பிப்ரவரி 28 'தேசிய அறிவியல் தினம்'! 2024ன் கருப்பொருள் என்ன?

National Science Day
National Science Day

காலம் காலமாக வளர்ச்சி பெற்று வரும் விஞ்ஞானம் நமது வாழ்வில் பல வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் அல்லது விஞ்ஞானம் கண்டுபிடித்த ரோபோக்கள், கணினிகள், மொபைல் இன்னும் பிற அறிவியல் சாதனங்கள் நம்  வாழ்வை சிறப்பாகவும் எளிதாகவும் ஆக்கியுள்ளதை அனுபவித்து அறிகிறோம்.  அறிவியலின் உதவியால் வாழ்வை சுவாரஸ்யமாக ஆக்குகிறோம்.

நம் வாழ்வையே மாற்றும் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் தந்து உலக நாடுகள் பலவும் இத்துறையில் பங்கெடுத்து முன்னேறி வருகின்றன. நமது இந்தியாவும் அறிவியல் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது.  இந்தியாவில் பிறந்த பல்வேறு துறை சார்ந்த விஞ்ஞானிகள் அறிவியல் துறையில் இந்தியாவை உலகறியச் செய்து இந்தியாவிற்கு  தனி இடத்தையும் பெற்றுத் தந்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்கவர் இந்திய இயற்பியலாளர் சர் சந்திரசேகர் வெங்கடராமன். இவர் ஆராய்ச்சியில் ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையிலும் மற்றும் அவரை கௌரவிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. ஏனெனில் 28 பிப்ரவரி 1928  தான் ராமன் விளைவை அவர் கண்டுபிடித்த நாள். இந்த கண்டுபிடிப்புக்காக, 1930 இல் இயற்பியல் பாடத்திற்கான உலகின் பெருமைக்குரிய நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

ஓவ்வொரு வருடமும் அந்தந்த சிறப்பு தினத்தை முன்னிட்டு அதை சார்ந்த கருப்பொருள்  அறிவிக்கப்பட்டு அதனடிப்படையில் நிகழ்வுகள் விழிப்புணர்வுகள் அமையும். அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் 'விக்சித் பாரதத்திற்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்' என்பதாகும்.

விக்சித் பாரத்@2047 என்பது இந்தியா சுதந்திரம் பெற்று வரும் நூற்றாண்டான 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது. இந்திய அரசின் தொலைநோக்கு பார்வையால் பொருளாதார வளர்ச்சி சமூக முன்னேற்றம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சிறப்பான நிர்வாகம் உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. பிரதமர் இந்திய இளைஞர்களுக்காக 11 டிசம்பர் 2023 முதல் விக்சித் பாரத்@2047 எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். இதன் பகுதியாகவே தேசிய அறிவியல் தினத்தின் கருப்பொருள் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் மகிழ்ச்சியான மொழி எது தெரியுமா?
National Science Day

இந்த கருப்பொருளின் கீழ் பயிலரங்குகள், அறிவியல் கண்காட்சிகள்,  நேரடித் திட்டங்கள், விவாதங்கள், வினாடி வினா போட்டிகள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் தேசம்  முழுவதிலும் அறிவியல் திருவிழா கொண்டாடப்படுகிறது. வயது பாகுபாடின்றி  மக்கள் ஒன்று கூடி, தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்வதுடன், வினாடி-வினா போட்டிகள், விவாதங்கள், திட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பது வரவேற்கப்படுகின்றன.

Gaganyaan Astronauts
Gaganyaan Astronauts

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ககன்யான் திட்டத்திற்கான பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இத்திட்டத்தின் மைல்கல்லாக  பல்வேறு கடுமையான பயிற்சிகளுக்கு பின் விண்வெளிக்கு செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் ஒருவர் என்பது இந்த நாளில் நமக்கு பெருமை அளிக்கும் ஒன்றாகிறது.

இளைஞர்களிடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் நமது பிள்ளைகளுக்கும் அறிவியல் பற்றிய ஆர்வத்தையும் பயிற்சிகளையும் அளித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதே நமது கடமை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com