
உலகில் எத்தனையோ தொழில்கள் உண்டு. அவை அத்தனையும் மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளைச் செய்து வருகின்றன. அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும், ஒவ்வொரு குறிப்பிட்ட வரையறை செய்யப்பட்ட துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு மக்களைச் சென்றடைகிறது. அதில் பல்வேறு சாதனைகள், வேதனைகளை பட்டியலிடப்பட்டாலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அனைவராலும் பாராட்டப்படவேண்டிய துறை என்றால் அது மருத்துவத் துறையாகும். அந்தத் துறையின் சேவைகளைப் பட்டியலிட முடியாது.
பொதுவாக, ஒருசிலர் செய்யும் தவறுகளுக்காக அனைவரையும் குறை சொல்வது தவறாகும். இந்நிலையில், அதிகம் படித்த மருத்துவர்களை விட, அங்கே பணிபுாியும் மருந்தாளுநர்களின் பங்குதான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அது மிகையல்ல. அதேநேரம் சகிப்புத்தன்மை, பொறுப்பு, காருண்யம், மனிதநேயம், இரக்கம், விவேகம் இவற்றைத் தன்னகத்தே கொண்டு அல்லும்பகலும் அயராது உழைப்பவர்களே மருந்தாளுநர்களாவர்.
அவர்களின் சுயநலமில்லாத பணிகளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச மருந்தாளுநர்கள் தினமானது (World Pharmacists Day) ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 25ம் நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினம் 2009ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளின் நோக்கமே உலகெங்கிலும் உள்ள மருந்தாளுநர்களின் முக்கியப் பங்கை அங்கீகரிப்பதே ஆகும். 1912ல் நிறுவப்பட்ட சர்வதேச மருந்து கூட்டமைப்பை (F I P) நினைவுகூறும் விதமாகவும் இந்த தினமானது கொண்டாடப்படுகிறது.
மருந்தாளுநர்களின் சமூக சேவையை மதிப்பிடவே முடியாது! அவர்கள் நோயாளிகளின் நோய் அறிந்து, அவர்களின் குணம் தொிந்து, அன்பு, பாசம், அரவணைப்பு காட்டி நோயாளிகளின் நலன் காக்கப் பாடுபடுகிறாா்கள். மருந்தாளுநர்களின் பணியை நாம் அனைவரும் பெருந்தன்மையோடு பாராட்ட வேண்டும். அதிலும் மருத்துவர்கள் பணியை விட இவர்களின் அளப்பறிய பணியை அளவிடவே முடியாது. அந்த அளவிற்கு தியாக உள்ளம் கொண்டவர்களை நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாவிட்டாலும் அவர்களை துச்சமென நினைக்காதீா்கள். தன் நலன், சுக துக்கம் பாராமல், நோயாளிகளிடம் அன்பு செலுத்தி பணிவிடை செய்யும் அவர்களை விரோதிகளாகப் பாா்க்காதீா்கள்.
மேற்படி தினமானது சுகாதாரத் துறையில் மருந்தாளுநர்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தும் விதமாகக் கொண்டாடப்படுகிறது. அவர்களின் சமுதாய பொறுப்புகளை அங்கீகரிக்கவும், அவர்களின் நிபுணத்துவத்தை கெளரவப்படுத்தும் விதமாகவும், சம்பந்தப்பட்ட நாள் அவர்களை மதிப்பீடு செய்து உரிய மரியாதையைத் தரத்தக்க வகையில் கொண்டாடப்படுகிறது.
கோவிட் சமயத்தில் தனது உயிரையும் பணயம் வைத்து, இரவு பகல் பாராமல், பசி மறந்து, தூக்கம் தொலைத்து, சொந்த பந்தங்களை மறந்து, பல லட்சக்கணக்கான மக்களின் உயிருக்காகப் போராடி, அதோடு நோயை விரட்டும் பணியில் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட மருந்தாளுநர்களை இந்த தினம் மட்டுமல்லாது, அனுதினமும் மரியாதை செலுத்துவோம். அவர்களின் புனிதமான சேவையை மனதாரப் பாராட்டுவோம்.