பிப்ரவரி 27: பன்னாட்டுத் துருவக் கரடி நாள் - துருவக் கரடிகள் உள்ளங்கையால் மூக்கை மூடி வேட்டையாடுவது ஏன்?

International Polar Bear Day
International Polar Bear Day
Published on

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27 அன்று பன்னாட்டுத் துருவக் கரடி நாள் (International Polar Bear Day) கொண்டாடப்படுகிறது. புவி வெப்பமடைதல் காரணமாகப் பனி உருகுவதால் துருவக் கரடியின் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

பனிக்கரடி, துருவக் கரடி என்றழைக்கப்படும் இக்கரடி, நில உருண்டையின் கடும் உறைபனி சூழ்ந்த ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் வெண்ணிறக் கரடி இனமாகும். ஆர்ட்டிக் மாக்கடல் என்று இந்த உறைபனிப் பகுதியைக் கூறுவதால், இக்கரடியை வெண் கடற்கரடி என்றும் கூறுவதுண்டு.

வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோகிராம் எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோகிராம் எடையுடையவை. இவை இளவேனிற் (வசந்த) காலத்தில் கருக் கொள்கின்றன. இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240 நாட்களாகும். பொதுவாக, இக்கரடியினத்தில் இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. புதிதாய்ப் பிறந்த இக்கரடிகள் சிறியனவாய் இருக்கும். கடுங்குளிரை தாக்குப் பிடிக்க, அவை மிக விரைவாக குண்டாகவும், கொழுப்பு சத்துடன் இருக்க வேண்டும். இயற்கையிலேயே இக்கரடியின் தாய்ப்பால் மிகச் செழுமையாகவும், பாதி பங்கு கொழுப்பு சத்து கொண்டதாகவும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வசீகர கண்களைப் பெற சில யோசனைகள்!
International Polar Bear Day

இனப்பெருக்கக் காலங்களில் பெண் கரடியுடனும், குட்டிகளுடனும் இருந்தாலும், பனிக்கரடிகள் பொதுவாக, தனியாக வாழும் விலங்குகள் வகையைச் சேர்ந்தவை. இது இறைச்சி உண்ணும் ஊனுண்ணிப் பாலூட்டியாகும். இவற்றின் முதன்மையான உணவு சீல் ஆகும். பெரும் திமிங்கிலம் போன்ற உணவு உண்ணக் கிடைக்கும் பொழுது, 20 முதல் 30 பனிக்கரடிகளை ஒரே இடத்தில் பார்க்க முடியும்.

இது நீரிலும் நிலத்திலும் வேட்டையாட வல்லது. வேட்டையாடும் போது, இக்கரடிகள் தங்கள் உள்ளங்கையால் மூக்கை மூடிக் கொள்ளும். இவற்றின் உடம்பு வெள்ளையாய் இருந்தாலும் மூக்கு கருப்பாய் இருந்து காட்டிக் கொடுத்து விடும். மூக்கை மறைப்பதன் மூலம் பனிப் படர்ந்த ஆர்டிக் நிலப்பரப்பில் தன்னைத் தெரியாதவாறு வேட்டையாடும்.

உலகில் ஏறத்தாழ 20000 பனிக் கரடிகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பன்னாட்டுத் துருவக் கரடி நாளில், உயிரியல் பூங்காக்கள் துருவக் கரடி பாதுகாப்பு பற்றிக் கற்பிக்கவும், துருவக் கரடி குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் கண்காட்சிகளை நடத்துகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் துணை காலநிலை பிரச்சார மேலாளரான ஜாக் ஷாபிரோ, காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினையில் காங்கிரசின் நடவடிக்கையின் அவசியத்தை வாதிடுவதற்கு இந்த நாளைப் பயன்படுத்தினார். பன்னாட்டுத் துருவக் கரடி நாளினை முன்னிட்டு, 2014 ஆம் ஆண்டு சசுகாட்செவன் பல்கலைக்கழகம் தனது வெப்பநிலைநிறுத்தியினை கோடையில் இரண்டு பாகையும் மற்றும் குளிர்காலத்தில் இரண்டு பாகை செல்சியசு குறைப்பதாக அறிவித்தது. இந்த முடிவு பல்கலைக்கழகத்தின் கார்பன் உமிழ்வை இரண்டாயிரம் டன்கள் குறைத்ததுடன், பல்கலைக்கழகத்திற்கு ஆண்டுக்கு இருநூறு ஆயிரம் டாலர்களை மிச்சப்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
ஆறுகளே இல்லாத நாடுகள்! உண்மைதானா?
International Polar Bear Day

இந்நாளில், இணையத்தில் தகவல் தேடல் மூலம் துருவக் கரடிகள் பற்றி தேடுவதன் வழியாக, துருவக் கரடிகள் பற்றியும், அதன் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம், துருவக் கரடிகளைப் பாதுகாக்க, புவி வெப்பநிலையைக் குறைக்க வேண்டும் என்கிற நிலையைப் பலரும் எடுப்பதுடன், புவி வெப்பநிலை குறைப்பால் ஏற்படும் பல நன்மைகள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர். அப்புறமென்ன, கூகுள் தேடலில், பனிக்கரடிகள், துருவக் கரடிகள் குறித்துத் தேடத் தொடங்குங்கள்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com