கின்னஸ் சாதனை படைத்த பெண் விஞ்ஞானி!

 சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி - பிரதமர் மோடி
சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி - பிரதமர் மோடி
Published on

பேட்டி; சாருலதா.

பெண்கள் வெற்றி பெறாத துறையே இல்லை என்பது இன்றைய நவீன கால அளவில் இருந்தாலும் 80-களில் ஒரு பெண் விஞ்ஞானியாக மற்றும் பாடகியாக ஆகுவதற்கு முயற்சி செய்வது மிகவும் அதிசயமான, மேன்மை வாய்ந்த விஷயம்.

ஏனெனில் விஞ்ஞானிகள் வாழ்க்கை நேர வரையறை செய்ய முடியாத ஒரு துறை என்று கூறலாம். அத்துறையிலும் வெற்றியோடு முன்னேறியதுடன், தனக்குப் பிடித்த கர்நாடக சங்கீதத்துறையிலும் விடாமல் பயிற்சி செய்து தற்போது கச்சேரிகள் செய்து கொண்டு இருக்கும் ஒரு விஞ்ஞானி திருமதி சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் கல்கி ஆன்லைனுக்காக பேசினோம்..

பெங்களூரில் வசிக்கும் விஞ்ஞானி திருமதி சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, இஸ்ரோவில் பல நிலைகளில் பணி புரிந்து - இறுதியில் டெபுடி  டைரக்டர் நிலையை அடைந்தவர். தனக்கு பணியில் ஏற்பட்ட நிறைவின் காரணமாக ஒரு வருடம் பணித்தகுதி இருந்தும் விருப்ப ஓய்வு பெற்றவர்.

 சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

கேரளாவில் திருவனந்தபுரத்தில் பிறந்து அரசினர் பள்ளியில் ஆங்கில வழி கல்வி கற்றவர்.பிராமண குடும்பங்களில் வழக்கம் போல ஐந்தரை வயதில் பாட்டு வகுப்பில் சேர்க்கப்பட்டார். மேற்கொண்டு அவருடன் பேசியதை இங்கு பார்ப்போம்.

கே: உங்கள் இளம் வயது வாழ்க்கை பற்றி?

ப: கேரளாவில் தாத்தா பாட்டி மற்றும் பெற்றோருடன் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். படிப்பது எனக்கு மிக்க பிடித்திருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை மலையாள வழி கல்வி படித்த நான் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழி கல்விக்கு மாறினேன். ஆங்கிலத்தில் படிப்பது மிகவும் பிடித்திருந்தது. வகுப்பில் முதலாம் இடம் பெறுவது எப்போதும் என் குறிக்கோளாக இருந்தது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நானே பள்ளியில்  முதல் இடம் பெற்றேன். அதற்கான சிறப்புப் பரிசும் பெற்றேன். கோல்டு மெடல் வாங்குவதே என் எண்ணத்தில் நிறைந்திருந்தது.

கே: நீங்கள் வேலைக்கு சேர்ந்தது குறித்து சொல்லுங்கள்?

ப: இன்று அயல் நாடுகளில் வேலைக்கு, மேற்படிப்பிறகு செல்வது சகஜமாகி விட்டது. ஆனால் 80-களில் அந்த வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனக்கு கேரளாவில் எலெக்ட்ரானிக் துறையில் வேலை பெற கெல்ட்ரான் மற்றும் இஸ்ரோ என்ற இரு நிறுவன வாய்ப்புகளே இருந்தன. நான் படிப்பு முடிக்கும் சமயம் சரியாக கெல்ட்ரானில் வேலைக்கு ஆள் எடுத்தார்கள். நான் அங்கே கடைசி வருடப் படிப்பில் முதலில் கெல்ட்ரானில் பிராஜெக்ட் செய்தேன்.அந்த சூழல் மிகவும் பிடித்தது. அப்போது இஸ்ரோவில் மனு அனுப்பியிருந்தேன். மூன்று முறை இண்டர்வியூ செய்தேன். அங்கு வேலையும் உறுதியானது. அப்போதெல்லாம் எல்லா வகையான வேலைகளையும் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது.

 சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

குறிப்பாக 1980-களில் பெண்கள் இத்துறையில் மிகவும் குறைவு.ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் அனுப்ப ஏற்பாடு செய்ய அங்கே தங்குவோம்.போன் வசதி கூட சரியாக இருக்காது. வீட்டிற்கு அலுவலகம் மூலமே எங்கள் பயணம் மற்றும் சுகம் பற்றி தெரிவிக்கவேண்டும்.ஆனால் பாதுகாக்கப்பட்ட பகுதி, மற்றும்  நாட்டிற்காக வேலை செய்வது என பல பெருமைக்குரிய விஷயங்களை எண்ணி அனைத்திலும் மிகவும் ஈடுபாட்டோடு வேலை செய்வோம்.35-க்கும் மேற்பட்ட சாட்டிலைட் வேலைகளில் நான் ஈடுபட்டுள்ளேன்.

கே: சாட்டிலைட்டில் வித்தியாசங்கள் இருக்குமா?

ப: ஆம். கம்யூனிகேஷன் சாட்டிலைட் தகவல் தொடர்பு விஷயங்களுக்கு. ரிமோட் சென்சிங் என்றால் பூமியை சுற்றுப் பாதையிலிருந்து படம் எடுப்பது. சயின்ஸ் மிஷன்,சயின்டிபிக் ஸ்டடிஸ்,காஸ்மிக் ஸ்டடிஸ் என ஒவ்வொரு சாட்டிலைட்டிற்கும் அதன் பயன், உபயோகம் வேறுவேறாக இருக்கும்.அதற்குத் தகுந்தவாறு பொருட்கள் , வேலை என மாறுபட்டதாக இருக்கும். அதை முழு வேலையும் பொறுப்புடன், நாம் ஒரு பிரம்மா போல் அனைத்து விஷயங்களில் பொறுப்பேற்று ,எந்த பிரச்னை ஏற்படினும் தீர்ப்பவர்களாக இருப்பதால் விடுமுறை எடுக்கவே நமக்கே மனம் ஒப்பாது.

 ஏனெனில் விண்ணில் (வெற்றிடமாக இருப்பதால்) ஒன்றுமில்லாததால் வெப்பம், குளிர் என்று எல்லாமே அதிகபட்சமாக இருக்கும் ஆதலால் நாம் அனுப்பும் மிஷின் எந்த சீதோஷணத்திற்கும் பொருந்துவதாக, வேலை செய்வதாக இருக்க வேண்டும். பூமிக்குள் என்றால் நாம் ரிப்பேர் செய்யமுடியும் ஆனால் விண்ணில் யார் போய் செய்வது? எவ்வளவு வருடங்கள் பூமியை சுற்றுகிறதோ அதுவரை எந்த சூழ்நிலையிலும், எந்த பாதிப்புமின்றி நல்ல முறையில் வேலை செய்வது மிகவும் அவசியம் .ஆகவே சோதனைகள் வெவ்வேறு முறைகளில், பல முறை செய்து கொண்டே இருப்போம். சூரியனிடமிருந்து சாட்டிலைட் சக்தி எடுத்துக் கொள்ளும் என்பதால் அது சூரியனிடமிருந்து விலகி தூரத்தில் இருக்கும்போது சக்தி போதிய அளவு கிடைக்காது.அப்போது பேட்டரியில் வேலை செய்வது போல அமைக்க தயார் செய்ய வேண்டும். இப்படி தகுதி வாய்ந்ததாக ஆனவுடன் சாட்டிலைடில் பொருத்துவோம். நிறைய பரிசோதனைகளில் நாம் வேலை செய்த மிஷின் சரியாக இருக்கிறதா என பரிசோதித்துக்கொண்டே இருப்போம்.

பல கோடிகள் செலவு செய்து எட்டு பத்து வருடங்கள் வேலை செய்ய வேண்டிய சாட்டிலைட் என்பதால் அங்கு வேலை செய்த நாங்கள் பகல் இரவு பாராமல் கண்காணிப்போம். அங்கு 24/7 வேறு வேறு விஷயங்களில் வேலை நடந்துகொண்டே இருக்கும்.

கே: அன்றைய,இன்றைய வேலை வித்தியாசங்கள் பற்றி கூற முடியுமா?

ப: அன்று ஒரு வேலை ஒரு வருடத்தில் இருக்கும். இப்போது ஒரே நேரத்தில் ஐந்தாறு சாட்டிலைகள் ஒரு வருடத்தில் விடப்படுகின்றன.பல வகையான விஷயங்களை செய்ய வேண்டி இருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் இத்துறை விஞ்ஞானிகள் நாங்கள் செயல்படுவோம்.9 மணிக்கு ராக்கெட் புறப்பாடு எனில் காலை நான்கு மணி முதலே வேலையைத் தொடங்குவோம். நம்மால் தயார் செய்யப்படும் சாட்டிலைட் நம் குழந்தை மாதிரி! அது விண்ணில் போய் எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாமல் சமர்த்தாய் வேலை செய்யும்போது ஏற்படும் சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

கே: எப்போதும் ஒரே மாதிரியான வேலைகள்தான் இருக்குமா?

ப: இல்லை. இந்த வருடம் செய்வதை அடுத்த வருடம் செய்ய மட்டோம். புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். சில சமயம் பழைய மிஷின் உபயோகிக்க வேண்டியிருப்பின் அதன் தொழில்நுட்ப விஷயங்களில் மேலும் மேலும் புதியதை புகுத்துவோம்

 சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி

கே: நீங்கள் சந்தித்த பிரபலங்கள் குறித்து சொல்ல முடியுமா?

ப: நிச்சயமாக.. கடந்த 2000-ம் ஆண்டு திரு அப்துல் கலாம் அவர்களை சந்தித்தது மறக்க முடியாது. அப்போது  இஸ்ரோவில் எல்லா விதத்திலும் சிறப்புத் தகுதி பெற்ற இளம் விஞ்ஞானிகள் 50 பேர் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர். ஒவ்வொரு விஞ்ஞானிகளின் ஆலோசனை பெற்று எந்தெந்த விதங்களில் பயிற்சி தருவது என முடிவு செய்து,  அனுபவம் பெற்ற கம்பெனிகளின் சிறப்பு பெற்ற உயர் பதவியிலிருப்பவர்கள் வந்து பயிற்சி தருவது என 10 நாட்கள் ஏற்பாடாகி இருந்தது.வருங்கால இஸ்ரோவின் தலைவர்கள் ஆகும் அளவிற்கு அந்த பயிற்சி நடைபெற்றது. அதன் பிறகு திரு கலாம் அவர்களை(விஞ்ஞானியாக இருந்த போது) வைத்து ஊக்கம் அளித்தனர். என்னையும் சேர்த்து இரு பெண்களே இருந்ததால் அவர் எங்களை மிகவும் பெருமிதத்துடன் பார்த்து எங்கள் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடை தந்தார்.அந்த நாட்களில் புகைப்படம் எடுப்பதெல்லாம் அதிகம் பழக்கத்தில் இல்லாததால் அவருடன் புகைப்படம் இல்லை

அடுத்து நம் பாரத பிரதமர் மோடியுடன் சந்திப்பு.இஸ்ரோவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு 2013-ம் ஆண்டு நவம்பரில் அனுப்பப்பட்டு 2014 ம்ஆண்டு செப்டம்பர் 24-ம்தேதி செவ்வாயை சுற்றி சுற்றி வருவது போல் மங்கள்யான் என்ற சாட்டிலைட் அனுப்பப்பட்டது. அதை இந்தியாவில் 10 மாதங்களில் தயாரித்தோம். செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் வரும்போது அதை அடைவதன் மூலம் பெரும் பொருட்செலவு, எரிபொருள் செலவு குறைவாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டதால் மிகவும் கவனம் செலுத்தி விரைந்து தயாரிக்கப்பட்டது.அது சரியாக செவ்வாயுடன் சேரும் நேரம்,  நம் பிரதமர் மோடி அவர்கள் முன்னிலையில் நிகழும் விதம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்று முழுவதும் அத்தனை பரபரப்பு அனைவரிடமும் இருந்தது.. ஒன்றுக்கு மாற்றாக இன்னொரு செயல்வகை என எல்லாம் முடிவு செய்து ஒரு தனி பிரம்மாண்டமான அறையில் இருந்து கொண்டு அந்த சாட்டிலைட் கண்காணிப்பு நொடிக்கு நொடி நிகழ்ந்து கொண்டிருந்தது. அச்சமயம் அந்த அதிமுக்கியமான அறைக்குள் பிரதமர் வர இருந்ததால் ஏற்கெனவே மிகவும் பாதுகாப்புடன் கூடிய அவ்விடம் மேலும் பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பரபரத்தது.யார் யார் அந்த சாட்டிலைட்டுடன் தொடர்புடையவர்களோ அவர்கள் தங்களது அனுமதிசீட்டுடன் மட்டுமே அங்கே நுழைய முடியும். தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை மற்றும் தொழில்நுட்பஆராய்ச்சி அறை இரண்டும் அந்த முக்கிய விஞ்ஞானிகள் உள்ளே செல்ல அனுமதி. செல்பேசி அனுமதி கிடையாது. அதே ஆராய்ச்சியில் வேறுவகை உதவிகள் புரிந்தவர்கள்கூட அனுமதிக்கப் படவில்லை. அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு டிவி மூலம் நேரலையில் பார்க்க மட்டுமே முடியும். இந்த அமைப்பில் உள்ளிருந்து பங்கு பெற்ற விஞ்ஞானிகளில் நானும் ஒருத்தி

பிரதமர் 9 மணிக்கு வருகிறார் எனில் பாதுகாப்பு கருதி முந்தைய நாள் அனுமதி சீட்டு கொடுத்து காலை 4 மணிக்கு வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டோம். மெஷின் சரியாக வேலை செய்கிறதா, கம்பியூட்டர் சரியாக செயல் படுகிறதா என ஆய்வு செய்து பகலும் இரவும் வேலை செய்த விஞ்ஞானிகள், அன்று மிகவும் வித்தியாசமான சந்தோஷமான மன நிலையில் இருந்தோம். சாட்டிலைட் செவ்வாயை சேர்ந்ததா என சரியாக தெரியும் நேரம் - சூரியனுக்கும் சாட்டிலைட்டிற்கும் இடையே செவ்வாய் வந்ததால் நம்மால் சரியாக தெரியவில்லை. ஒரு பதற்றம் சூழ்ந்த நேரம், சிறிது சிறிதாக ஆஸ்திரேலியாவில் நம் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறையில் இருந்தவருக்கு முதல் அறிகுறி செவ்வாய் சுற்றுப்பாதையில் சாட்டிலைட் அடைந்தது என தெரிந்தது. அவருக்கு இடப்பட்ட ஆணையின்படி தொலைபேசி மூலம் இஸ்ரோ சேர்மேனுக்கு முதல் தகவல் தெரிவிக்கும்படி சொல்லப் பட்டது. அதன்படி அவர் மூலம் விஷயம் தெரிந்து கொண்டு பிரதமருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவிக்க - மிகுந்த கரவொலியுடன் கூடிய மகிழ்ச்சி அலை பரவியது. நடனம் ஆடாதகுறை ,அப்படி ஒரு மகிழ்ச்சி அனைத்து விஞ்ஞானிகள் மனதிலும் நிரம்பியது.(MARS ORBITARY MISSION )- (MAM) என்று பெயரிட்டதிலேயே இது நிச்சயம் வெற்றி அடையும் என பிரதமர் கூறி மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

இந்த பெரிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அனைத்து விஞ்ஞானிகள்,எந்த பதவியிலிருப்பவர்கள் என பார்க்காமல் ( நூற்றுக்கும் மேற்பட்ட) அருகிலும் சென்று அறிமுகம் பெற்று கை கொடுத்தார். என் முறை வந்தபோது, முதலில் கரம் குவித்து வணங்கிய எனக்கும் கை கொடுத்தார். மனம் மிகவும் பெருமிதம் கொண்ட நேரம் அது. குடும்பத்தார்,நண்பர்கள் என அனைவருக்கும் இடையில் இந்த வெற்றி பெற்ற விஞ்ஞானிகள் உழைப்பு பாராட்டு பெற்றது. அன்று முழுவதும் ஒரு மிதக்கும் மன நிலையில் இருந்தோம். அதன்பின் எங்களுக்கு அடுத்து அதை கண்காணிப்பு செய்பவர்கள் பொறுப்பை ஏற்ற பின் நாங்கள் பெருமிதத்துடன் வெளியில் வந்தோம். இது என் வாழ்வில் ஒரு மிகவும் முக்கியமான தருணமாக பகிந்து கொள்கிறேன்.

கே: அருமை அம்மா! இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

ப: நிறைய பாடிக்கொண்டு இருக்கிறேன். கச்சேரிகள் செய்ய அதிகம் வாய்ப்புகள் வருகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை பயன்படுத்துகிறேன். சமீபத்தில் கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்க்காக 288 பேர் திருவனந்தபுரம் எஞ்சினியரிங் அலுமினி அசோசியேசன் மூலம் நடைபெற்றதில் தொடராக பாடியதில் நானும் பங்கு பெற்று சான்றிதழ் பெற்றேன். 

கே: வேறு ஏதும் பொழுது போக்கு அல்லது கலையார்வம் உண்டா? 

ப: ஆமாம். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் ஆர்வம் உண்டு. நவராத்திரி காலங்களில் முத்தாலாரத்தி என ஒரு கோலம் போட்டு ஆரத்திக்கு உபயோகிக்கும் வழக்கம் உண்டு. அதை நான் செய்வேன். அம்பாளுக்கு அலங்காரம் செய்ய ஒட்டியாணம் செய்து கொடுப்பதும் உண்டு.

-உற்சாகமாக சொல்லி முடித்தார், திருமதி சுப்புலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி..

‘’உண்மையில் உங்கள் திறைமைகளைப் பார்த்து வியப்பாக உள்ளது. உங்கள் வாழ்க்கையில் மேலும் பெருமைகள் பெற வாழ்த்துக்கள்’’ என்று கூறி விடை பெற்றேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com