

இந்தியா சுதந்திரம் அடைய பல தலைவர்கள் பலவிதமான தியாகங்களை செய்தாா்கள். பலர் சொல்ல முடியாத துயரங்களையும் அனுபவித்து பெறப்பட்டதே சுதந்திரம்.
அஹிம்சை, அறவழி தவிர பல வகைகளில் போராடினாலும் தனி ஒரு மனிதனாக ஆங்கிலேயர்களை எதிா்த்துப்போராடி , அவர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டி, சிம்ம சொப்பனாமாக திகழ்ந்தவர் பாஞ்சாலங்குறிச்சியின் வெற்றித்திருமகன் வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் பாளையத்துக்காரர்.
அஞ்சாநெஞ்சன், ஈரம் விளைந்த மண்ணின் வீரம் கொண்ட , வரலாற்றுநாயகனின் பிறந்த நாள் ஜனவரி 3 ம்நாள் (03.01.1760--16.10.1799). அந்த வீரத்திருமகனின் நினைவுகளோடு கொஞ்சம் உலாவருவோம்.
18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் அடக்குமுறை மற்றும் ஏகாதிபத்யத்தை எதிா்த்து நின்று போராடிய வீரத்திருமகன், வரலாற்றுநாயகன், கட்டபொம்மனின் துணிச்சலுக்கு ஈடு இணையே இல்லை.
அதோடு மட்டுமா?! இவரது வீரதீரச்செயலால் பலரும் இவரைப் பின்தொடர்ந்து போராடத்துவங்கியதே சிறப்பான ஒன்று.
ஆங்கிலேயர்களை எதிா்த்து வரி, கிஸ்தி செலுத்த மறுத்த முதல் பாளையத்துக்காரர் என்ற பெருமை பெற்றவர் .
ஆங்கிலேயர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாதவர். அஞ்சா நெஞ்சன்.
விடுதலைப்போருக்கு வித்திட்டவர்.
அதோடு சிறப்பான ஆட்சி செய்து நீதியை நிலை நாட்டி மக்களுக்காக சிறப்பான பணிகளை மேற்கொண்ட பெருமைக்கு சொந்தக்காரர்.
தேசிய நாயகனாக வலம் வந்து பெருமை படைத்தவர்.
இவரது தாய் தந்தையர் ஜெகவீரபாண்டியன் - ஆறுமுகத்தம்மாள். மனைவி சக்கம்மாள்.
சகோதர சகோதரிகள் தலா இருவர்.
வீரச்சக்கதேவி குலதெய்வம்; அதோடு திருச்செந்தூா் முருகனையும் வழிபட்டாா்.
சிறுவயதிலேயே வீரமரணம் கண்டவர். 1790ல் 47வது பாளையக்காரரான இவர் ஆங்கிலேய கம்பெனியின் ஆதிக்கத்தை எதிா்த்தவர்.
நெல்லை சீமையில் வரி கிஸ்தி வசூல் செய்யும் பணியைமேற்கொன்ட ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல் என்பவருடன் போா்புாிந்து வெற்றி பெற்ற வியத்தகு வீரர்.
பின்னர் நெல்லை கலைக்டர் ஜாக்சன் துரையால் பலமுறை பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டாா் .
கைது செய்ய முயற்சித்தாா்கள். 5.9.1799 போாில் பாஞ்சாலங்குறிச்சி முற்றுகையிடப்பட்டு 1.10.1799ல் புதுக்கோட்டை மன்னரிம் தஞ்சம் அடைந்த கட்டபொம்மன், நமது துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு 16.10.1799ல் ஆங்கிலேயர்களின் சதியால் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டாா்.
வீரத்தின் ஆணிவோ் அஞ்சாநெஞ்சன் நம்மை விட்டு மறைந்தாா். அவரது புகழ் நாடகமாகவும் நாட்டுப்புறப்பாடலாகவும் சினிமாவாகவும் உலகெங்கிலும் பரப்பப்பட்டதே வரலாறு கூறும் உண்மை!