

* உன்னை நீ அறிந்து கொள்; அப்பொழுது கடவுளை அறிவாய்!
* 'நான்' என்பது எது? என்னுடைய கையா? காலா? தசையா? ரத்தமா? அல்லது, என் உடலில் வேறு ஏதாவது ஒரு உறுப்பா? நன்கு ஆலோசித்து பார். 'நான்' என்ற பொருள் ஒன்று இல்லை என்பதை நீ அறிந்து கொள்வாய்.
* வெங்காயத்தின் தோலை உரிக்க உரிக்க மேன்மேலும் தோல்தான் காணப்படும். விதை ஒன்றும் உனக்கு கிடைக்காது. அதுபோல 'நான்' என்பது எது என்று ஆராய்ந்தால் அது இல்லாமல் மறைந்து போகும். கடைசியாக எஞ்சி நிற்பது ஆன்மா சைதன்யம். 'நான்' என்னும் அகங்காரம் அழியும் போது கடவுள் தோன்றுகிறார்.
* பழுத்த அகங்காரம், பழுக்காத அகங்காரம் என்று இரண்டு வித அகங்காரங்கள் இருக்கின்றன. "இது என் வீடு, என் அறை, என் மகன்," என்னும் அகங்காரம் பழுக்காதது. "நான் ஆண்டவனின் அடிமை. அவனுடைய குழந்தை நான். எல்லாம் அறிந்தவன் அவன்" என்று நினைக்கும் அகங்காரம் பழுத்தது.
* கடவுள் கற்பக மரத்தை போன்றவர். நீ அவரிடம் வேண்டுவது உனக்கு கிடைக்கும். ஒவ்வொருவரும் தான் வேண்டுவதை பெறலாம்.
* ஒரு ஏழையின் மகன் கல்வி கற்று உயர்தர நீதிபதி பதவி அடைந்தால், தான் வசதியாக இருப்பதாக நினைக்கிறான். கடவுளும் நீ அப்படியே இரு என்று அவ்வெண்ணத்தையே திருப்பி கூறுகிறார். வயதான பிறகு அந்த நீதிபதி உபகார சம்பளம் பெற்று வாழும் போது, இறைவனுடைய கருணையால் பொருள்களின் உண்மை நிலையை சரியாக அறிய ஆரம்பிக்கிறான். அப்பொழுது அவன், "நான் இவ்வாழ்க்கையில் என்ன உண்மையான செயல் செய்திருக்கிறேன்?" என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறான். அப்பொழுது கடவுள், "ஆம் உண்மைதான். நீ என்ன செய்திருக்கிறாய்?" என்று அவனது வார்த்தைகளையே திருப்பிக் கூறுகிறார்.
* பீஷ்மாச்சாரியார் அம்பு படுக்கையில் படுத்துக்கொண்டு தம் உடலை விட்டு நீங்குவதற்கு ஏற்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அதை பார்த்து அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனை நோக்கி கிருஷ்ணா என்ன ஆச்சரியம் உண்மை தவறாதவராயும் புலன்களை அடக்கினவராயும் ஆன்ம ஞானம் நிறைந்தவராயும் அஷ்டவசுக்களில் ஒருவராயும் இருக்கும் என் பாட்டனாரும் மாயையில் சிக்குண்டு கண்ணீர் சொரிகின்றாரே?" என்றான். இதை கிருஷ்ண பகவான் பீஷ்மருக்கு அறிவிக்க, அவர், "ஏ கிருஷ்ணா! மாயையால் கட்டுண்டு நான் கண்ணீர் விடவில்லை என்பதை நீர் நன்கு அறிவீர். உம்முடைய லீலை எனக்கு சிறிதும் விளங்கவில்லையே என்பதுதான் என்னை கண்ணீர் விட செய்கிறது. யாருடைய திருநாமங்களை ஜபிப்பதால் மக்கள் துன்பங்களைத் தாண்டி செல்கிறார்களோ அவரே பாண்டவர்களுக்கு தேரோட்டியாக இருந்து உதவி புரிகிறார். அப்படி இருந்தும் பாண்டவர்கள் படும் துன்பம் முடிந்த பாடில்லையே," என்றார்.
* தராசில் எந்த தட்டில் கனம் இருக்கிறதோ அந்தத் தட்டு தாழும் கனமில்லாத தட்டு உயரும். மனிதனுடைய மனம் தராசுக்கோல் போன்றது. இந்த மன தராசின் இரு தட்டுகளில் இரண்டு வித எடைகள் உள்ளன. உலகத்தின் மீதும் பட்டம் பெருமை இவற்றின் மீதும் உள்ள பற்று ஒன்று. மற்றொன்று அறிவு; பற்றின்மை, கடவுளிடம் அன்பு முதலியவை. முதலில் கூறியவை அதிகமானால் தராசு போல் மனம் உலகத்தின் பக்கம் சாய்கிறது. கடவுள் பக்கத்திலிருந்து நீங்கி செல்கின்றது ஆனால் இரண்டாவது பலமாக இருந்தாலோ மனம் உலகத்தை விட்டு நீங்கி கடவுளிடம் செல்கின்றது.
* கிளிக்கு வயது ஆகி அதன் தொண்டை நரம்பு கெட்டி ஆகிவிட்டால் அதற்கு பாடல் கற்றுக் கொடுக்க முடியாது. அது இளமையாக இருக்கும் போதே பாட கற்றுக் கொடுக்க வேண்டும். அது போலவே வயோதிக பருவத்தில் கடவுளின் மீது மனத்தை நிறுத்துவது சிரமம். ஆனால் இளமையில் அவ்வாறு செய்ய முடியும்.
* சர்க்கரையையும் மணலையும் ஒன்றாக கலந்து விடலாம் ஆனால் எறும்பு மணலை நீக்கி சர்க்கரையை தின்கிறது. அதுபோல பக்தர்களும் பரமஹம்சர்களும் உண்மை இல்லாத பெண் பொன் ஆசைகளை நீக்கி உண்மையான சச்சிதானதத்தையே நாடுகிறார்கள்.
* களிமண்ணை எந்த உருவமாகவும் செய்யலாம். ஆனால் சுட்ட மண்ணை எவ்வாறு செய்ய முடியாது. அதுபோல உலக ஆசைகள் என்னும் தீயினால் சுடப்பட்ட இதயத்தில் ஆன்மீக எண்ணங்கள் சிறிதளவும் பதியாது .
* எண்ணெய் தடவிய காகிதத்தின் மேல் எழுத முடியாது. அதுபோல பெண் பொன் ஆசைகள் என்னும் எண்ணெயினால் கெடுக்கப்பட்ட மனம் சாதனைக்கு தகுதியாகாது. ஆனால் அந்த எண்ணெய் காகிதத்தின் மீது சுண்ணாம்பை தடவி விட்டால் எழுத முடியும். அதுபோல மனத்தின் மீது தியாகம் என்னும் சுண்ணாம்பை தடவினால் அது சாதனைகள் செய்வதற்கு தகுதியாகி விடுகிறது.