
மருந்துப் பொருட்கள் பல்வேறு வேதிப்பொருட்களின் கலவைதான். இக்கலவைகள் வெளிச்சம் மற்றும் வெப்பம் ஆகியவற்றால் எளிதாக பாதிக்கப்பட்டு விடும். அதிலும் குறிப்பாக புற ஊதாக் கதிர்கள் இவற்றை பெருமளவில் பாதிக்கும். மருந்து, மாத்திரைகளை சூரிய ஒளி படுமாறு வைக்கும்போது அதன் வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர்கள் மருந்து கலவையில் பட்டு வேதியியல் வினை புரிந்து புதிய பொருட்களை உருவாக்கும். அதன் காரணமாக இயற்கையான மருந்தின் குணம் மாறி வீரியம் குறைந்து விடும். சில நேரங்களில் அது எதிர்வினையாற்றுவதும் நிகழ வாய்ப்புண்டு.
இந்த மாதிரியான நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு மருந்து பாட்டில்கள் பெரும்பாலும் அடர்த்தியான கரும் பழுப்பு நிறத்தில் பயன்படுத்தப்படுகிறது. அதுவே புற ஊதாக் கதிர்களை பாட்டிலில் உள்ளே செல்வதைத் தடுக்க உதவும். மேலும், அவற்றை இருளான இடத்தில் வைக்கும்போது அதில் புற ஊதாக் கதிர்கள் வினைபுரிவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும், அவை குளிர்ந்த இடத்தில் இருக்கும்போது வெப்பம் காரணமாகவும் பாதிப்பு ஏற்படாது.
வைட்டமின் மாத்திரைகளை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்தான் அவை உடலில் உடனே சேரும். தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின் 'சி ' மற்றும்' பி' உடலில் 6 மணி நேரம் வரை மட்டுமே தங்கும். எனவே, பாதி மாத்திரைகளை காலை உணவின்போதும், மீதி பாதியை மதிய உணவின் போதும் சாப்பிட வேண்டும். வைட்டமின் 'பி' மாத்திரைகளை இரவு நேரங்களில் தூங்கச் செல்லும் முன்பு சாப்பிடக் கூடாது. கொழுப்புடன் சேரும் வைட்டமின் 'ஏ, டி' மற்றும் 'இ' ஆகியவை மதிய உணவில் சேர்த்து சாப்பிடலாம். கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை இரவு படுக்க செல்லும் நேரத்தில் சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் காபி, டீ அல்லது பால் சாப்பிட்டு விட்டு மாத்திரைகளை சாப்பிடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. இப்படி செய்வது தவறு. மீறி செய்தால், தேவையில்லாத உடல் நலப் பிரச்னைக்கு வழிவகுக்கும். தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் உள்ளன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்தப் பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகி விடலாம்.
சில நேரங்களில் நோயாளிகளுக்கு நோயின் தீவிரம் கருதி ஒரே நேரத்தில் பல்வேறு வகையான ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், அது ஆபத்தானது. நல்ல உடலையும் அது பாதிக்கும். குறிப்பாக, குடலில் இருக்கும் நல்லது செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் என்கிறார்கள் இங்கிலாந்து மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
அடிக்கடி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் சாப்பிடுவது உடலில் உள்ள ‘பி காம்ப்ளக்ஸ்’ அளவை குறைக்கிறது. அதனை தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு போதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது என்கிறார்கள்.
ஆன்டிபயாட்டிக் மருந்துகளை சாப்பிடும்போது பாலையும், பால் சார்ந்த பொருள்கள் மற்றும் இறைச்சி உணவுகளை தவிர்க்கவும். இந்த உணவுகள் மருந்துகளின் வேகத்தை குறைக்கும் என்கிறார்கள். வயிற்றுப் போக்கிற்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது அதனை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வேறு எந்த மருத்துகளும் சாப்பிடக் கூடாது. அது வயிற்றுப் போக்கை மோசமாக்கிவிடும். ஒவ்வாமைக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. குறிப்பாக, இறைச்சி, பசலைக்கீரை, முட்டை, வாழைப்பழம், ஸ்ட்ராபெரி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது கால்சியம் நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேபோல வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும்போது இலைக் காய்கறிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அது மருந்தின் வேகத்தை குறைக்கும். ஒருபோதும் நீங்கள் சாப்பிடும் உணவுடன் மருந்து மற்றும் மாத்திரைகளை கலந்து சாப்பிடாதீர்கள். குறிப்பாக, வைட்டமின் மாத்திரைகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம். வைட்டமின் மாத்திரைகளை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
எலும்புகள் பலஹீனம் மற்றும் எலும்புகளின் வலி என்றால் மருத்துவர்கள் பரிந்துரைப்பது கால்சியம் மாத்திரைகளைதான். அதனை ஒரு நாளைக்கு 1400 மி.கி. மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் அதிகமாக எடுத்துக் கொண்டால் அது நாளடைவில் இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் அமெரிக்க ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தசை மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு மெக்னீசியம் சப்ளிமெண்ட்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 350 மி.கி. வரை மெக்னீசியம் பரிந்துரைக்கிறார்கள்.
அதிக நாட்கள் பயன்படுத்தி வரும் டி.பி. எதிர்ப்பு மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள், பாடி பில்டிங் புரோட்டீன் சப்ளிமெண்ட்கள் மற்றும் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் கல்லீரல் நோய்களை ஏற்படுத்தும் என்கிறார்கள். தொடர்ந்து 121 நாட்களுக்கு மேலாக ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு பார்கின்சன் நோய்க்கான ஆபத்து 29 சதவீதம் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.