ஏமாறுவதையும் ஏமாற்றுவதையும் ரசித்து அனுபவிக்கும் விசேஷ தினம்!

April Fools day (01.04.2024)
Emaaruvathaiyum Emaatruvathaiyum Rasithu Anubavikkum vishesha Thinam!
Emaaruvathaiyum Emaatruvathaiyum Rasithu Anubavikkum vishesha Thinam!https://in.pinterest.com/

ப்ரல் ஃபூல்ஸ் தினம் என்றதும் மாணவப் பருவமும் பள்ளிக்கூட நினைவுகளும் நமக்கு தவறாமல் வரும்தானே? ஒரு உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி, அதில் AF என்னும் எழுத்துக்களை கீறி அதை நீல இங்க்கில் தோய்த்து யாரும் பார்க்காதபோது சக மாணவர்களின் முதுகில் தேய்த்து பிறகு  மற்றவர்கள் அவர்களைப் பார்த்து சிரிக்க, ‘ஏப்ரல் ஃபூல்’ என்று கை கொட்டி சிரித்து அமர்க்களம் செய்ததெல்லாம் மறக்க முடியுமா?  என்னவெல்லாம் சொல்லி சக மாணவர்களை, தோழர்களை ஏமாற்றுவோம் நினைவிருக்கிறதா?

"அதோ பாரு! வெள்ளைக் காக்கா பறக்குது."

"உன் தலை மேல பாருடா! பல்லி!"

"உன்னை க்ளாஸ் டீச்சர் கூப்பிட்டாங்கடா!"

என்பது போன்று, அதாவது உண்மையாக இல்லாத ஒன்றை உண்மை போல் சொல்லி ஏமாற்றுவதுதான் ஏப்ரல் ஃபூல்ஸ் தின நகைச்சுவையும் விளையாட்டும்.

அன்னையர் தினம், மகளிர் தினம் என்று மற்ற விசேஷ தினங்கள் போல் இதற்கு அரசாங்க ரீதியாக அங்கீகாரமோ விடுமுறையோ  உலக நாடுகள் எதிலும் இல்லை என்றபோதிலும் ஏப்ரல் முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இது ஏப்ரல் முதல் தேதி உலகம் முழுவதும் நகைச்சுவைக்காகக் கொண்டாடப்படும் நாளாகும்.  இந்த நாளில் ஒருவரை நகைச்சுவையாக ஏமாற்றி, பாதிக்கப்பட்டவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கின்றனர்.

இது பிரான்ஸ் நாட்டில்தான் முதலில் ஆரம்பமாயிற்று என்று சொல்லப்படுகிறது.  இதற்கு ஒரு வரலாறும் இருகிறது. 16ம் நூற்றாண்டு வரை பல ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதிதான் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்பட்டது.  பின்னர் 13வது கிரகரி என்னும் போப்பாண்டவர் பழைய ஜூலியன் ஆண்டு கணிப்பு முறையை ஒதுக்கி, புதிய கிரேகோரியன் ஆண்டு கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.  இதன்படி ஜனவரி 1ம் தேதிதான் புத்தாண்டு ஆரம்பிக்கிறது என்பது நடைமுறைக்கு வந்து, இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஜெர்மனி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. சில நூற்றாண்டுகள் கழித்துதான் இந்த புதிய நாட்காட்டி, அதாவது ஜனவரி 1ம் தேதிதான் புத்தாண்டு என்பது எல்லா நாடுகளாலும் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனாலும், சில நாடுகளில் பழையபடியே ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டாகக் கொண்டாடி வந்ததால் அவர்களை  ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்து கேலி செய்தார்களாம் இதர ஐரோப்பிய நாட்டவர்கள்.

இதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி பந்தயம் ஒன்றில் சவால் விட்டு, அனைவர் முன்னிலையிலும் மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதல் தேதி என்பதால் கூட ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. இந்த வேடிக்கை, கேலிக்கூத்துகள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் வேகமாகப் பரவி தற்போது ஏப்ரல் 1ம் தேதி, 'உலக முட்டாள்கள் தினம்' என்பது உலகம் முழுவதும் பிரசித்தமாகிவிட்டது.

இதையும் படியுங்கள்:
உடல் சூட்டை தணிக்கும் மகத்துவம் மிக்க 6 கீரைகள்!
Emaaruvathaiyum Emaatruvathaiyum Rasithu Anubavikkum vishesha Thinam!

இதையொட்டி, இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது.  இந்த ஏப்ரல் 1ம் தேதி ஆரம்பத்தில், 'ஏப்ரல் மீன்கள் தினம்' என்றே கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.  ஏப்ரல் மாதத் துவக்கத்தில் பிரான்சில் ஆறுகளில் நிறைய மீன்கள் இருக்கும் என்பதால் அவற்றைப் பிடிப்பது மிகவும் சுலபம். ஆகவே, இது மீன்கள் ஏமாறும் தினமாகக் கருதப்பட்டது. காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் தினமாக மாறிப் போனது.

மொத்தத்தில் ஏமாற்றுவதையும், ஏமாறுவதையும் சிரித்தபடி ஏற்கும் பக்குவத்தை பேதமில்லாமல் அனைவருக்கும் ஊட்டும் இந்த தினத்தை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கிறது. உங்களை பால்ய பருவத்திற்கு அழைத்துச் செல்லும் இந்த நகைச்சுவை நாளைக் கொண்டாடி மகிழ தயாராகிவிட்டீர்கள்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com