
குடி பட்வா மராத்தியர்களின் புத்தாண்டு நாளாகும். வெற்றிக் கம்பம் அல்லது வெற்றிக்கொடி, "குடி" (GUDI) எனப்படும். பட்வா (பத்வா) என்ற சொல் சம்ஸ்கிருதத்தின் பிரதிபாத் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. பிரதிபாத் என்பது, நிலவு ஆண்டின் முதல் நாள். "குடி பட்வா" தினம், யுகாதியெனப்படும் கன்னட மற்றும் தெலுங்கு வருடப்புத்தாண்டும் ஆகும். மேலும், சிந்திகளால் சேதிசந்த், காஷ்மீரி பண்டிதர்களால் நவ்ரே என்றும் குடிபாட்வா அழைக்கப்படுகிறது.
மராத்தியர்களின் வழக்கப்படி, குடி பட்வா நாளில் இராமர் இராவணனைக்கொன்று சீதையுடன் அயோத்தி திரும்பினார். அயோத்தி மக்கள் இராமனின் வரவை "குடி" (வெற்றி கம்பம்) நட்டுக் கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஆனால், வட இந்தியாவில் இந்நிகழ்ச்சி, தீபாவளியன்று நடைபெற்றதாகக் கூறுவர்.
குடி பட்வா நாளில், மக்கள் புதுத்துணிகள், நகைகள் வாங்குவர். புதிய செயல்களைத் தொடங்க நன்னாளாக குடி பட்வா உள்ளது. குடி பட்வா தினம் குழந்தைகள் சரசுவதிக்குப் பூஜை செய்வர். குடி பட்வா அன்றுதான், பிரம்ம தேவன் உலகைப் படைத்ததாக நம்புகின்றனர். பூரண் போளி, பூந்தி பாக் போன்ற சிறப்பு இனிப்புகள் குடி பட்வா அன்று செய்யப்படுகின்றன.
மேலும், அன்றைய தினம், கசப்பான வேம்பு இலைகள், வேப்பம் பூக்கள், இனிப்பு வெல்லம் ( குர், குல் ) ஆகியவைகளைக் கலந்து, புளி, உப்பு சேர்த்து பச்சடி செய்வது வழக்கம். இது வாழ்க்கையின் இனிப்பு மற்றும் கசப்பான அனுபவத்தை நினைவூட்டு வதற்காகவும், வேம்பு சார்ந்த கலவை ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்ற நம்பிக்கையாகவும் கருதி உண்ணப்படுகிறது.
குடி த்வஜா :
குடிக்கு (வெற்றிக் கம்பத்திற்கு) மேல் பூக்கள், மாம்பழம் மற்றும் வேப்பிலைகளால் மாலை அணிவிக்கப்பட்ட ஒரு நல்ல நிறப்புடவை, வேஷ்டி அல்லது பிற துணி உபயோகித்து கட்டப்படும். பின்னர், அதன் மீது வெள்ளி அல்லது செம்பு பாத்திரம் தலை கீழாக கவிழ்க்கப்பட்டு, சர்க்கரை படிக மாலை கொண்டு அலங்கரிக்கப்படும். மராத்தியர்களின் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த "குடிபாட்வா குடித்வஜா" பார்க்க மிகவும் அழகாக இருக்கும். மேலும், அவரவர் வீடுகளில் போடப்பட்டிருக்கும் வண்ணமயமான ரங்கோலிகள், காண்பதற்கு கண்கொள்ளா காட்சியாக திகழும்.
குடி பட்வா நாளில், கிராமப்புற சமூகங்கள் சிவபெருமானின் நடனத்தால் பிணைக்கப்பட்டு சிவன் கோயிலில் கூடுவதுண்டு. மகாராஷ்ட்ராவில், குடி பட்வா தினம், முகலாயர்களை சத்ரபதி சிவாஜி வென்றதன் நினைவாகவும் கொண்டாடப்படுகிறது.
மக்களின் ஒன்று கூடல், கோவிலுக்கு செல்லுதல், நடனம் ஆடுதல், மற்றும் பல்சுவை பண்டிகை உணவுகளென குடி பட்வா தினம் அமர்க்களப்படும்.