகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர், இயற்பியல் மற்றும் வேதியியல் என இரு முறை நோபல் பரிசு பெற்ற போலந்து மற்றும் பிரெஞ்சு வேதியியல் அறிஞர் மேரி கியூரி (Marie Curie), கணிதவியலாளர் சோஃபி ஜெர்மைன் (Sophie Germain) (1776–1831) ஒரு முன்னோடி பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் தத்துவஞானி ஆவார். சமூகத் தடைகளையும் மீறி எண் கோட்பாடு (Number Theory) மற்றும் நெகிழ்ச்சித் தத்துவம் (Elasticity Theory) ஆகியவற்றில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியவர். உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் பலர் பொதுமக்களுக்கு அதிகம் அறியப்படாதவர்கள். தங்கள் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட இந்த பெண்களை இன்று வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இந்த திட்டம் 'பெண்களும் அறிவியலும்' என்ற சங்கம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய போராட்டத்தின் பலனாகும்.
அறிவியல் ஆராய்ச்சியில் பெண்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடும் மாதில்டா விளைவு (Matilda Effect) எனப்படும் நிலையை சரி செய்வதே இதன் இலக்காகும். மாதில்டா விளைவு (Matilda Effect) என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்கள் செய்யும் சாதனைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிடுவது அல்லது அவற்றை ஆண்களின் பெயரில் வெளியிடுவது ஆகும். பெண் ஆராய்ச்சியாளர்களின் பணிகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம் பெரும்பாலும் ஆண் சக ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க பெண்ணுரிமை ஆர்வலர் மட்டில்டா ஜோஸ்லின் கேஜ் (Matilda Joslyn Gage) என்பவரால் இந்த அநீதி சுட்டிக்காட்டப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
தொழில்நுட்ப ரீதியாக சிக்கலான இந்தப் பணிகள் முடிந்து, 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் பெண்களின் பெயர்கள் ஈஃபிள் கோபுரத்தில் பிரகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈபிள் டவர், பெண்களின் திறமை மற்றும் வலிமையைப் பாராட்டும் ஒரு உலகளாவிய அடையாளமாக, பாரிஸ் நகரின் பெருமையாக நிலைத்து நிற்கப்போகிறது.