"ஆயிரம் புத்தகங்கள் கொண்ட நூலகத்துக்குச் சமம் தாத்தா, பாட்டி உள்ள வீடு" என்று சொல்வார்கள். 60ல் அடியெடுத்து வைப்பதை ஒருவகையில் முதுமையில் இளமை என்றே சொல்லலாம். அப்படி என்றால் 80ல் அடி எடுத்து வைப்பதை என்னவென்று சொல்வது? பிறந்த குழந்தையைப் பார்த்து பார்த்து வளர்ப்போம் அல்லவா… அதேபோல்தான் எண்பதுகளில் இருக்கும் பெரியோர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும். எப்படி? இதோ சில பகிர்வுகள்...
* எலும்பு வலிமை இழத்தல் என்கிற ஆஸ்டியோ போரோசிஸ் இருக்கும். அதனால் குறைந்தது 20 நிமிடமாவது மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ள செய்யவேண்டும். (அவர்களின் கைகளைப் பிடித்து அல்லது வாக்கிங் ஸ்டிக் உதவியுடன்)
* ஒரு பத்து நிமிடம் தோட்டத்திலோ, பால்கனியிலோ நாற்காலி போட்டு சூரிய ஒளியில் அமரச் செய்ய வேண்டும்.
* அவர்கள் உணவில் சிறு சிறு மாற்றங்களாக சிறுதானியங்களில் செய்த கஞ்சி, ஆவியில் வேகவைத்த உணவு, தினமும் கீரை கறிவேப்பிலை பொடி சூடான சாதத்தில் பிசைந்து ஒரு கவளம்... இதையெல்லாம் செய்ய வேண்டும். (முறுக்கைக்கூட மிக்ஸியில் பொடி செய்து ஸ்பூன் வைத்து கொடுக்கலாம்)
* எல்லாவற்றையும்விட முக்கியமானது வேலைகளை எல்லாம் முடித்தபிறகு அவர்களிடம் சென்று அன்றைய சமையல், நாளிதழில் வந்த செய்திகளைப் பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு வேலைகளைத் தொடரலாம்.
* அதேபோல் மாலை தேநீர் அருந்தும் நேரத்திலும் குடும்ப நிகழ்வுகளைப் பற்றிப்பேசலாம்… இதுவரை அலுவலகம், வீட்டு வேலை என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள், சற்றே உடல் பலவீனமாகி விட, ‘யாருக்கும் பலன் இல்லாமல் இப்படி படுக்கையில் கிடைக்கிறோமே’ என்ற சுய இரக்கம் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கும். அதை கவனமாகப் போக்க வேண்டியது நம் கடமை.
* அவர்களிடம், “நீங்கள் 25 வருடங்களுக்கு முன்னால் செய்ததை நாங்கள் இப்போது செய்கிறோம் வட்டியும் முதலுமாக…” என்று அன்பாக பேசினாலே அவர்கள் மனம் குளிரும்.
* எல்லாவற்றிற்கும் பிள்ளைகளைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என அவர்கள் ஒருபோதும் எண்ணி விடக்கூடாது.
* அவர்களின் பிறந்தநாள், திருமண நாள் பரிசாக ஃபேமிலி ரியூனியனை ஏற்படுத்துங்கள்... உறவுகள், நட்புகளை அழையுங்கள். மனம் விட்டு அவர்கள் உரையாடும்போது... அவர்களின் இளமை காலத்திற்கே அவர்கள் சென்று விடுவார்கள். கடந்த காலத்தை அசைபோடுவது மன மகிழ்வைத் தரும்... இதைவிட வேறு என்ன பரிசு இருக்க முடியும் அவர்களுக்கு! ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் இந்த ஃபேமிலி ரியூனியன் நமக்கும் தேவை.
* அவர்கள் உபயோகம் இல்லாது போய்விடவில்லை. அலுவலகம், குடும்ப பொறுப்பு, பிள்ளைகளின் வளர்ப்பு இப்படி தொல்லைகளில் இருந்து விடுபட்டு சற்றே நிம்மதியான சூழ்நிலையில் ஓய்வெடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள் என்பதை அவர்களை உணரச் செய்யுங்கள்.
* பேரன், பேத்திகள் எல்லோரும் மனம் நோகாதபடி பேசும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
* பழைய காலத்தை அசைபோடும்போது தெரிந்த கதைதான் என்றாலும் உட்கார்ந்து பொறுமையாகக் கேளுங்கள்...
* இத்தனை வருடங்களாக வேலைக்கு போய்க்கொண்டு பிள்ளைகளையும் கவனித்த அவர்களுக்கு திடீரென தள்ளாமை வந்து விடாது. எனவே, சின்ன சின்ன காரியங்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள். பெரியோர்கள் குடும்பத்திற்கு மிகவும் அவசியம். வயது முதிர்வை மட்டுமல்ல வாழ்க்கையின் உதிர்வையும் கண்டவர்கள் அவர்கள். பெரியவர்களாக இருந்து நம்மை வழிநடத்த அவர்கள் நிச்சயம் வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
அவர்களுக்கு இதமான ஒரு சூழலை உருவாக்குங்கள். அன்பைப் பரிமாறுங்கள். அது ஒன்றுபோதும் அவர்களை நூறு வயது வரை வாழ வைக்கும். அவர்களின் ஆசீர்வாதத்தால் உங்கள் குலம் தழைக்கும்.. அன்பான மூத்த குடிமக்கள் தின நல்வாழ்த்துகள்.